திருச்சி, ஜூன் 14 பள்ளிகளில் மாணவர்கள் செல் போன் பயன்படுத்தக்கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார். திருச்சி தெப்பக்குளம் பிஷப் `ஹீபர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ், “மாணவர்களுக்கு வகுப்பறையில் செல்போன்கள் கண்டிப்பாக அனுமதி கிடையாது. அப்படி மீறி எடுத்து வந்தால் கண்டிப்பாக அதனை பறிமுதல் செய்வோம். மீண்டும் அது கொடுக்கப்பட மாட்டாது. கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர்கள் அதிகமாக செல்போன்களை பயன்படுத்திய காரணத்தினால் நிறைய சிரமங்கள் ஏற்பட்டுள்ளது. ஆனால் தற்போது அதனை சரி செய்வதற்கு வகுப்பறைகளில் பாடம் எடுப்பதற்கு முன்பாக அவர்களுக்கு புத்துணர்வு அளிக்கப்பட்டு பின்னர் தான் வகுப்புகள் துவக்கப்படுகிறது” என்றார்.