tamilnadu

திருச்சி விரைவு செய்திகள்

தமுஎகச மாநில மாநாடு  வரவேற்புக் குழு அலுவலகம் திறப்பு

தஞ்சாவூர், செப். 21-  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 16 ஆவது மாநில மாநாடு வரவேற்புக் குழு அலுவலகம் திறப்பு விழா, தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் எதிரில், பாரதி புத்தகாலயத்தில் வரவேற்பு குழு அலுவலக பொறுப்பாளர் இரா.விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது. சா. கோதண்டபாணி வரவேற்றார். வரவேற்புக்குழு துணைச் செயலாளர் கா.அசோக் முன்னிலை வகித்தார். வரவேற்புக்குழு ஆலோசகர் தொழிலதிபர் கா.ஆசிப் அலி அலுவலகத்தை திறந்து வைத்தார்.  வரவேற்புக் குழுச் செயலாளர் களப்பிரன் வேலை அறிக்கை வாசித்தார். மாநில துணைத் தலைவர் முத்துநிலவன், வெற்றித் தமிழர் பேரவை செழியன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநிலப் பொருளாளர் சைதை ஜெ நிறைவுரையாற்றினார். வரவேற்புக்குழு உறுப்பினர் ஆ.அருணாதேவி நன்றி கூறினார்.

திருச்சியில் மாதர் சங்க  சிறப்பு கருத்தரங்கம்

திருச்சிராப்பள்ளி, செப். 21-  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 17 ஆவது மாநில மாநாட்டையொட்டி, மாதர் சங்க திருச்சி புறநகர் மாவட்டக் குழு சார்பில், சிறப்பு கருத்தரங்கம் பெல் சிஐடியு சங்க அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.  கருத்தரங்கிற்கு, மாவட்டச் செயலாளர் மல்லிகா தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர்கள் கிரிஜா, நித்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில மாநாட்டின் நோக்கங்களை விளக்கி, மாநிலச் செயலாளர் திண்டுக்கல் ராணி சிறப்புரையாற்றினார். `விளையாட்டுத் துறையில் பெண்கள்’ என்ற தலைப்பில் சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் எம்.ஜெயசீலன் கருத்துரையாற்றினார்.  முன்னதாக, சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மணப்பாறையைச் சேர்ந்த குத்துச் சண்டை வீராங்கனை ராஜேஸ்வரி கொளரவிக்கப்பட்டார். வட்டக்குழு உறுப்பினர் தேவிகா நன்றி கூறினார். அரசு கலை கல்லூரி மாணவர்கள், பெண்கள் மற்றும் பெல் தோழர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

நாகுடியில் விவசாயிகள், விவசாயத்  தொழிலாளர்கள் சங்க  சிறப்பு கூட்டம்

அறந்தாங்கி, செப். 21-  விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம்  இணைத்து நாகுடி சுமைப்பணி சங்க அலுவலகத்தில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்திற்கு விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் செல்லமுத்து தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் எஸ். பொன்னுச்சாமி செப்டம்பர் 30 அன்று நடைபெற உள்ள நில உரிமைக்கான போராட்டம் குறித்தும், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற உள்ள போராட்டத்திற்கான தயாரிப்பு பணிகள் குறித்தும் பேசினார்.  ஒன்றியச் செயலாளர்கள் தென்றல் கருப்பையா, வீ. ராசு, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எம். நாராயணமூர்த்தி, சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

தண்ணீரை முழுமையாக சேமிக்கும் வகையில்  ஏரி, குளங்களை தூர் வாரக் கோரிக்கை

தஞ்சாவூர், செப். 20-  தஞ்சாவூர் மாவட்டத்தில் பாசனத்தை மேம்படுத்தும் வகையில், தண்ணீரை முழுமையாக தேக்கி வைக்க ஏதுவாக அனைத்து ஏரி, குளங்களையும் முறையாக தூர்வார வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.  இது தொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி. கண்ணன், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர், தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், “நடப்பாண்டு மேட்டூர் அணையிலிருந்து, தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தண்ணீர் பற்றாக்குறை இன்றி சிறப்பாக விவசாயப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அனைத்து ஏரி, குளங்களிலும் தண்ணீர் நிறைந்துள்ளது.  எதிர்வரும் பருவமழையை எதிர்கொள்ள ஏதுவாக, தற்போதே வடிகால் வாய்க்கால், வரத்து வாரிகளை உடனடியாக போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும். தண்ணீர் திறந்தும் ஏரி, குளங்கள் தூர்வாரப்படாததால் போதுமான தண்ணீரை சேமிக்க முடியவில்லை. எனவே, தூர் வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்’’ இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.