கடலூர் தென்பெண்ணை மற்றும் கெடிலம் ஆற்றில் கரைபுரண்டு ஓடும் தண்ணீர்
கடலூர், அக்.22- கடலூர் மாவட்டத்தில் செவ்வாயன்று இரவு பெய்த கனமழை காரணமாக மையப்பகுதியில் ஓடும் கெடிலம் ஆறு மற்றும் தென்பெண்ணை ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. ஓட்டேரி பகுதியில் ஆற்றில் அமைக்கப் பட்டிருந்த தற்காலிக சாலை அடித்துச் செல்லப்பட்டது. இதனால் ஓட்டேரி மற்றும் திருமானிக்குழி பகுதிகளுக்கு பொது மக்கள் மாற்றுப் பாதையைப் பயன்படுத்தி வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கடலூர் மற்றும் புதுவை மாநிலத்தை இணைக்கும் தென்பெண்ணை ஆற்றில் அமைந்துள்ள கொமதாமேடு தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியுள்ளது. அதிக அளவில் தண்ணீர் செல்வதால் அங்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் கெடிலம் ஆற்றில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் பாலத்தின் கட்டுமானப் பணி கள் நடைபெற்று வந்தன. கட்டுமானப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ள பகுதி முழுவதும் தண்ணீரில் மூழ்கியதால், அந்தப் பொருட்களை அப்புறப்படுத்தும் பணியில் தொழிலாளர்கள் வெள்ளத்திலும் ஈடுபட்டனர்.
