tamilnadu

மாத இறுதிக்குள் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்.. அமைச்சர்....

திருப்பத்தூர்:
இம்மாதம் இறுதிக்குள் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண்கள் பட்டியல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு திருப்பத்தூர் ஒய்எம்சிஏ பாய்ஸ் டிவிஷன் தனியார் பள்ளி சார்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று 200 பேருக்கு மளிகைப் பொருள்கள், மருந்து தொகுப்பினை வழங்கினார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்,“கொரோனாவால் மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருவதால் கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாமல் தவிக்கின்றனர். இதனால் தனியார் பள்ளிகளில் 75 சதவீத கட்டணம் வசூலிக்க அரசு அறிவுறுத்தியது. அதிலும் 40 சதவீத கட்டணத்தை மட்டுமே தற்போது வசூலிக்க வேண்டும். மீதத் 
தொகையை பள்ளிகள் திறந்த பிறகு, 2 மாதங்கள் கழித்து வசூலிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது” என்றார்.அரசு உத்தரவை மீறி ஒரு சில தனியார் பள்ளிகள் 100 சதவீதக் கட்டணமும், சில பள்ளிகள் 75 சதவீதத்தை ஒரே நேரத்தில் கட்ட வேண்டும் எனவும் பெற்றோரை வற்புறுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சில இடங்களில் இருந்து புகாரும் வந்துள்ளன. அத்தகைய பள்ளிகள் குறித்து பொதுமக்கள் ஆதாரத்துடன் புகார் அளித்தால் சம்பந்தப்
பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பள்ளி மாணவர்களுக்கு கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம், கலை ஆகியவற்றை கற்றுத் தர அரசுப் பள்ளிகளில் சிறப்பு ஆசிரியர்களை நியமிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்றும் தற்போது 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப் பெண்கள் பதிவேற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. சிபிஎஸ்சி மாணவர்களுக்கான மதிப்பெண்கள் ஜூலை 31ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல, தமிழகத்திலும் இம்மாதம் இறுதிக்குள் 12 ஆம் மாணவர்களுக்கான மதிப்பெண்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மகேஷ் கூறினார்.