புதுதில்லி:
கொரோனா வைரஸ் தாக்கத்தால், சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டு வருவதையடுத்து அந்தத் துறையைச் சேர்ந்த 3 கோடியே 80 லட்சம் பேர் வேலையிழப்புக்குஉள்ளாகும் ஆபத்து ஏற்பட்டிருப்பதாக இந்திய சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் சங்கங்களின் கூட்டமைப்பு (FAITH), பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது.
அந்த கடிதத்தில், மேலும் கூறப்பட்டிருப்பதாவது:கொரோனா தொற்று அச்சம். இந்திய சுற்றுலாத் தொழில்துறை பெரியளவிற்கு வேலையின்மையை ஏற்படுத்தும், வர்த்தகங்கள் மூடப்படுவதால் அடிப்படை வாழ் வாதாரம் பாதிக்கப்படும். ஒட்டுமொத்தமாக இந்தத் துறையில் பணியாற்றும் 5 கோடியே 50 லட்சம் பேர் களில், 70 சதவிகிதம் பேருக்கு வேலை பறிபோகும். அதாவது 3 கோடியே 80 லட்சம்பேர், வேலையை இழந்து விடும் அபாயம் உள்ளது. ஏற்கெனவே வேலையின்மையும் தொழில்கள் முடக்கமும் நாடு முழுதும் தொடங்கி விட்டன.இந்தியாவில் மொத்தமாக சுற்றுலாத் துறை வர்த்தகம் என்பது அந்நியச் செலாவணியில் 28 பில்லியன் அமெரிக்க டாலர் களாக (சுமார் 2 லட்சம் கோடி ரூபாய்) உள்ளது. இந்நிலையில், உள்நாட்டு சுற்றுலாத்துறை பெரிய இடர்பாட்டில் சிக்கும் அபாயம் நேரிட்டுள்ளது. அதாவது நேரடிசுற்றுலாத்துறை வர்த்தகம் ரூ. 5 லட்சம் கோடி பெறுமானம் என்றால், அதைவிட இரட்டை மடங்கு பொருளாதார நடவடிக்கை இடர்பாட்டில் விழும் அபாயம் இருக்கிறது.
இந்நிலையில், ஏப்ரல் 1 முதல் பயணத்துக்கான டிசிஎஸ் வரி வசூலிக்கப்படும்என்று நிதி மசோதா 2020-இல் முன்மொழியப்பட்டுள்ளது. இதை அமல்படுத்தினால் இந்தியாவிலிருந்து வர்த்தகங்கள் வெளிநாடுகளுக்குச் சென்று விடும். இந்திய சுற்றுலாத்துறை நிறுவனங்களின் வர்த்தகங்கள் இழுத்து மூடப்படும். எனவே அதனை அறிமுகம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.கூடுதலாக ஜிஎஸ்டி, அட்வான்ஸ் வரி செலுத்தல், பி.எப், இ.எஸ்.ஐ.சி. கஸ்டம் டூட்டிகள் ஆகியவை அடங்கிய அரசுக்கு சட்டரீதியாகச் செலுத்த வேண்டிய தொகைகளுக்கும் 12 மாத கால ஒத்திவைப்பு வழங்கக்கோருகிறோம். எம்.என்.ஆர்.இ.ஜி.ஏ. போன்று 12 மாதங்களுக்கு வேலையிழப்போருக்கு நேரடியாக அடிப்படை சம்பளத்தை வங்கிக் கணக்கில் மாற்ற முடிவதையும் பரிசீலிக்க வேண்டுகிறோம்.
அதேபோல் சுற்றுலா, பயணம், ஹோட்டல் உள்ளிட்ட விருந்தோம்பல் துறைக்கான ஜிஎஸ்டி வரி விடுமுறையை 12 மாதங்களுக்கு அறிவிக்க வேண்டும்.சுற்றுலாத்துறை முதலீட்டு அனுமதியை விரைந்து முடித்திட தேசிய சுற்றுலாத்துறை சிறப்புக் குழுவை அமைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.