மாமேதை ஏங்கெல்ஸ் பிறந்த நாளில் சிபிஎம் சார்பில் 50 பேர் உடல் தானம்!
மதுரை, நவ. 28 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அகில இந்திய முன்னாள் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, கடந்த செப்டம்பர் 12 அன்று நாடு முழுவதும் ஆயிரக் கணக்கானோர் உடல்தான இயக்கத்தில் பங்கெடுத்தனர். இதனொரு பகுதியாகவும், மாமேதை ஏங்கெல்ஸின் 205-ஆவது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், வெள்ளிக்கிழமை (நவ.28) அன்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உடல் தான இயக்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மற்றும் புறநகர் மாவட்டக்குழு சார்பில் 50 பேர் இறப்பிற்குப் பின் தங்களின் உடல்களை மருத்துவ மாணவர் களின் ஆராய்ச்சிக்கு வழங்குவதாக கூறி அதற்கான ஒப்புதல் படிவங் களை, மருத்துவக் கல்லூரி முதல்வர் அருள் புகழ் சுந்தரேசகுமாரிடம் அளித்தனர். இவர்களில் 11 பேர் பெண்கள்; 39 பேர் ஆண்கள். உடல்தா னம் செய்தவர்களில் 26 வயதேயான பிரசாந்த், 30 வயதேயான பி. டானியா ஆகியோரும் அடங்குவர். மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் குமாரவேல், நிலைய மருத்துவ அதிகாரி முரளிதரன், உடற்கூராய்வு துறையைச் சார்ந்த பரமசிவம், கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் மா. கணேசன், புறநகர் மாவட்டச் செயலாளர் கே. ராஜேந்தி ரன், மாநிலக்குழு உறுப்பினர் இரா. விஜயராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜா. நரசிம்மன், அ.ரமேஷ், வை. ஸ்டாலின், ஆர்.சசிகலா, ஜெ. லெனின், டி. செல்வ ராஜ் மற்றும் பகுதிக்குழுச் செயலா ளர் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
‘தம்பதியராக வந்து உடல் தானம் செய்வது புதுமையாக உள்ளது’
மருத்துவமனை முதல்வர் பாராட்டு உடல்தானப் படிவங்களைப் பெற்றுக்கொண்டு, அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் அருள் புகழ் சுந்தரேச குமார் பேசுகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை பாராட்டினார். “கணவர் உடல் தானம் செய்தால், மனைவி ஏற்றுக்கொள்ள மறுப்பதும், மனைவி உடல் தானம் செய்தால், அதனைக் கணவர் ஏற்றுக்கொள்ள மறுத்ததுமான நிலைமை தான் உள்ளது. ஆனால், இன்று கணவனும் மனைவியும் சேர்ந்து 7 தம்பதியர், உடல் தானம் செய்ய முன்வந்துள்ளனர். இது மிகப்பெரிய விழிப்புணர்வாக மருத்துவமனை நிர்வாகம் கருதுகிறது. அதேபோல் நிலைய மருத்துவ அதிகாரி, உடல் தானம் படிவங்களைப் பெற்றுக் கொள்ளும்போது, உடல் உறுப்பு தானம் செய்ய விரும்பினால், அதனையும் பதிவு செய்யலாம் என்று கூறியவுடன், அடுத்த 5 நிமிடங்களில் 21 ஆண்கள், 5 பெண்கள் என 26 பேர் உடல் உறுப்புக்களையும் தானம் செய்ய முன்வந்தனர். இது மருத்துவர்களிடம் மிகப்பெரும் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக உள்ளது” என்றார்.
