tamilnadu

img

செப். 25: அகில இந்திய எதிர்ப்பு தினம்... அனைத்து விவசாய சங்கங்கள் அறைகூவல்

புதுதில்லி:
செப்டம்பர் 25 – அகில இந்திய எதிர்ப்புதினம் கடைப்பிடிக்குமாறு அனைத்து விவசாய சங்கங்களும் இணைந்து அறைகூவல் விடுத்துள்ளன.இது தொடர்பாக அகில இந்திய விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் ஹன்னன்முல்லா, அதுல் அஞ்சான் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அகில இந்திய விவசாய சங்கங்களின்ஒருங்கிணைப்புக்குழு, மத்திய அரசு விவசாயம் தொடர்பாகக் கொண்டுவந்துள்ள மூன்று அவசரச் சட்டங்களையும் கடுமையாக எதிர்ப்பது என்று தீர்மானித்திருந் தது. மேற்படி அவசரச் சட்டங்களை, மத்திய அரசாங்கம், நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் சட்டமாக்குவதற்கும் நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது.இதற்கு எதிராக வரும் செப்டம்பர் 25 அன்று அகில இந்திய அளவில் விவசாயிகளால் எதிர்ப்பு தினம் கடைபிடிக்கவேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டிருக் கிறது.

மேலும் பகத்சிங்கின் 114ஆவதுபிறந்தநாள் தினத்தை செப்டம்பர் 28 அன்று கடைபிடிக்க தீர்மானிக்கப் பட்டிருக்கிறது.இவ்விரு தினங்களிலும் மத்திய அரசின் விவசாயிகள் விரோத,கார்ப்பரேட்டுகள் ஆதரவு நடவடிக்கைகளையும், 2020 புதிய மின்சாரச் சட்டமுன்வடிவின் ஆபத்துக்களையும், டீசல், பெட்ரோல் விலை உயர்வுகளையும் மக்கள் மத்தியில் தோலுரித்துக்காட்ட வேண்டும் என்றும் விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு அறைகூவல் விடுத்திருக்கிறது.விவசாயம் சம்பந்தமான இம்மூன்றுசட்டமுன்வடிவுகளும், விவசாயிகளிடமிருந்து விளைபொருள்களை வாங்குவதை முற்றிலுமாக நிறுத்திக்கொண்டுவிடுகின்றன. அதன்மூலம் உணவுப் பாதுகாப்பு காவு கொடுக்கப்படுகிறது. விவசாயிகளுக்கும் விலை பாதுகாப்பு கொடுப்பதை அரசாங்கம் கைவிட்டுவிட்டு, விவசாயிகளைத் தனியார் வர்த்தகப் பெரும்புள்ளிகளிடம் தள்ளிவிடுகிறது. இன்றியமையாப் பண்டங்களின் கீழ் வர்த்தகக் கட்டுப்பாடு மற்றும் முறைப்படுத்தலின் கீழ் இருந்துவந்த தானியங்கள், பருப்பு வகைகள், சமையல் எண்ணெய்கள், வெங்காயம், உருளைக்கிழங்கு முதலானவை பட்டியலிலிருந்து நீக்கப்படுகின்றன.

விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை அளிக்கப்படும் என்று பாஜகதலைவர் நட்டா அளித்துள்ள உறுதிமொழி அப்பட்டமான பொய்யாகும். ஏனெனில், இது தொடர்பாக பாஜக அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட சாந்த குமார் குழுவானது, விவசாயிகளில் 6 சதவீதத்தினருக்கு மட்டுமே குறைந்தபட்ச ஆதாரவிலை அளிக்கப்படும் என்று கூறியிருப்பதுடன், இந்திய உணவுக் கழகம் மற்றும் நாபெட் (NAFED) ஆகியவை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய் வதை நிறுத்திக்கொள்ளும் என்றும், பொது விநியோக முறையின்கீழ் உணவுதானியங்கள் அளிப்பதும் நிறுத்திக்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.உலகில் உள்ள நாடுகளிள் உள்ளஅரசாங்கங்கள் அனைத்துமே, விவசாயிகள் உற்பத்தி செய்திடும் பொருள்களுக்கு விலைப் பாதுகாப்பை உத்தரவாதம் செய்திருக்கின்றன. எந்த நாட்டிலும் அவற்றை தனியார் நிறுவனங்களின் தயவில் விட்டுவிடவில்லை. தனியார் நிறுவனங்கள் எப்போதும் பொருள்களை மலிவாக வாங்கி, கொள்ளை லாபம் ஈட்டவேமுயலும். விளைபொருள்கள் உற்பத்தியானபின் விற்கப்பட வேண்டும். இல்லையேல் அவை அழுகிவிடும், அதன் மதிப்பைஇழந்துவிடும். நாட்டில் உணவு தானியங்கள் உற்பத்தி அதிகரித்திருப்பதாக பாஜக அரசாங்கம் கூறுகிறது. அதிக உணவு தானியங்கள் வேண்டுமாயின், அரசாங்கம் அதிக அளவில் கொள்முதல் செய்திட வேண்டும். இல்லையேல் தனியார் நிறுவனங்கள் அவற்றின் விலையைக் குறைத்திட நடவடிக்கைகள் எடுத்திடும். இப்போதைய பாஜக அரசாங்கம்கார்ப்பரேட்டுகள் லாபம் ஈட்டுவதற்காகவே ஒட்டுமொத்த உணவு சங்கிலித் தொடரையும் அவர்களுக்குத் திறந்துவிடுகிறது.

பாஜகவின் ஆட்சிக்காலத்தில் விவசாயிகளின் கடன்கள் அதிகரித்திருக்கின்றன. வேளாண் இடுபொருட்களின் விலைகளும் அரசாங்கத்தால் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன. விவசாயத்திற் கான மின்சாரக் கட்டணம், டீசல் விலைஆகியவையும் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன.பாஜக கொண்டுவரும் புதிய சட்டங்களின்படி கார்ப்பரேட்டுகள், விவசாயிகளிடமிருந்து நிலங்களை கட்டாயப படுத்தி ஒப்பந்த அடிப்படையில் வாங்கிடுவார்கள்.இப்போதே இந்திய விவசாயிகளும், நிலமற்ற விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் தற்கொலைகள் செய்துகொண்டிருக்கிறார்கள். ஒவ் வொரு மணி நேரத்திற்கும் அநேகமாக இருவர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். எனினும் சுயசார்பு என்று முழக்கமிட்டுக்கொண்டே பாஜக அரசாங்கம் நாட்டின் செல்வவளங்களை பெரும் கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்கு விற்றுக் கொண்டிருக்கிறது.

பாஜக கொண்டுவரும் இந்தச்சட்டமுன்வடிவுகளை, நாட்டுப்பற்றுகொண்டோர் அனைவரும் எதிர்த்திட முன்வர வேண்டும் என்றும், மத்திய அரசைப்பணியவைத்திடும் விதத்தில் போராட் டங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் அகில இந்திய விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு கேட்டுக் கொள்கிறது.இவ்வாறு அவர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.இதனை வெளியிட்ட பத்திரிகையாளர் கூட்டத்தில் வி.எம்.சிங், ஹன்னன் முல்லா, அடுல் குமார் அஞ்சான், அஷிஷ்மிட்டால், பி.கிருஷ்ணபிரசாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.