புதுதில்லி
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, நாடு முழுவதும் கோடிக்கணக்கானோர் வேலையிழப்பைச் சந்தித்துள்ள நிலையில், வங்கி கடன்தவணைகளை மார்ச் முதல் ஆகஸ்ட்31 வரை 6 மாதங்களுக்கு செலுத்த வேண்டியதில்லை என்று ரிசர்வ் வங்கி சலுகை வழங்கியது.
இது வரவேற்கத்தக்க அறிவிப்பு என்றாலும், கடன் தவணையை திருப்பிச் செலுத்தும்போது, சலுகைவழங்கப்பட்ட 6 மாத காலத்திற்கு உரிய வட்டியையும் சேர்த்தே வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டும்என்பது அதிருப்தியை ஏற்படுத்தியது.வருவாய் இல்லாத காலத்தில், வட்டி கட்டுவதற்கு மட்டும் தனியாகபணம் எப்படி வரும்? என்று கேள்விகள் எழுந்தன.இதுதொடர்பாக, ஆக்ராவைச் சேர்ந்த கஜேந்திர சர்மா என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அதில், “கடன் தவணையை செலுத்துவதற்கு 6 மாதம் அவகாசம்வழங்கிவிட்டு, இந்த அவகாச காலத்தில் வட்டி கணக்கிடப்பட்டு கடன்தாரரின் கணக்கில் சேர்க்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதுநியாயமற்றது மற்றும் சட்ட விரோதமானது” என்று கஜேந்திர சர்மா தெரிவித்திருந்தார்.“ஏராளமானோர் ஊரடங்கால் வேலை இழந்துள்ள இந்த சூழலில், சலுகைக் காலத்திற்கும் வட்டியைக் கணக்கிடுவது கூட்டு வட்டி போன்றது; இதனால் செலுத்த வேண்டிய கடன் அதிகமாகும். அத்துடன் தவணைக் காலமும் அதிகரிக்கும். இது கடினமான சூழலை ஏற்படுத்துவதுடன், இந்திய அரசியல் அமைப்புசட்டப் பிரிவு 21-ன் கீழ் வழங்கப்படும்வாழ்வாதார உரிமையை தடுப்பதாகஇருக்கும்” என்றும் குறிப்பிட்ட அவர்,“கடன் தவணை சலுகைக் காலத்தில்வட்டி வசூலிக்க தடை விதித்து, மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷண், எஸ்.கே. கவுல்,எம்.ஆர். சர்மா ஆகிய மூன்று நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது, காணொளி வாயிலாக விசாரித்த நீதிபதிகள், பொதுமுடக்க காலத்திற்கும் வங்கிகள் வட்டிவசூல் செய்வது குறித்து, மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் ஒரு வார காலத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.