tamilnadu

சென்னை விரைவு செய்திகள்

வேலூரில் 14 விழுக்காடு வாக்காளர்கள் நீக்கம்!

வேலூர், டிச.19 – வேலூர் மாவட்டத்தில் 1.1.2026  தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு சிறப்பு தீவிர திருத்தம் கடந்த  மாதம்  4 ஆம் தேதி தொடங்கப்பட்டது. கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் மீண்டும் திரும்ப பெறப்பட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் அனைத்து வாக்காளர்களின் கணக்கெடுப்பு படிவங்கள் பரிசீலனை செய்யப்பட்டது. இறுதிபடுத்திய பின்னர் தகுதியான வாக்காளர்கள் விவரங்கள் அடங்கிய வரைவு வாக்காளர் பட்டியலை வேலூர் மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெள்ளியன்று (டிச.19) வெளியிட்டார். வேலூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் வேலூர் 198722, காட்பாடி 215751, அணைக்கட்டு 227645, கீழ்வைத்தியணான்குப்பம் 2,07,382, குடியாத்தம் 2,38,505 என மொத்தம் ஆண் வாக்காளர்கள் 5,28,619,பெண் வாக்காளர்கள் 5,59,236 மூன்றாம் பாலினத்தவர் 150 என 10,88,005 வாக்காளர்கள் உள்ளதாகவும் தற்போது ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் இறந்தவர்கள் 48,305 எனவும் நிரந்தர குடிப்பெயர்வு 71,719 எனவும் கண்டறியப்பட்டுள்ளது. இருமுறை பதிவு 10,055 எனவும் கண்டறிய இயலாதவர்கள் 84,429 மற்றும் மற்றவை 517 என 2,15,025 நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரியான மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். ஏற்கெனவே மாவட்டத்தில் இருந்த 1314 வாக்குச்சாவடிகள் 1200 பேருக்கு ஒரு வாக்குசாவடி என மறுசீரமைப்பு செய்யப்பட்டு அதில் 113 வாக்குச்சாவடிகள் புதிதாக உருவாக்கப்பட்டு தற்போது 1427 வாக்குச்சாவடிகள் வரைவு வாக்காளர் பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளது. உணவகத்தில் பெண் காவலரின் மகன் ரகளை! வேலூர், டிச.19- வேலூர் பள்ளிகொண்டாவில் அமானி நகரைச் சேர்ந்த மனோஜ் (24) என்பவர் நண்பருடன் உணவகத்திற்கு வந்து நூடுல்ஸ் மற்றும் சிக்கன் ரைஸ் பார்சல் வாங்கினார். கூடுதலாக முட்டை சேர்க்க கேட்டபோது ஊழியர்கள் மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. உணவுக்கு பணம் கேட்டபோது, “என் அம்மா போலீஸ் எஸ்ஐ, என்னிடம் பணம் கேட்கிறாயா?” என்று தகாத வார்த்தைகளால் பேசிய மனோஜ், உணவக உரிமையாளர் பாபுவை சரமாரியாக தாக்கினார். போலீசார் வந்தபோது அவர்கள் முன்னிலையிலேயே மீண்டும் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குடிபோதையில் இருந்த மனோஜை போலீசார் அனுப்பிவைத்து, அவரது இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். சம்பவம் சிசிடிவியில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலானது. பாபு அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாமல்லபுரத்தில் நாட்டிய விழா பணிகள் தீவிரம்!  செங்கல்பட்டு, டிச,19- செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் இறுதியில் தொடங்கும் இந்திய நாட்டிய விழா, கடற்கரை கோயில் வளாகத்தில் நாள்தோறும் மாலையில் தொடங்கி இரவு வரையில் என ஒருமாதம் நடைபெறும். இதில், நம் நாட்டின் இதில், பல்வேறு மாநிலங்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான பரதநாட்டியம் மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகளான கரகாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், நாட்டுப்புற நடனங்கள் மற்றும் கதக்களி, குச்சுப்புடி, ஒடிசி, மோகினி ஆகிய நடனங்கள் உட்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்படும். இதனை, சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசிப்பது வழக்கம். இந்நிலையில், 2025-26ம் ஆண்டுக்கான நாட்டிய விழா மாமல்லபுரத்தில் ஞாயிறன்று (டிச.21) தொடங்கி, ஜனவரி 19ம் தேதி வரையில் நடைபெற உள்ளது. இதற்காக, கடற்கரை கோயில் வளாகத்தில் மேடை மற்றும் அலங்கார விளக்குகள் அமைக்கும் பணிகளை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தங்கம் சவரன் ரூ. 99,040க்கு விற்பனை

சென்னை, டிச.19- சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ. 60 குறைந்து, ரூ. 12,380க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, வியாழனன்று சவரனுக்கு ரூ. 400 அதிகரித்து ரூ. 99,200க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், வெள்ளியன்று ரூ. 480 குறைந்து ரூ.99,040க்கு விற்பனையாகி வருகிறது.  வெள்ளிவிலை கிராமுக்கு  ரூ. 3 குறைந்து ரூ.221க்கு விற்கப்படுகிறது. அதன்படி, கிலோவுக்கு ரூ. 3 ஆயிரம் குறைந்து ஒரு கிலோ ரூ. 2,21,000க்கு விற்பனையாகி வருகிறது.