tamilnadu

img

பத்தாம் வகுப்புத் தனிதேர்வர்களையும் தேர்ச்சி என அறிவிக்க வேண்டும்: மமக

சென்னை:
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவிண்ணப்பித்த தனித்தேர்வர்கள் அனைவரையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கவேண்டும் என்று  மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச் ஜவாஹிருல்லா கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு அறிக்கை:

கொரோனா நோய்த் தொற்று காரணமாக இந்த ஆண்டு நடைபெறவிருந்த பத்தாம் வகுப்புத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டுக் கடந்த 10.8.2020 அன்று தேர்ச்சி முடிவுகள் வெளியிடப்பட்டன.இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத 10,742 தனித் தேர்வர்கள் விண் ணப்பித்தனர். பொதுத் தேர்வு ரத்து செய்யப் படுவதாக அறிவிக்கப்பட்டபோது, தனித் தேர்வர்களின் நிலை குறித்து எதுவும் அறிவிக்கப்படவில்லை.தற்போது இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அரசு தேர்வுத் துறை அதிகாரிகள் ‘‘காலாண்டு, அரையாண்டுத் தேர்வு மதிப்பெண், வருகை பதிவு அடிப்படையிலேயே பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தனித் தேர்வர்களுக்குத் தேர்வு நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

கொரோனா நோய்த் தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையிலும், அதனால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாகவும் மாணவர்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் சென்று தேர்வு எழுதுவது இயலாத காரணமாகவும், இது கொரோனா நோய்த் தொற்றை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.கொரோனாவிற்கு பிறகு தேர்வுகளை நடத்தினால் பள்ளியில் படித்துத் தேர்வு பெற்றவர்கள் அனைவரும்  11ஆம் வகுப்புகளில் சேர்ந்து படிக்கத் தயாராக இருப்பார்கள்  இந்நிலையில் தனித் தேர்வர்கள் தேர்வு எழுதி வெற்றி பெற்றாலும், அவர்கள் 11ஆம் வகுப்புகளில் சேர முயலும்போது அவர்கள் விரும்பும் பாடப் பிரிவு கிடைக்காமல் சிரமப்பட வேண்டியிருக்கும்.எனவே, பத்தாம் வகுப்பு தனித் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள அனைவரும் தேர்ச்சி என அறிவித்து அவர்கள் மற்றவர்களைப் போல 11ஆம் வகுப்பில் சேர்ந்து பயில நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழக அரசை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.