tamilnadu

img

மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு குறைப்பு

மேட்டூர்,செப்.18- நீர் வரத்து குறைந்ததால், மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமாகப் பெய்ததால், கபினி, கே.ஆர்.எஸ். அணைகள் நிரம்பின. அணைகளின் பாதுகாப்பு கருதி  அதிகபட்சமாக விநாடிக்கு 3 லட்சம் கன அடி வரை காவிரியில் நீர் திறக்கப்பட்டது. இதனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேட்டூர் அணையும் நிரம்பியது. ஆனால் மழை குறைந்த பின்னர், அணைக்கு வரும் நீரின் அளவும் குறைந்தது. தற்போது கபினிக்கு விநாடிக்கு 3,325 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால், அணையில் இருந்து 3 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. 

கே.ஆர்.எஸ். அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 8,792 கன அடியாக குறைந்தது.  அந்த அணையில் இருந்து விநாடிக்கு 8,599 கன அடி வீதம் நீர் திறக்கப்படுகிறது. மொத்தமாக 11, 599 கன அடி நீர் காவிரியில் பாய்ந்து கொண்டிருக்கிறது. பிலிகுண்டுலுவை அடையும் நீரின் அளவு விநாடிக்கு 16 ஆயிரம் கன அடியாக உள்ளது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலிலும் இதே அளவு நீர் பாய்வதால், அங்கு பரிசல் இயக்கவும், சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும் விதிக்கப்பட்டிருந்த தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு  நீர்வரத்து விநாடிக்கு 15 ஆயிரம்  கன அடியாக உள்ளது.  அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு, விநாடிக்கு 12 ஆயிரம் கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. கிழக்கு மேற்கு கால்வாயில் இருந்து விநாடிக்கு 600 கன அடி வீதம் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 120 அடியாக உள்ளது.