tamilnadu

img

கையேந்தும் நிலையில் காவிரி டெல்டா

உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள கொரோனா  தொற்றின் தாக்கம்.அதனால் ஏற்படும் பொருளாதார பின்னடைவு ஒரு பக்கம் இருந்தாலும் டெல்டா மாவட்டங்களில் உணவு தட்டுப்பாடு என்பது பெரும் பிரச்சனையாக இருக்குமோ என்ற கேள்வி பரவலான மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக டெல்டா விவசாயம் சோதனையை சந்தித்து வருகிறது.முப்போகம் விளைந்த நெல்கள் தங்களின் இயல்பை மாற்றி விட்டன.

ஏக்கருக்கு 45 மூட்டைக்கு மேல் நெல் விளைந்த நிலங்களில் 15 மூட்டை கூட கிடைக்கவில்லை என்பது பெரும் வேதனையாக இருக்கிறது  விவசாயிகளுக்கு. மற்ற மாவட்ட விவசாயிகள் விவசாயம் பொய்த்தால் வேறு வேலைக்கு சென்று விடுவர். ஆனால் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட த்தில் உள்ள விவசாயிகள் எங்கு சுற்றினாலும் விவசாயிகளாகத்தான் இருப்பர்.இது டெல்டா மாவட்டங்களில் உள்ள தஞ்சை மாவட்டத்தின் தன்மை.

விவசாயிகளின் தற்கொலை அதிகரிப்பு

தண்ணீர்,உரம், வேலை ஆள், விளைச்சல், கடன் என எல்லாவிதத்திலும் அவர்கள் சமீப காலங்களாக ஏமாற்றத்தையே சந்திக்கின்றனர். சமீப காலங்களாக காவிரி டெல்டாவில் விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரித்து ள்ளன. காவிரியில் கல்லணைக்கு கீழே 950 ஏரிகள் இருந்தன. அவை தற்போது விளையாட்டு மைதானங்கள் போல மேடாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக அவற்றில் தண்ணீர் இல்லை.ஆழப்படுத்தி தூர் வாருவதற்கு தற்போதைய அதிமுக அரசும் தயாராக இல்லை.

இந்நிலையில் காவிரி ஆற்றில் எந்த வரம்பும் இல்லாமல் மணல் அள்ளப்படுகிறது. இங்கு சுரண்டப்படும் மணல் தமிழக கட்டுமானத்திற்கு மட்டும் செல்கிறதா என்றால் அதுவும் இல்லை.அரசின் அனுமதியோடு பெருமளவில் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. இன்னொரு புறம் பசுமை நிறைந்த காவிரி டெல்டாவை பாலைவனமாக மாற்ற மத்திய அரசும் மாநில அரசும் சேர்ந்து செய்த மோசடித்தனம்.மீத்தேன் ஷேல், ஹைட்ரோகார்பன் என விவசாய த்தை அழிக்கும் திட்டங்கள். டெல்டாவில் விவசாயிகள், பொதுமக்கள் அனைத்து அரசியல் கட்சிகள் என ஒரு முகத்தோடு போராடி அது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

அடுத்து கஜா புயலின் கோரத் தாண்டவம், நாகையில் இதற்கு முன்பு ஏற்பட்ட சுனாமியின் பாதிப்பு, வெள்ளம்,புயல்,வறட்சி என பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு விவசாயத்தை இயற்கையாலும், செயற்கையாலும் அழிக்க முடியாத அளவிற்கு இன்று பாதுகாக்க ப்பட்டுள்ளது.

மகசூல் கிடைத்தும் மகிழ்ச்சி இல்லை

விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலா ளர்களுக்கும் ஒரே வாழ்வாதாரம் விவசாயம் தான். இந்த ஆண்டு (2020) வழக்கத்தைவிட அதிகமான மகசூல் கிடைத்தும் மகிழ்ச்சி அடைய முடியாத நிலையில் இன்று காவிரி டெல்டா விவசாயிகளும், தொழிலாளர்களும் உள்ளனர். தற்போது உலகையே அச்சுறுத்தி க்கொண்டுள்ள கொரோனா நோய் தொற்றால் சுகாதாரமும், பொருளாதாரமும் எதிர் எதிர் திசையில் பயணிக்கின்றன.

இந்த சுகாதார, பொருளாதார போரில் நாட்டையும், பொருளாதாரத்தையும் பாதுகாப்பது ஒரு பக்கம் இருந்தாலும் முதலில் மக்களின் உயிரைப் பாதுகாக்க அரசு ஆக்கபூர்வமான முறையில் செயல்படவேண்டும்.

