மதுராந்தகம், ஜூலை 7- சமூக நீதியை அழிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கைக்கு பதிலாக ஆக்கப்பூர்வ மறு வரைவு அறிக்கை வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கல்வி மாநாடு வலியுறுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்த கத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்க த்தின் சார்பில் மாநில கல்வி மாநாடு ஞாயிறன்று(ஜூலை 7) நடைபெற்றது. மாநிலத் தலைவர் பேராசிரியர் சோ.மோகனா தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் வர குணபாண்டியன் வரவேற்றார். அகில இந்திய மக்கள் அறிவியல் இயக்க கூட்டமைப்பு பொதுச் செயலாளர் பேரா. இராஜமாணிக்கம் துவக்கி வைத்து பேசினார். மதுராந்தகம் ஏரி நகர அரிமா சங்க சாசனத் தலைவர் பக்தவச்சலம், முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் கிஷோர் குமார், அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் தீனத யாளன், மாவட்ட இணைச் செயலா ளர் ஜானகிராமன், மாவட்ட துணைத் தலைவர் வரதராஜன் ஆகியோர் மாநாட்டை வாழ்த்திப் பேசினார். ‘புதிய தேசிய கல்விக் கொள்கை 2019’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் சென்னை கணிதவியல் நிறுவனத்தின் விஞ்ஞானி முனைவர் ஆர். ராமானுஜம் கருத்துரை வழங்கி னார். மாநாட்டை நிறைவு செய்து மாநில பொதுச் செயலாளர் அ.அமலராஜன் பேசினார். மாநில ஒருங்கிணைப்பாளர் சுந்தரம் சக்திவேல் உள்ளிட்டோர் உரையாற்றினர். மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு புதிய கல்விக் கொள்கை யை உருவாக்கும் முயற்சியில் ஈடு பட்டு வருகிறது. புதிய கல்விக் கொள்கை இன்னும் கருத்துக் கேட்பு நிலையில் தான் இருக்கிறது என்ற போதும், இதன் பல ஷரத்துகள் ஏற்கனவே அரசு உத்தரவுகள் மூலம் நடைமுறைக்கு வந்துவிட்டன. சிலவற்றை சட்டங்கள் ஆக்கவும் முயற்சிகள் நடக்கின்றன. வரைவு அறிக்கை நிலையில் உள்ள கல்விக் கொள்கை உருவாக்கம் பெற்றபின் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டிய செலவுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் நடப்பு வரவு-செலவு அறிக்கையிலேயே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வி முதல் பல்கலைக்கழக கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கல்வி வரை முற்றிலும் மாற்றி அமைக்கப்படவிருக்கிறது. ஆசிரியர் கல்வி மற்றும் கல்வி நிர் வாகம் ஆகியவை முற்றிலும் மறு கட்டுமானம் செய்யப்படவுள்ளது. இதன் விளைவுகள் அரசியல் சாசனத்தின் விழுமியங்களை குழி தோண்டிப் புதைத்துவிடும். சமூக நீதி என்ற சொல்கூட வரைவு அறிக்கை முழுவதும் கவனமாக நீக்கப்பட்டுள் ளது என்றும் இம் மாநாடு சுட்டிக் காட்டி எச்சரித்தது. பொதுப் பட்டியலில் இருக்கும் கல்வி முற்றாக மத்திய அரசின் அதி காரத்திற்கு எடுத்துச் செல்லப்படு கிறது. அனைவருக்கும் கல்வி, அனை வருக்கும் வேலை என்ற இலக்கு களை எட்டுவதாகவும் இல்லை. இந்திய நாட்டின் பன்முகத் தன்மைக்கு ஏற்ற தாகவும் இல்லை. இவ்வளவு குறை பாடுகள் நிறைந்த வரைவு கல்விக் கொள்கை மக்கள் முன் கருத்துக் கேட்புக்கு வைக்கப்பட்டுள்ளது. மிக குறுகிய கால அவகாசமே வழங்கப் பட்டு இருந்தது. மிகுந்த போராட்டத்திற்கு பிறகு மேலும் ஒரு மாதம் கால அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளது. டி.எஸ்.ஆர் சுப்பிரமணியம் குழு அறிக்கைக்கு முன்பிருந்தே கல்விக் கொள்கைக்கான கருத்து கேட்பது நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் ஆரோக்கியமாக அறிக்கைகளை செழுமைப்படுத்த கொடுத்த எந்த வொரு கருத்தும் வரைவு தயாரிப்பில் கருத்தில் கொள்ளப்படவில்லை. இப்போதும் இந்த கருத்துக் கேட்பதன் வழியாக பெறப்படும் கருத்துகள் எடுத்துக் கொள்ளப்படும் என்ற எந்த உத்தரவாதமும் இல்லை. இந்த நிலையில் வரைவு கல்விக் கொள்கையை நிராகரிப்பதைத் தவிர வேறு வழி மக்களுக்கு இல்லை. எனவே மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை வரைவை இம் மாநாடு நிராகரிப்பதாகவும் விரிவாக தீர்மானம் நிறைவேற்றியது. இந்தியாவுக்கான கல்விக்கு ஓர் மறுவரைவு அறிக்கை தேவைப் படுகிறது. எனவே மறு வரைவுக்கான ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மத்திய அரசுக்கு வழங்கும் என்றும் தற்போதைய வரைவு அறிக்கையின் பாதிப்புகளை மக்களிடம் கொண்டு செல்வது என்றும் மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது.