tamilnadu

img

தற்காலிக பணியாளர்களைக் கொண்டு தடுப்பூசி போடக் கூடாது! கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

தற்காலிக பணியாளர்களைக்  கொண்டு தடுப்பூசி போடக் கூடாது! கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, ஜூலை 1-  துணை சுகாதார நிலையங்களில் தற்காலிகப் பணியாளர்களைக் கொண்டு தடுப்பூசி செலுத்தும் பணி செய்வதைக் கைவிட வலியுறுத்தி, தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தினர் திங்கட்கிழமை புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்ட சுகாதார அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.மாரி ஈஸ்வரி தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் ஆர்.ரெங்கசாமி, கிராம சுகாதார செவிலியர் சங்கத்தின் மாவட்டச் செயலர் மலர்கொடி, துணைச் செயலர் சீதையம்மாள், துணைத் தலைவர் மெர்ஸி உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.  ஆர்ப்பாட்டத்தில், துணை சுகாதார நிலையங்களில் தற்காலிகப் பணியாளர்களைக் கொண்டு தடுப்பூசி செலுத்தும் பணி செய்வதைக் கைவிட வேண்டும். 40 சதவிகிதம் காலியாக உள்ள துணை சுகாதார நிலையங்களின் கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களை பயிற்சி முடித்து, மூன்று ஆண்டுகளாகப் பணியமர்த்தப்படாமல் உள்ளோரைக் கொண்டு நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.