பஹாமாஸ் நாட்டில் டொரியன் புயல் பாதிப்பினால் பலியானவர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.
கரிபியன் பகுதிகளில் மையம் கொண்டிருந்த டொரியன் புயல் கடந்த வாரம் போர்டோ ரிக்கோ, வெர்ஜின் தீவுகளைக் கடந்து, இறுதியாக பஹாமாஸ் நாட்டை கடுமையாக தாக்கியது. இதன் காரணமாக நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள தீவுகளில் இரண்டு நாட்கள் பலத்த காற்றுடன் கனமழை பெய்து பெரும் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது. இதில், ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன. மேலும் அப்பகுதி மக்கள் தங்கள் உடமைகளை இழந்து தவிக்கின்றனர். இந்த புயல் பாதிப்பில் பலியானோரின் எண்ணிக்கை இன்று 43 ஆக உயர்ந்துள்ளது. இதில், அபாகஸ் தீவுகளில் 35 பேரும், கிராண்ட் பஹாமாஸில் 8 பேரும் பலியாகி உள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. மேலும், பலர் காணவில்லை என்று தகவல் தெரியவந்துள்ளது. எனவே, பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
நியூ இங்கிலாந்தின் தென்கிழக்கே இன்று காலை மையம் கொண்டிருந்த டொரியன் புயல், தற்போது கனடாவின் மத்திய மற்றும் கிழக்கு நோவா ஸ்கோட்டியா மாகாணத்தை நோக்கி நகர்வதாக கணிக்கப்பட்டுள்ளது. எனவே, அங்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.