சென்னை,மார்ச் 14- கலால் வரியை குறைத்து பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தியுள்ளது இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: . பாஜக மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தியிருப்பது வாகன உபயோகிப்பாளர்களை கடுமையாக பாதிக்கும். பொருள் போக்குவரத்து கட்டணம் மற்றும் வாடகை உயர்வும், அதனைத் தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் உயர்ந்து பொது மக்களை பாதிக்கும்.
சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகளில் வீழ்ச்சி ஏற்பட்டு வரும் நிலையில், அதன் பலனை உபயோகிப்பாளர்களுக்கு தரும் வகையில் பெட்ரோல், டீசல் விலைகளை பெருமளவு குறைக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு கலால் வரியை உயர்த்தி மக்கள் தலையில் பெரும் செலவுச் சுமையை ஏற்றியிருக்கிறது. மத்திய அரசின் மக்கள் விரோத செயலை கண்டிப்பதுடன், கலால் வரியை ரத்து செய்து பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என மத்திய அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.