tamilnadu

img

சிந்து மீண்டும் சொதப்பல்

சீன ஓபன் பேட்மிண்டன் 

சீனாவின் முக்கிய நகரான புஸ்ஹாவில் விக்டர் ஓபன் என்ற பெயரில் சர்வதேச பேட்மிண்டன் தொடர் செவ்வாயன்று தொடங்கியது. 

ஆடவர் ஒற்றையர்

ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் டெங்குகாய்ச்சலில் இருந்து மீண்ட  இந்தியாவின் பிரணோய், டென்மார்க்கின் ராஸ்மஸ் ஜெம்கியிடம் 17-21, 18-21 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியைச் சந்தித்தார்.

மகளிர் ஒற்றையர் 

மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் தங்க மங்கை பி.வி.சிந்து, சீன தைபேவின் பாய் யூவை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பாய் யூ 21-13, 18-21, 21-19 என்ற செட் கணக்கில் சிந்துவை புரட்டியெடுத்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். உலக பேட்மிண்டன் தொடரில் தங்கம் வென்றதிலிருந்து திணறலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சிந்து தற்போது சீன ஓபன் பேட்மிண்டன் தொடரிலும் மண்ணைக் கவ்வியது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

ஆடவர் இரட்டையர்

ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வரும் ராங்கி ரெட்டி - சிராக் செட்டி ஜோடி தனது முதல் சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவின் பிலிப் - ரயான் ஜோடியை 21-9, 21-15 என்ற செட் கணக்கில் புரட்டியெடுத்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

மகளிர் இரட்டையர் 

மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஸ்வினி - சிக்கி ஜோடி சீனாவின் லி வென் - ஜெங் யு ஜோடியிடம் 9-21, 8-21 என்ற செட் கணக்கில் வீழ்ந்து தொடரிலிருந்து வெளியேறியது.   

கலப்பு இரட்டையர் 

கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ராங்கி ரெட்டி - அஸ்வினி பொன்னப்பா ஜோடி, கனடாவின் ஜோசுவா, ஜோசப்பின் ஜோடியை 21-19, 21-19 என்ற செட்களில் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறியது.