tamilnadu

img

குடிசைப் பகுதி மக்களின் அரணாக திகழும் தீக்கதிர் நாளிதழ்! ஆர்வத்துடன் சந்தா வழங்கிய தா.பழூர் மக்கள்

குடிசைப் பகுதி மக்களின் அரணாக திகழும் தீக்கதிர் நாளிதழ்! ஆர்வத்துடன் சந்தா வழங்கிய தா.பழூர் மக்கள்

அரியலூர், ஜூலை 26-  தா. பழூரில் தீக்கதிர் சந்தா சேகரிப்பின்போது, குடிசைவாழ் மக்கள் ஆர்வத்துடன் 10-க்கும் மேற்பட்ட சந்தாக்களை தாமாக முன்வந்து வழங்கியது கட்சித் தலைவர்களையும், கட்சி தோழர்களையும் பிரமிக்க வைத்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், தமிழ்நாடு முழுவதும் கடந்த ஜூலை 10 முதல் தொடங்கி தீக்கதிர் நாளிதழுக்கான சந்தா சேர்ப்பு இயக்கம் நடைபெற்று வருகிறது. அதையொட்டி தீக்கதிர் திருச்சி பதிப்புக்கு உட்பட்ட 10 மாவட்டங்களில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்தில் குடிசைவாழ் பகுதி மக்களிடம் தீக்கதிர் நாளிதழ் சந்தா சேர்ப்புக்காக, கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன் மற்றும் மாவட்டச் செயலாளர் எம்.இளங்கோவன், தா.பழூர் ஒன்றியச் செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.அம்பிகா உள்ளிட்ட ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சந்தா சேர்ப்பு இயக்கத்திற்காக சென்றபோது குடிசைவாழ் பகுதி மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் உணர்வுபூர்வமாக தீக்கதிர் நாளிதழுக்கு சந்தா வழங்கினர்.  ஏழை-எளிய குடிசை வாழ் பகுதி மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக உள்ள தீக்கதிர் பத்திரிகைக்கு நாங்கள் சந்தா கொடுத்து தீக்கதிர் நாளிதழை பெற்றுக் கொள்வதில் பெருமை அடைவதாத் தெரிவித்த அவர்களுடைய இந்த உணர்வும், ஊக்கமும் தீக்கதிர் சந்தா சேர்ப்புக்கு சென்றவர்களுக்கு உணர்ச்சிபூர்வமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  அதனடிப்படையில் அந்தப் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட குடிசைவாழ் பகுதி மக்கள் தீக்கதிர் நாளிதழுக்கான சந்தாவினை, மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜனிடம் வழங்கினர்.  மேலும் அப்பகுதி மக்கள் கூறும்போது, 2024 இல் வீடு இல்லாத எங்களுக்கு மனை கேட்டு போராடி, தரிசாக கிடந்த கோவில் இடத்தில் நாங்கள் குடியிருப்பதற்கு குடிசை அமைக்க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முயற்சி எடுத்து, அங்கே குடிசை அமைப்பதற்கு ஏற்பாடு செய்தனர். அப்போது அதை தடுத்து நிறுத்திய அதிகாரிகள் மற்றும் காவல்துறையை கண்டித்து எங்களுடைய குமுறல்களையும், எங்களுடைய வாழ்வாதாரத்திற்கான ஆதாரத்தையும் உருவாக்கித் தருவதற்காக போராடிய செய்தியை, தீக்கதிர் தான் வெளிக்கொண்டு வந்தது.  எனவே, அந்த தீக்கதிர் நாளிதழுக்கு சந்தா கொடுப்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். இப்போதும், பயனாளிகளாக கோவில் இடங்களிலே குடிசை அமைத்து வாழ்கிற எங்களுக்கு அவ்வப்போதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தான் பாதுகாத்து எங்களுக்கு அரணாக உள்ளது. எனவே, நாங்கள் எப்போதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும், தீக்கதிர் நாளிதழையும் மறக்க மாட்டோம். தொடர்ந்து, அதற்கு ஆதரவாக நாங்கள் இருப்போம், செயல்படுவோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.