tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

‘இபிஎஸ்சுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடையில்லை!’

சென்னை, ஆக. 21 - அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து உரிமையியல் நீதிமன்றத்தில் சூரியமூர்த்தி என்பவர் தாக்கல் செய்த வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் திரும்பப் பெற்றது. கடந்த 2022 ஜூலை 11 அன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து சூர்யமூர்த்தி வழக்கு  தொடர்ந்திருந்தார். நீதிபதி பி.பி. பாலாஜி முன்பு இந்த வழக்கு வியாழக்கிழமையன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த உத்தர வை நீதிமன்றம் திரும்பப் பெற்று வழக்கின் விசார ணையை ஆகஸ்ட் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

1,538 டன் அரிசியை  வீணாக்கிய அதிகாரிகள்   நடவடிக்கைக்குப் பரிந்துரை

தஞ்சாவூர், ஆக. 21 - தஞ்சாவூர் பிள்ளையார்பட்டியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சேமிப்புக் கிடங்கை, சட்டமன்ற உறுப்பினர்கள் அடங்கிய பொது நிறுவனங்களின் ஆய்வுக் குழுவினர் பார்வையிட்டனர். அப்போது, கடந்த 2022-ஆம் ஆண்டு இருப்பு வைக்கப்பட்ட 1,538 டன் அரிசி பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் இல்லாதது கண்டறியப் பட்டது. இதையடுத்து, அந்த அரிசியை உரிய காலத்தில் விநியோகம் செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறும், பயன்படுத்த முடியாத அரிசியை கால்நடை தீவனமாக மாற்றவும் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக குழுவின் தலைவர் நந்தகுமார் தெரிவித்தார்.  

5 ஆண்டுகளில் இல்லாத எண்ணிக்கை பொறியியல் படிப்புகளில் அதிகரித்த மாணவர் சேர்க்கை

சென்னை, ஆக. 21 - தமிழ்நாட்டில் பொறியியல் கலந்தாய்வில் மூன்றாம் சுற்று முடிந்துள்ள நிலையில், கடந்த 5 ஆண்டுகளை விட இந்த ஆண்டு அதிகமான மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. நடப்புக் கல்வி ஆண்டில் அண்ணா பல்கலைக்கழ கத்தில் அனுமதி பெற்ற 421 கல்லூரிகளில் உள்ள 1,90,166 இடங்களுக்கு 2.41 லட்சம் மாணவர்கள்  விண்ணப்பித்தனர். மூன்று சுற்று கலந்தாய்வில் மொத்தம் 1,44,481 மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர். கம்ப்யூட்டர் சார்ந்த பொறியியல் படிப்புகள் மீதான ஆர்வம் சற்று குறைந்து இசிசி, ஈஈஈ, மெக்கானிக்கல், சிவில் படிப்புகளுக்கு மாணவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். கோவை மண்டலத்தில் 53,417 பேரும், சென்னையில் 40,620 பேரும் சேர்ந்துள்ளனர். துணை கலந்தாய்வு ஆக.21 தொடங்கி இந்த மாதம் இறுதியில் கலந்தாய்வு முடிவடைய உள்ளது.

ஜெயலலிதாவின் ரூ. 36 கோடி வரி பாக்கி:  தீபாவுக்கு அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு இடைக்கால தடை!

சென்னை, ஆக. 21 - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரான வருமான வரி வழக்கில், 36.56 கோடி ரூபாயைச் செலுத்தக் கூறி அவரது சட்டப்பூர்வ வாரிசான தீபாவுக்கு அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2016-இல் காலமான ஜெயலலிதா, 36.56 கோடி ரூபாய் வருமான வரி பாக்கி வைத்துள்ளதாக கூறிய வருமான வரித்துறை, அதை செலுத்துமாறு அவரது சட்டப்பூர்வ வாரிசான ஜெ. தீபாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸை எதிர்த்து தீபா தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்த வழக்கில், தீபா தரப்பு வழக்கறிஞர் மறைந்த ஒருவரின் பெயரில் அவரது வாரிசு வருமான வரி செலுத்த வேண்டும் என சட்ட ரீதியாக கோர முடியாது என வாதிட்டார். இதையடுத்து நீதிமன்றம் வருமான வரி நோட்டீஸின் அடிப்படையில் வசூல் நடவடிக்கை எடுக்கக் கூடாது என இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

‘கல்விக் கொள்கை’: உயர்மட்டக் குழு அறிக்கையை வெளியிடுக! பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோரிக்கை

சென்னை, ஆக. 21 - தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை, ஆகஸ்ட் 12 அன்று வெளியிட்ட தனது செய்திக் குறிப்பில், அரசு அமைத்த உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் மாநிலக் கல்விக் கொள்கை - பள்ளிக் கல்வி உருவானது என தெரிவித்திருந்தது. இதன் அடிப்படையில், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறைக்கும், தலைமைச் செயலாளருக்கும் கடிதம் அனுப்பியுள்ளது. அதில், உயர்மட்ட குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் மாநிலக் கல்விக் கொள்கை உருவானது என்றால், உயர்மட்ட குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள பள்ளிக் கல்வித் தொடர்பான மாநிலக் கல்விக் கொள்கை, வரைவு அறிக்கை தானா அல்லது இறுதியானதா? என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும் என பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளரான பு.பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு கோரிக்கை வைத்துள்ளார்.

அமைச்சர் கார் செல்லும் வரை  ஆம்புலன்ஸ் நிறுத்தப்படவில்லை! தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்

சென்னை, ஆக. 21 - பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் கார் கடந்து செல்லும் வரை ஆம்புலன்ஸ் நிறுத்திவைக்கப்பட்டதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதையடுத்து, தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்ட விளக்கத்தில், “இது தவறான தகவல். இந்த வீடியோ 2022-ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது.  கும்பகோணம் அருகே கொள்ளிடம் ஆற்றில் ஆய்வு பணிகளை மேற்கொள்ள அமைச்சர் அணைக்கரை பாலம் வழியாக சென்றார். அணைக்கரை பாலம் ஒரு வழியாக இருப்பதால் பாலத்தின் ஒருபக்கம் வாகனங்கள் சென்ற பிறகே அடுத்த கரையில் நிற்கும் வாகனங்கள் செல்ல முடியும்” என்று கூறப்பட்டுள்ளது.

2 பல்கலை. துணை வேந்தர்க்கு மேலும் ஓராண்டு பதவி நீட்டிப்பு

சென்னை, ஆக. 21 - அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் க. ரவி மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக துணைவேந்தர் பேராசிரியர் சந்திரசேகர் ஆகியோரின் பதவிக்காலம் ஆகஸ்ட் 21 அன்றுடன் முடிவடைகிறது.  இந்த நிலையில், இவர்கள் இருவரின் பதவிக்காலத்தையும் ஆகஸ்ட் 22  முதல் மேலும் ஓராண்டு காலம் நீட்டித்து  ஆளுநர் ஆர்.என். ரவி  உத்தர விட்டுள்ளார். இரு துணைவேந்தர்களும் சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநரை சந்தித்து பதவி நீட்டிப்புக்கான ஆணையை பெற்றனர்.