புதுதில்லி:
ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற குடிமைப் பணித் தேர்வுகளை நடத்தும் யுபிஎஸ்சி நிறுவனமானது, விஷமமான கேள்வி ஒன்றை மாணவர்களிடம் எழுப்பியுள்ளது.கேந்திரிய வித்யாலயா பாடப்புத்தகத்தில் இருந்த குறிப்பிட்ட ஒரு பக்கம் அண்மையில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அதில், தலித் என்றால் அவர்கள், ‘வெளிநாட்டவர்களா, தீண்டத்தகாதவர்களா, நடுத்தர மக்களா அல்லது உயர்தர மக்களா’ என்று கேட்கப்பட்டு, அதற்கு சரியான விடை அளிக்குமாறு கோரப்பட்டிருந்தது.மற்றொரு கேள்வியில், டாக்டர் அம்பேத்கர் எந்தச் சமூக வகுப்பைச் சேர்ந்தவர்; ‘வசதிபடைத்தவரா, ஏழையா, எகானமி வகுப்பைச் சேர்ந்தவரா அல்லது பொருளாதார ரீதியாகவும் தலித் வகுப்பைச் ர்ந்தவரா?’ என்று கேட்கப்பட்டிருந்தது. இதுவும் கண்டனங்களுக்கு உள்ளானது.
இந்நிலையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற குடிமைப்பணித் தேர்வு வினாத்தாளிலும் இதேபோன்ற கேள்வியை யுபிஎஸ்சி அமைப்பு கேட்டுள்ளது. சிவில் சர்வீஸஸ் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு செப்டம்பர் 20ஆம் தேதி முதல் முதன்மைத் (Mains) தேர்வு துவங்கியது. இதில்தான் ‘மதச்சார்பின்மைக் கொள்கையால் நமது கலாச்சார நடைமுறைகளுக்கு ஏற்பட்டுள்ள சவால்கள் என்னென்ன?’ என்ற விஷமமான கேள்வி நுழைக்கப்பட்டுள்ளது.இந்திய அரசியலமைப்புச் சட்டம் மதச்சார்பின்மையின் நேர்மறையான கருத்தையும், அனைத்து மதங்களையும் சமமாக மதிக்கும் முறையையும் பின்பற்றி வருகிறது; அப்படி இருக்கையில் யுபிஎஸ்சி, மதச்சார்பின்மையின் எதிர்மறைக் கருத்தை குறிக்கும் விதமாக கேள்வி எழுப்பியுள்ளது.