tamilnadu

img

மாற்றுத் திறனாளிகள் உரிமை முழக்கத்தின் எழுச்சிமிகு பத்தாண்டுகள் -எஸ். நம்புராஜன்

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் மற்றும் இச்சங்கம் அகில இந்திய அளவில் இணைந்து செயல்படும் “ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை“ – ஆகிய இரு அமைப்புகளும் உருவாக்கப்பட்டு, இந்த பிப்ரவரி மாதத்துடன் பத்தாண்டுகள் நிறைவடைகின்றன.   2010-20 பத்தாண்டுகள் என்பது மாற்றுத்திற னாளிகளையும், அவர்கள் நடத்துகிற போராட்டங்களையும் பொதுச்சமூகம் கூர்ந்து பார்க்கச் செய்த ஆண்டுகள் என்றுகூட கூறலாம்.  மாநில அரசும், மத்திய அரசும்  மாற்றுத்திற னாளிகளுக்கென தனி துறைகளை உருவாக்கி செயல்படுத்த வைத்தது முதல், ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம்-2016 நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டு நடைமுறைக்குக் கொண்டுவர வைத்தது வரை; பல்நோக்கு அடையாள சான்று வழங்குவதை அரசை ஏற்க வைத்தது முதல் பார்வையற்றவர்களும் ஐஏஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பதவிகளுக்கு வரமுடியும் என்பது வரை -  பல உரிமைகளை சாதித்துக் காட்டியது இந்த பத்தாண்டுகளில்தான். 

சாதாரண மாற்றுத்திறனாளியின் அடிப்படை கல்வி, வேலை வாய்ப்பு முதல் மாற்றுத்திறன் பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் தாக்குதல்கள் உள்ளிட்ட சமூகப் பிரச்சனைகள் வரை உறுதிமிக்க தலையீடுகள், போராட்டங்கள் மூலம் மாற்றுத்திறனாளிகளின் நம்பிக்கைக்குரிய முன்னணி சங்கங்களாக இவை மாறியுள்ளன.

இன்று கருத்தரங்கு

மாற்றுத்திறனாளிகளே ஒன்றிணைவோம், உரிமைகளை வென்றெடுப்போம் - என்ற முழக்கத்துடன் பிப்-6 முதல் பிப்-20 வரை மாநிலம் முழுவதும் மனித வளையம் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களை, இந்த இரு சங்கங்களின் பத்தாண்டுகள் நிறைவையொட்டி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் நடத்தி வருகிறது. பிப்-20 இன்று (வியாழன்) சென்னை, சைதாப்பேட்டையில் திறந்தவெளி கருத்தரங்கத்தோடு பத்தாண்டு விழாக்கள் நிறைவடைகின்றன.  “மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் துறையில் வேலை வாய்ப்பு இட ஒதுக்கீடு வழங்கிட தமிழக அரசே சட்டம் இயற்று!” என்ற கோரிக்கையோடு இக்கருத்தரங்கு நடைபெறுகிறது.  

வேலைவாய்ப்பே பிரதான கோரிக்கை

மாற்றுத்திறனாளிகளின் கண்ணியமான வாழ்க்கைக்கு, அவர்களின் சுய கவுரவத்தை உயர்த்துவதற்கு வேலைவாய்ப்பு இன்றியமையாதது என 2007ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் சபையின் ஊனமுற்றோர் உரிமைகளுக்கான கன்வென்ஷன் உடன்படிக்கை தெளிவுபடுத்துகிறது.  ஆனால், 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை புள்ளிவிபரப்படி, வேலை செய்யும் 15 முதல் 59 வயதுடைய நாட்டில்  வாழும் மொத்த மாற்றுத்திறனாளிகளில் 36.34 சதவீதம் பேர் மட்டுமே பெரும்பாலும் முறைசாரா உள்ளிட்ட ஏதாவது ஒரு வகை வேலையை செய்கின்றனர்.  2016 நிதி ஆயோக் அறிக்கையின்படி இது வெறும் 34  சதவீதம் மட்டுமே.   அதேவேளையில், படித்து திறன் பெற்று வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கிற மாற்றுத்திறனாளிகள் எண்ணிக்கை 2004ல் 5,65,900 என இருந்த எண்ணிக்கை, 2013ல் 7,17,200   உயர்ந்துள்ளது.   தமிழகத்தில் 2017 ஆம் ஆண்டு நிலவரப்படி வேலைவாய்ப்பு அலு வலகங்களில் 1,05,000-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து காத்திருக்கின்றனர்.  அதே வேளையில் 1999ல் 4,200; 2008ல் 3700; 2012ல் 2100 மற்றும் 2013ல் 1871 என நாடு முழுவதும் வேலைக்கு அமர்த்தப்பட்ட மாற்றுத்திறனாளிகள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்தே வந்துள்ளது. அரசுத்துறைகளில் பணியிடங்களை நிரப்பாமல் இருப்பது ஒருபுறம்!  அப்படி நிரப்பினாலும் தொகுப்பூதி யம், காண்ட்ராக்ட், ஓய்வுபெற்ற  பணியாளர் களையே அத்துக்கூலிக்கு அமர்த்தி, நிரந்தரப் பணிகளை  நிரந்தரமற்ற பணிகளாக மாற்றுவது மறுபுறம்!