சிபிஎம்-பல்வேறு அமைப்புகள் உதவி

கடந்த மார்ச் 22 ஆம் தேதி அவசர கதியில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் டெல்டாவில் உள்ள அன்றாடங்காய்ச்சிகள், சாமானிய தொழிலாளர்கள், கிராமப்புறங்களில் உள்ள ஏழை அடித்தட்டு மக்கள் சொல்லொண்ணா துயரத்தில் உள்ளனர். அரசு அறிவித்து வழங்கிய ரூ.1000 மற்றும் உணவுப்பொருட்கள் மூன்று நாட்களுக்கே அவர்களுக்கு போதாது. அரசின் இந்த போக்கு தவறானது என்பதை புரிந்து கொண்ட அரசியல் கட்சிகள், சேவை அமைப்புகள் ஆங்காங்கே முடிந்த அளவுக்கு உதவிகள் செய்ய ஆரம்பித்தன. சமூக இடைவெளியை பின்பற்றி நிவாரணப்பொருட்களை வழங்கினர்.

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி உள்ளிட்ட நகரங்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும், சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறையினருக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நகரச்செயலாளர்கள் கே.ஜி.ரகுராமன், எஸ்.ஆறுமுகம் ஆகியோர் மாஸ்க் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள்,அரிசி, காய்கறி உள்ளிட்ட பொருட்களை வழங்கினர். நன்னிலம் வட்டாரத்தில் சிபிஎம் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் உதுமான் முயற்சியில் ரூ.1 லட்சம் மதிப்பிலான மாஸ்க் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் வீடு வீடாகச் சென்று கொடுக்கப்பட்டுள்ளது.திருத்துறைப்பூண்டி வரம்பியம் ஊராட்சியில் மாவட்டக்குழு உறுப்பினர் டி.சுப்ரமணியன் சொந்த முயற்சியில் கட்சிக் குடும்பங்களுக்கு ரூ.200 வீதம் ரூ.50 ஆயிரம் வரை கொடுக்கப்பட்டது.மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் சி.ஜோதிபாசு ஆகியோர் கலந்து கொண்டு வழங்கினர்.

கோட்டூர் ஒன்றியம் இருள் நீக்கி, திருத்துறை ப்பூண்டி ஒன்றியம், சேகல், கச்சனம், அம்மனூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் சிபிஎம் ஊராட்சி மன்ற தலைவர்களின் முயற்சியால் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் உட்பட பல்வேறு சேவைகளை செய்து வருகின்றனர். கொரடாச்சேரி ஒன்றியம், அரசவன ங்காடு,வலங்கைமான் உள்ளிட்ட பல ஊராட்சிகளில் சிபிஎம் ஊராட்சி மன்ற தலைவ ர்கள் முனைப்புடன் சேவை செய்து வருகின்றனர்.

இன்னம்பூர் ஊராட்சியில் 80 பேருக்கும், தீண்டாமை ஒழிப்பு முண்ணனி சார்பில் இன்னம்பூர்,திருப்பறம்பியம் ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு 23 பேருக்கும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப் பட்டன.கும்பகோணம் நகரத்தில் அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் முன் முயற்சியில் 100 பேருக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன. நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டத்தில் தரங்கம்பாடி, மயிலாடுதுறை போன்ற பகுதிகளில் வாலிபர் சங்கத்தினர், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு  பொருளுதவி செய்து வருகின்றனர்.

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் கட்சி,வாலிபர் சங்கம்,மாதர் சங்கம்,காப்பீட்டு ஊழியர் சங்கத்தினர் நூற்றுக்கணக்கானவர்கள் களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றனர். கட்சியின் மாவட்டச் செயலாளர் கவிவர்மன் தலைமையிலான குழுவினர் மாவட்டத்தில் பல்வேறு ஒன்றியங்களில் சேவை செய்து வருகின்றனர். ரூ.50 ஆயிரம் மதிப்பிலான அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளில் வழங்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள பகுதி களில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணம்மாள் தலைமையிலான குழுவினர் ரூ.80 ஆயிரம் மதிப்பிலான பொருள்களை வீடு வீடாகச் சென்று வழங்கியுள்ளனர். விவசாயத்தொழிலாளர் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் சங்கர், நாகராஜ் உள்ளிட்ட தோழர்கள் 100 ஏழை குடும்பங்களுக்கு அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்கினர்.மாவட்டம் முழுவதும்ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம்  மதிப்பிலான பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

வாலிபர் சங்கம், மாணவர் சங்கம், சிஐடியு ,மாதர் சங்கத்தினர் நூற்றுக்கணக்கானவர்கள் இந்த பணியில் மிகச்சிறப்பாக ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சாவூர்: தஞ்சாவூரில் கும்பகோணம் மற்றும் ஒன்றிய அளவில் உள்ள கிராமங்களில் சிஐடியு ,ஓய்வு பெற்ற ஊழியர்கள் தங்கள் அமைப்பு மூலம் பொருட்கள் மற்றும் பணம் வசூல் செய்து பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி வருகின்றனர்.

