உச்சநீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து, ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுத்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய 10 மசோதாக்கள் சட்டமாக அமலுக்கு வந்ததாக தமிழ்நாடு அரசுதழில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு நிறைவேற்றும் மசோதாக்களுக்கு அரசியல் உள்நோக்கத்தோடு ஒப்புதல் அளிக்காமலும் ஆளுநர் ஆர்.என்.ரவி, காலம் கடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த 2023ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு, ஆளுநரின் நடவடிக்கையை கண்டித்தும், சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில், நீதிபதிகள் ஜெ.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதியன்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அளித்தது.
அதில், ஆளுநருக்கு வீட்டோ அதிகாரம் கிடையாது, அரசியல் சாசனத்தின்படி ஆளுநர், மாநில அரசின் உதவி மற்றும் ஆலோசனைப்படி தான் செயல்பட வேண்டும் என்றும், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கை சட்டவிரோதமானது என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
மேலும் மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பிய ஆளுநரின் இந்த நடவடிக்கையை ரத்து செய்து உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி 10 மசோதாக்கள் ஒப்புதல் அளித்தது. இதை தொடர்ந்து, ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுத்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய 10 மசோதாக்கள் சட்டமாக அமலுக்கு வந்ததாக தமிழ்நாடு அரசுதழில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், ஆளுநர் நிறுத்திவைத்த 10 மசோதாக்களும் 2023 நவம்பர் 18 அன்றே ஆளுநர் ஒப்புதல் அளித்ததாக கருதப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.