சட்ட விதிகளை மதிக்காத அரசுகள்

ஊனமுற்றோர் உரிமைகள் சட்டப்படி அரசுத்துறைகளில் 4 சதவீத பணியிடங்களை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டும் என்ற சட்ட விதியை ஒரு பொருட்டாகவே மத்திய, மாநில அரசுகள் மதிப்பதில்லை.  “மத்திய. மாநில அரசுகள் மாற்றுத்திறனாளிகளை ஏமாற்றி யுள்ளன” என நீதிபதி சதாசிவம் தலைமையிலான உச்சநீதிமன்ற முதன்மை அமர்வு, 2013 அக்-8அன்று அளித்த தீர்ப்பொன்றில் கடுமையாக விமர்சித்தது.   3 மாத காலத்திற்குள் ஒவ்வொரு துறையிலும் உள்ள மொத்த பணியிடங்களுக்கு ஈடான பின்னடைவுக் காலிப்பணியிடங்களை மாற்றுத் திறனாளிகளைக் கொண்டு நிரப்ப வேண்டும் என்றும் உத்தர விட்டது.

தனியார் துறை இடஒதுக்கீடு

தனியார் துறையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்புகளை உறுதி செய்ய உறுதியான  கொள்கை முடிவுகளை அரசாங்கங்கள் வகுக்க வேண்டுமென 2007 ஆம் ஆண்டு ஐ.நா. ஊனமுற்றோர் உடன்படிக்கை விதி 27(எச்) வலியுறுத்துகிறது.  இந்த உடன்படிக்கையை கையெழுத்திட்டு ஏற்ற முன்னணி நாடுகளில் இந்தியாவும் ஒன்று.  அதோடு மட்டுமல்லாமல், மத்திய அமைச்சரவையும் இந்த உடன்படிக்கையை அங்கீகாரம் செய்துள்ளது மூலம், இந்த உடன்படிக்கை விதிகள் நமது நாட்டில் சட்டமாக மதிக்கப்பட வேண்டும்.   இந்த உடன்படிக்கை அடிப்படையில் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம், பிரிவு 35ம் “தனியார் துறையில் உள்ள பணி வாய்ப்புகளில் குறைந்தபட்சம் 5% பணி வாய்ப்புகளை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க உறுதி செய்ய வேண்டுமென தொட்டுவிட்டு,  அதற்கு ஈடாக, தனியார் முதலாளிகளுக்கு அரசாங்கங்கள் ஊக்கத்தொகை தரவேண்டுமென  “க்” வைத்து, தொட்டதை விட்டுவிட்டது. 

மத்திய அரசுதான் இப்படி இருக்கிறது என்றால், மாற்றுத்திறனாளிகளின் நலன்களுக்கு பொறுப்பாக்கப்பட்ட மாநில அரசோ மேற்கண்ட உரிமைகள் சட்டத்திற்கு 2017 ஆம்  ஆண்டு மாநில அரசின் நகல் விதிகளை உருவாக்கி வெளியிட்டது.  அந்த நகல் விதி எண் 30-ல் விதி வகுப்பது போன்று தனியார் துறையில் இட ஒதுக்கீட்டை  தொட்டது.  ஆனால்,  எதற்கு பயந்ததோ, அசல் விதிகளை அரசிதழில் வெளியிடும் போது அந்த விதியை விட்டுவிட்டது. நான் மாற்றுத்திறனாளிக்கு வேலை கொடுக்க வேண்டு மென்றால் நீ எனக்கு ஊக்கத்தொகை கொடுக்க வேண்டும் என தனியார் முதலாளிகள் அரசைப் பார்த்து நிச்சயம் கேட்பார்கள் என்பதால்தான் தனியார் நிறுவனங்களில் 5 சதவீத வேலைவாய்ப்பை அரசாங்கங்கள் வலியுறுத்த மறுக்கின்றன.  எனவே, இந்த சட்ட விதி என்பது, மாற்றுத்திறனாளிகளைப் பொருத்தவரை “நட்ட” விதி ஆகிவிட்டது.  பயனற்றதாகிவிட்டது.  எனவேதான், “மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் துறையில் வேலை வாய்ப்பு இட ஒதுக்கீடு வழங்கிட தமிழக அரசே சிறப்புச் சட்டம் இயற்று!” என்ற கோரிக்கையை தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் வலுவாக முன்னெடுத்துள்ளது.  இக்கோரிக்கைக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு அளிக்க வேண்டுமெனவும்  சங்கம் கோரிக்கை விடுக்கிறது.   தொட்டதைவிட்டது ஏன் என மத்திய, மாநில அரசுகள் விளக்க  வேண்டுமெனவும் கோரிக்கை வைக்கிறது.