tamilnadu

கொரோனா முடிவுக்கு வர தடுப்பூசிதான் ஓரே தீர்வு

சென்னை, டிச.11- தொடர்ந்து கொண்டிருக்கும் கொரோனா பேரிடர் முடிவுக்கு வர தடுப்பூசி தான் தீர்வு என மக்கள்  நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 14வது மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் சனிக்கிழமை (டிச.11) நடந்தது. சென்னை தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் மற்றும் ரங்காஜபுரம் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மெகா தடுப்பூசி சிறப்பு முகாமினையும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அமைச்சர் மா.சுப்பிர மணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் இதுவரை 7 கோடியே 54 லட்சத்து 2 ஆயிரத்து 698 நபர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். முதல் தவணை யாக 4 கோடியே 70 லட்சத்து 65 ஆயிரத்து 514 (81.30விழுக்காடு) பேருக்கும் 2வது தவணையாக 2 கோடியே 83 லட்சத்து 37 ஆயிரத்து 184 (48.95விழுக்காடு) பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 2வது தவணை தடுப்பூசியானது 94 லட்சத்து 15 ஆயிரத்து 147 நபர்களுக்கு செலுத்த  வேண்டியுள்ளது. தற்பொழுது, 95 லட்சத்து 78  ஆயிரத்து 890 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. 2வது தவணை தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு இலக்கு வைத்து இந்த முகாம்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற 13 மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்களின் மூலமாக 2 கோடியே 43 லட்சத்து 24 ஆயிரத்து 138 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.கல்லூரி மாணவர்களுக்கு 100விழுக்காடு தடுப்பூசி செலுத்த வேண்டிய அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

ஒமைக்கரான்

ஓமைக்ரான் வைரஸ் உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்தப் பாதிப்பு மிகவும் அதிகமாக காணப்படுகிறது. எனவே, தமிழக மக்கள், தயக்கம் காட்டாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தொடர்ந்து கொண்டிருக்கும் கொரோனா பேரிடர் முடிவுக்கு வர தடுப்பூசி தான் தீர்வு என்றார்.

ரூ.101கோடி அபராதம்

தொடர்ந்து பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செய லாளர் ராதாகிருஷ்ணன், கொரோனா குறையாத நிலையில், சென்னையில் 65 சதவீதம் பேர் முகக்கவசம் அணிவது இல்லை. தமிழ்நாட்டில் இதுவரை ஒமிக்ரான் தொற்று கண்டறியப்படவில்லை. தமிழ்நாட்டில் கொரோனா விதிமுறைகளை மீறியதாக இதுவரை ரூ.101 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சென்னையில் 65 சதவீதம் பேர் முகக்கவசம் அணியாமல் சுற்றுவது மிகவும் வேதனை அளிக்கிறது என்று தெரிவித்தார்.

 

;