tamilnadu

img

ஒரு மாவட்டம் ஒரு பொருள் திட்டம் திண்டுக்கல் விவசாய உற்பத்திப் பொருட்களை புறக்கணித்த ஒன்றிய அரசு

திண்டுக்கல் மாவட்டத்தில் பெருமளவில் விளையும் மாங்காய், தக்காளி, மலை வாழைப்பழம் போன்ற விலை மதிப்புமிக்க, அழுகல் தன்மையுள்ள விவசாய உற்பத்திப் பொருட்களை ஊக்குவிக்க “ஒரு மாவட்டம் ஒரு பொருள்” திட்டத்தின்கீழ் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ஒன்றிய உணவு பதப்படுத்தும் தொழில்துறை இணை அமைச்சர் ரவ்னீத் சிங், நுண் உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்துவதற்கான பிரதமரின் திட்டம் (PMFME) 2020-21 முதல் 2025-26 வரை ரூ.10,000 கோடியில் செயல்படுத்தப்படுவதாக தெரிவித்தார்.  இத்திட்டத்தின் கீழ்: தனிநபர்/குழு நுண் நிறுவனங்களுக்கு அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை 35% மூலதன மானியம் உணவு பதப்படுத்தும் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு தலா ரூ.40,000 வித்து மூலதனம் பொது உள்கட்டமைப்புக்கு ரூ.3 கோடி வரை 35% மூலதன மானியம் விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்துதலுக்கு 50% மானியம் தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டு பயிற்சி பெறலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால், திண்டுக்கல் மாவட்டத்திற்கு கால்நடை தீவனம் மட்டுமே (ODOP) பொருளாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. வாழைப்பழம் சார்ந்த பொருட்கள் தேனி, திருநெல்வேலி, திருச்சி மாவட்டங்களுக்கும், மாங்காய் சார்ந்த பொருட்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் தக்காளி (ODOP) பொருளாக அடையாளம் காணப்படவில்லை என அமைச்சர் தெரிவித்தார். இதன்மூலம், திண்டுக்கல் மாவட்டத்தின் முக்கிய விவசாய உற்பத்திப் பொருட்களான மாங்காய், தக்காளி, மலை வாழைப்பழம் ஆகியவற்றை ஊக்குவிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது. சச்சிதானந்தம் எம்.பி விமர்சனம் “ஒன்றிய அரசின் இந்த அணுகுமுறை திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளின் நலனுக்கு எதிரானது. நமது மாவட்டத்தின் தனித்துவமான விவசாயப் பொருட்களை முற்றிலும் புறக்கணித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் என்றாலே மலை வாழைப்பழம், மாங்காய், தக்காளி என்று அடையாளம் காணப்படும் அளவுக்கு இங்கு இப்பொருட்கள் பெருமளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. குறிப்பாக கொடைக்கானல், சிறுமலை ஆகிய இடங்களில் விளையும் மலை வாழைப்பழம் தனித்துவமான சுவையும், ஊட்டச்சத்தும் கொண்டது. அதேபோல், திண்டுக்கல் மாவட்டத்தின் மாங்காய், தக்காளி உற்பத்தியும் கணிசமானது. ஆனால், இவற்றை ஊக்குவிப்பதற்கு பதிலாக, கால்நடை தீவனத்தை மட்டுமே ‘ஒரு மாவட்டம் ஒரு பொருள்’ (ODOP) திட்டத்தில் பொருளாக தேர்ந்தெடுத்துள்ளனர். இதனால் திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். அழுகல் தன்மை கொண்ட வாழைப்பழம், தக்காளி உள்ளிட்ட பொருட்களை பதப்படுத்தி மதிப்பு கூட்ட முடியாமல் தவிக்கிறார்கள். PMFME திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மூலதன மானியம், வித்து நிதி, பொது உள்கட்டமைப்பு வசதிகள், விளம்பர ஊக்குவிப்பு போன்ற பல்வேறு சலுகைகளை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அந்தந்த பகுதியின் தனித்துவமான விவசாய உற்பத்திப் பொருட்களை கணக்கில் எடுத்து பொருட்களை தேர்வு செய்ய வேண்டும். ஆனால் ஒன்றிய அரசு இதில் தவறிவிட்டது. திண்டுக்கல் மாவட்டத்தின் முக்கிய விவசாயப் பொருட்களை ‘ஒரு மாவட்டம் ஒரு பொருள்’ (ODOP) திட்டத்தின் பட்டியலில் சேர்க்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.” இவ்வாறு சச்சிதானந்தம்  எம்.பி., கூறினார்.