தஞ்சாவூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகரக் குழுவின் 22 ஆவது வார்டு கட்சிக்கிளை சார்பில் மக்களுக்கு அரிசி, பருப்பு வழங்கப்பட்டது. சமூக இடைவெளியுடன் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாவட்டச்  செயற்குழு உறுப்பினர் பி.செந்தில்குமார், மாநகரச் செயலாளர் என்.குருசாமி , மாநகரக் குழு உறுப்பினர் நசீர் மற்றும் கிளை செயலாளர் ராமு ஆகியோர் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர் ஒன்றியத்துக்குட்பட்ட மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  சார்பில் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன. ரூ.33 ஆயிரம் மதிப்புள்ள உணவுப்பொருட்களை தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் உறுப்பினர்கள் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் கே.அபிமன்னன்,  இடைக் கமிட்டி உறுப்பினர்கள் பி.சங்கிலிமுத்து,  ஆர்.ராமராஜ், சிஐடியு மாவட்டத் தலைவர் து.கோவிந்த ராஜூ,  மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.செங்குட்டுவன், மின் ஊழியர் மத்திய அமைப்பின் வட்டத்தலைவர் ஏ.அதிதூத மைக்கேல்ராஜ், எஸ்.ராஜமாணிக்கம் மற்றும்   எஸ்.வனரோஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருச்சி, கரூர்,பெரம்பலூர்:  திருச்சி, கரூர்,பெரம்பலூர் உள்ளிட்ட  மாவட்டங்களிலும் மாவட்ட கட்சி அமைப்பும்,ஒன்றிய நகரங்கள் அளவிலும் கட்சி மற்றும் வாலிபர், சிஐடியு,மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் கிருமி நாசினி தெளிப்பது, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவது என தொடர் பணியில் உள்ளனர். இந்நிலையில் கொரோனாவின் வீச்சு இன்னும் எவ்வளவு காலத்திற்கு தொடரும்? எத்தனை நாட்களுக்கு தொடரும்?போன்ற கேள்விகள் எல்லோரையும் சுற்றி சுற்றி வரத்தான் செய்கிறது. இன்னும் தொடரலாம் என்ற செய்திதான் பெரும்பாலானவர்களிடம் உள்ளது.இல்லை இல்லை சீக்கிரமே நாம் பழைய நிலைக்கு வந்துவிடுவோம் என்ற குரலும் கிராமங்களில் கேட்கிறது.

வாழ்வாதாரம் இழந்த 10 லட்சம் தொழிலாளர்கள்

டெல்டா மாவட்டங்களில் மட்டும் நகரங்கள், கிராமங்கள் உள்பட 2 லட்சத்து 80 ஆயிரம் கடைகள்,10 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர்.ஆடு, மாடு,கோழிகள் என கிராமப்புற மக்களின் சிறு வருவாயாக இருந்த கால்நடைகளை மேய்ச்சல் இல்லாமல், கண்காணிக்க முடியாமல் பாதித்துள்ளன.

ஊருக்கே சோறு போட்ட எங்களுக்கா இந்த கதி, நீங்களெல்லாம் இல்லையென்றால் எங்கள் வயிற்று பாடு என்னாவது என்ற அபயக்குரல் கிராமங்களில் கேட்க துவங்கியுள்ளது. இன்னும் ஊரடங்கு தொடரும் பட்சத்தில் கிராமங்களில் உணவு தட்டுப்பாடு அதிகரிக்கும், பட்டினிச் சாவுக்கு வழிவகுக்கும். இதையெல்லாம் அரசு கணக்கில் எடுக்க வேண்டும். இல்லையேல் ஊரடங்கையும் மீறி மக்கள் ரோட்டுக்கு வருவார்கள். விளைவுகள் விபரீதமாகலாம். இதையெல்லாம் சமாளிப்பதற்கு அரசு இப்போதே தயாராவது நல்லது.