tamilnadu

img

பறிக்க முடியாமல் செடியில் சருகாகும் மலர்கள்:   பூ பயிரிட்ட விவசாயிகள் கடும் பாதிப்பு


விருதுநகர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு காரணமாக தோட்டங்களில் உள்ள மலர்களை பறிக்க முடியவில்லை. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர் அருகே உள்ள மல்லாங்கிணறு, சின்னப்பேராலி, பெரிய பேராலி, அருப்புக்கோட்டை, திருச்சுழி மற்றும் திருவில்லிபுத்தூர்  உள்ளிட்ட பகுதிகளில் மலர் விவசாயத்தில் ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இதில் மல்லிகை, சம்மங்கி, கேந்தி, வாடாமல்லி மற்றும் கோழிக் கொண்டைப் பூ  ஆகியவற்றை தங்களது தோட்டங்களில் பயிரிட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தைப் பொறுத்தவரை, பங்குனி மற்றும் மாசி மாதங்களில் பல்வேறு இடங்களில் மாரியம்மன் கோயில் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இதற்காக விவசாயிகள் தங்களது தோட்டங்களில் பூ பயிரிட்டிருந்தனர். எதிர்பாராத நிலையில், கொரோனா தொற்று தடுப்புக்காக தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டது. இதனால், விவசாயிகள் தங்களது தோட்டங்களில் விளைந்த பூக்களை பறிக்க முடியாமல் தலித்து வருகின்றனர். மேலும், மாவட்டம் முழுவதும் பூ விற்பளையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இத்தொழிலில் ஈடுபட்டுள்ள பூ கட்டுவோர், மாலை  மற்றும் பூ வியாபாரிகள் ஆகியோரும் பாதிக்கப்பட்டு, தங்களது வீடுகளில் முடங்கிப் போயுள்ளனர்.

இதுகுறித்து பூ பயிரிட்டுள்ள விவசாயிகள் கூறுகையில், எங்கள் பகுதியில் பல ஏக்கரில் விவசாயிகள் செவ்வந்தி, கோழிக் கொண்டை, மல்லிகை உள்ளிட்டவைகளை பயிரிட்டோம்.  பூச் செடிகளை பராமரிப்பது, மருந்து தெளிப்பது என  மாதம் ரூ.1 லட்சம் வரை செலவு செய்து விட்டோம்.  பங்குனித் திருவிழாவிற்காக பூக்களை பயிரிட்டு நன்கு பராமரித்து வந்தோம்.  சாகுபடி செய்தால்  தினசரி ரூ.2 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கும்.இந்த ஊரடங்கால் செடிகளிலேயே பூக்கள் காய்ந்து கீழே விழுகிறது. இதனால் எங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டு விட்டது. எனவே, தமிழக அரசு, உரிய நிவாரணத் தொகையை வழங்க வேண்டும். மேலும், பூக்களை விற்பனை செய்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.