தேசியம் என்று எதற்கெடுத்தாலும் முழங்குபவர்கள் அந்நிய முதலீட்டிற்குக் காட்டியுள்ள தாராளம் வெட்கக் கேடானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.
இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
இன்சூரன்ஸ் துறை தனியார் நிறுவனங்களில் அந்நிய முதலீட்டை 100 சதவீதமாக உயர்த்துவதென்று முடிவு செய்திருப்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
இந்திய இன்சூரன்ஸ் துறையைப் பன்னாட்டு மூலதனத்திற்கு முழுமையாகத் திறந்து விட வேண்டுமென்பது அமெரிக்காவின் நீண்ட கால நிர்ப்பந்தம் ஆகும். இதற்கு மோடி அரசு பணிந்திருப்பதன் வெளிப்பாடே அமைச்சரவையின் இந்த முடிவு. 1990-களில் "சுதேசி" பேசியவர்கள் இன்றும் "தேசியம்" என்று எதற்கெடுத்தாலும் முழங்குபவர்கள் அந்நிய முதலீட்டிற்குக் காட்டியுள்ள தாராளம் வெட்கக் கேடானது ஆகும்.
24 தனியார் ஆயுள் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் களத்தில் இருந்த போதும் மொத்த ஆயுள் இன்சூரன்ஸ் பிரீமியத்தில் அரசு நிறுவனமான எல்.ஐ.சி, பிரிமிய தொகையில் 65 சதவீத சந்தைப் பங்கை கொண்டு இருப்பது மக்கள் பொதுத்துறை மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு சாட்சியம் ஆகும். அதை விட முக்கியமானது பாலிசி எண்ணிக்கையில் 78 சதவீத சந்தைப் பங்கை வைத்திருப்பதாகும். எளிய, நடுத்தர மக்களிடம் இன்சூரன்ஸ் ஊடுருவலுக்கு எல்.ஐ.சி-தான் உதவி செய்கிறது; தனியார் நிறுவனங்கள் அல்ல என்பது தெளிவாகிறது.
ஆயுள் இன்சூரன்ஸ் என்பது நீண்ட கால முதலீடு ஆகும். ஆனால் 2000 க்கு பின்னர் உள்ளே வந்த அந்நிய இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பல இந்த 25 ஆண்டுகளிலேயே தொழிலை விட்டு வெளியே சென்று விட்டன. உலக நிதி நெருக்கடி ஏற்பட்ட போது பல அமெரிக்க, ஐரோப்பிய இன்சூரன்ஸ் நிறுவனங்கள் திவாலாயின என்பதும் அனுபவம். இன்று எல்.ஐ.சி பாலிசிதாரர் உரிமப் பட்டுவாடா விகிதம் 99 சதவிகிதமாக இருப்பது அதன் சீரிய சேவைக்குச் சாட்சியம். அதனை சீர்குலைக்கச் செய்யும் ஏற்பாட்டையே அரசு இந்நடவடிக்கை மூலம் எடுத்துள்ளது.
ஏற்கனவே 74 சதவீதம் அந்நிய முதலீடு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் அனுமதிக்கப்பட்டு இருந்தும் 24 தனியார் ஆயுள் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் 4 மட்டுமே 74 சதவீதத்தை வைத்துள்ளன என்பதும், மொத்த அந்நிய முதலீடு 30 சதவிகிதத்தை ஒட்டியே உள்ளன என்பதும் கருத்தில் கொள்ளத்தக்கது. ஆகவே 100 சதவீத அனுமதி தந்தாலும், தொழிலில் எந்த நிபந்தனையும் தங்களுக்கு விதிக்கப்படக் கூடாது என்று நிர்ப்பந்தம் தரப் போகிறார்கள் என்பதே உண்மை. ஆதாரத் தொழில் வளர்ச்சிக்கு உதவக் கூடியது உள்நாட்டு சேமிப்புகள்தான் என்பது காலத்தால் நிறுவப்பட்டுள்ளது. அப்பணியை எல்.ஐ.சி செவ்வனே செய்து வருகிறது. அந்நிய முதலீடு 100 சதவிகிதமானால் உள்நாட்டு சேமிப்புகளும், ஏழை, எளிய அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்களின் காப்பீடும் சமூகப் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும். நாட்டின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படும்.
தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்குக் குறைந்தபட்ச மூலதன வரம்புகள் தளர்த்தப்படும் என்றும் ஆட்சியாளர்கள் கூறுவது, புற்றீசல் போலத் தனியார்களை அனுமதித்து, மக்களின் சேமிப்பை கார்ப்பரேட்டுகளின் பலி பீடத்தில் ஏற்றுகிற செயலாகும்.
ஆகவே, இன்சூரன்ஸ் துறையில் அந்நிய முதலீட்டை உயர்த்துகிற முடிவை ஒன்றிய அரசு கைவிட்டு எல்.ஐ.சியையும், அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களையும் மேலும் வலுப்படுத்த வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கோருகிறது. அரசின் இம்முடிவுக்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளும் ஜனநாயக சக்திகளும் குரல் எழுப்ப வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
