திருவண்ணாமலை,நவ.23- மருத்துவம், மின்சாரம், குடியிருக்க வீடு உள்ளிட்ட மக்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட வளர்ச்சிக்கான கூட்டத்தில் ஆலோசனைகள் முன்மொழியப்பட்டது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், சனிக்கிழமையன்று, மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வை குழுக் கூட்டம், திருவண்ணாமலை தொகுதி மக்களவை உறுப்பினர் சி. என். அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது. உறுப்பினர் செயலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் க. சு. கந்தசாமி முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில், இணைத் தலைவார் மற்றும் ஆரணி தொகுதி மக்களவை உறுப்பினர் மரு. எம். கே. விஷ்ணுபிரசாத், சட்டமன்ற உறுப்பினர்கள் கு.பிச்சாண்டி (கீழ்பென்னாத்தூர்), மு. பெ. கிரி (செங்கம்), கே.வி.சேகரன் (போளுர்), மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பா. ஜெயசுதா, திட்ட இயக்குநர் மகளிர்த் திட்டம் சந்திரா, மாவட்ட ஆட்சியரின் நர்முக உதவியாளர் (பொது) சு. ஜானகி மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பேசியபோது, “மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் மண் எடுக்கப்பட்டு, வணிக நோக்குடன் பயன்படுத்தப்படுகிறது” என்றனர். பரமனந்தல்- அத்திப்பட்டு சாலை சீரமைப்பில் முறைகேடு நடந்துள்ளதை கண்காணிக்க வேண்டும், வந்தவாசி அரசு மருத்துவமனையை சீரமைக்க வேண்டும், மின்வாரிய அலுவலகத்தில் டிரான்ஸ்பார்மர், போதுமான அளவிற்கு இருப்பு வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து, ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் நடைபெறும் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.