tamilnadu

img

நூலகங்களை மேம்படுத்த நடவடிக்கை.... அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்....

திருச்சி:
தமிழகம் முழுவதும் நூலகங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் வாசகர் வட்டம் சார்பில் தேசிய நூலக தினம் நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தலைமை வகித்தார். மாவட்ட முதன்மைக் கல்வி அலு வலர் பாலமுரளி முன்னிலை வகித்தார். விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில்,  இந்திய நூலகத்தின் தந்தை என்று அழைக்கப்படும் எஸ்.ஆர்.ரங்கநாதனின் பிறந்தநாளான ஆக.12-ம் தேதியை நாம் தேசிய நூலக தினமாகக் கொண்டாடி வருகிறோம். நூலகத்தில் உள்ள புத்தகத்தில் பல்வேறு கூறுகளை துல்லியமாக கூறும் சங்கேத குறியீட்டு முறையை உருவாக்கி, புத்தகங்களை இனம் வாரியாக தொகுத்து பட்டியலிடும் முறையை தோற்றுவித்தவர். நூலகர் ஆராய்ச்சி வட்டம் ஏற்படுத் தியவர். மாட்டுவண்டியில் நூல்களை ஏற்றிச் சென்று நடமாடும் நூலகமாக பொதுமக்களுக்கு நூல்களை வழங்கியதுடன், இந்தியாவில் பொது நூலக சட்டம் 1948-ல் ஏற்பட பாடுபட்டவர்.

இன்று எவ்வளவு தான் தொழில்நுட்பங்கள் வளர்ந்திருந் தாலும் நூலகத்துக்குச் சென்று நமக்கு பிடித்தமான நூல்களை நம் கைகளால் எடுத்து படிக்கும்போது ஒரு நிம்மதி கிடைக்கிறது. ஒவ்வொரு மாணவரும் தான் படித்த பள்ளிப் பாடப்புத்தகங்களாக இருந்தால் கூட அவற்றை வைத்து எனது நூலகம் என்ற வகையில் வீட்டில் வைத்து, அவற்றை படிக்க வேண்டும். அது போட்டித் தேர்வுகளை எழுதும்போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.தமிழகத்தில் 4,600-க்கும் மேற்பட்ட நூலகங்கள் உள்ளன. நூலகங்களை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு செல்லவும், மேம்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.விழாவில், நூலகங்களுக்கு அதிக உறுப்பினர்களை சேர்த்த நூலகர்கள், நிதி வழங்கிய கொடை யாளர்கள், பெரும் புரவலர்கள் ஆகியோருக்கு கேடயங்கள் வழங்கி பாராட்டப்பட்டனர்.