தலைமுறை தலைமுறைக்கும் சமூக - பொருளாதார சிந்தனைகளை நினைவூட்டும் மாமேதை மார்க்ஸின் சிலை திறப்பு - ஒரு வரலாற்று நிகழ்வு!
மாமேதை காரல் மார்க்சின் 9 அடி உயரச் சிலையை, சென்னை கன்னிமாரா நூலக வளாகத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைப்பதை, இது ஒரு வரலாற்று நிகழ்வு என்று தமிழ்நாடு அரசு பெருமிதம் தெரிவித்துள் ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு செய்திக்கட்டுரை ஒன்றையும் வெளி யிட்டுள்ளது. அது வருமாறு: சென்னையின் எழும்பூர் அருங் காட்சியக வளாகத்தில் அமைந்துள்ள கன்னிமாரா பொது நூலகத்தில், தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மாமேதை காரல் மார்க்ஸின் திருவுருவச் சிலையினைத் திறந்து வைத்துச் சிறப்பிக்கும் வரலாற்று நிகழ்வு 2026 பிப்ரவரி 6 அன்று காலை 10 மணியளவில் நடைபெறுகிறது. செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் ரூபாய் 85 லட்சம் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள இந்தச் சிலை, உலகத் தொழிலாளர்களின் சிந்த னைக்கு வழிகாட்டிய மாபெரும் சிந்தனையாளரின் நினைவை என்றென்றும் போற்றிடும் அடை யாளமாக விளங்கும். ஒரு மேதையின் பிறப்பும் வளர்ச்சியும் ஜெர்மனி நாட்டின் பருசியாவில் அமைந்துள்ள ட்ரையர் நகரில் 1818 மே 5 அன்று காரல் மார்க்ஸ் அவர்கள் பிறந்தார். ஜெர்மானிய தத்துவஞானி, புரட்சிகர, பொருளாதார நிபுணர் மற்றும் வரலாற்றாசிரியர் என பன்முக ஆளுமை கொண்டவராக விளங்கிய அவர், பெர்லின் பல்கலைக்கழகத்தில் வரலாறு மற்றும் மெய்யியல் ஆகிய துறைகளில் கற்றறிந்தார். 1841 ஆம் ஆண்டில் யெனா பல்கலைக்கழகத்தில் மெய்யியலுக் கான முனைவர் பட்டம் பெற்ற மார்க்ஸ், சில காலம் இதழியல் துறையில் பணி புரிந்தார். அவரது தீவிர அரசியல் கருத்துகளின் விளைவாக ஜெர்மனியை விட்டு வெளியேறி பாரிசு நகரம் சென்றார். சிந்தனைச் செல்வத்தின் தொடக்கம் 1847-ஆம் ஆண்டில் மார்க்ஸ், ‘தத்துவத்தின் வறுமை’ என்னும் தனது முதல் நூலை வெளியிட்டார். இது அவரது அறிவுசார் பயணத்தின் முக்கிய மைல்கல்லாக அமைந்தது. பின்னர், 1848-ஆம் ஆண்டு பிரெடரிக் ஏங்கல்சுடன் இணைந்து “பொதுவுடைமை அறிக்கை” என்னும் வரலாற்றுச் சிறப்புமிக்க நூலை வெளி யிட்டார். ஒரு தொழிலாளி ஏன் தொழி லாளியாக, மேலும் மேலும் ஏழையா கிறார், ஒரு முதலாளி மேலும் மேலும் பணம் சேர்த்து ஏன் பணக்காரராகிறார் என்பதை அறிவியல் பூர்வமாக இந்நூலில் விளக்கி எடுத்துரைத்தார். உலகத் தொழிலாளர்கள் அனைவரது மனத்திலும் மார்க்ஸுக்கென்று ஓர் நிரந்தர இடத்தை இந்நூல் அவருக்கு உருவாக்கிப் பெருமை சேர்த்தது. மூலதனம் - பொருளாதார சிந்தனையின் உச்சம் 1867-ஆம் ஆண்டு காரல் மார்க்ஸ் அவர்கள் தாஸ் கேபிடல் அல்லது மூலதனம் என்னும் நூலின் முதல் தொகுதியை வெளியிட்டார். இன்றைய பொருளாதார அமைப்பு எப்படி இயங்குகிறது என்பதை இந்நூலில் விரிவாக விவரித்துள்ளார். பின்னர் அவரது மறைவுக்குப் பின், அவரது மனைவி அவர்களால் மூலதன நூலின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தொகுதிகள் வெளியிடப்பட்டன. இந்நூல் பொருளாதார சிந்தனையின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக விளங்குகிறது. உயிரோட்டமுள்ள சித்தாந்தங்கள் மாமேதை காரல் மார்க்ஸின், மார்க்ஸிய கோட்பாடுகள் இந்த மண்ணுலகில் மனிதர்கள் மனிதர் களால் வாழ்வதற்கு வழிகாட்ட முனை யும் ஒரு தத்துவக் கோட்பாடு ஆகும். ‘என்றும் நினைவில் கொள், ஒரு மனித னாகப் பிறந்தவன் பயனின்றி அழியக் கூடாது’ என்று கூறிய மாமேதை காரல் மார்க்ஸின் சித்தாந்தங்கள், இன்று வரை உயிர்ப்புடன் இருக்கின்றன. உல களவில் சமூக மற்றும் பொருளாதாரச் சிந்தனைக்குப் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய இந்த மாமேதை 1883 மார்ச் 14 அன்று மறைந்தார். ஓராண்டிற்குள் உயிர்பெற்ற காரல் மார்க்ஸ் சிலையமைப்பு காரல் மார்க்ஸ் பொருளாதாரச் சிந்தனைகளை மக்கள் அனைவரும் அறிந்திடும் வகையிலும், அவரது புகழுக்குப் பெருமை சேர்க்கின்ற வகை யிலும் தமிழ்நாடு முதலமைச்சரால் 2025 ஏப்ரல் 3 அன்று சட்டப்பேரவை யில் விதி 110-இன் கீழ் சென்னையில் அவருக்குப் புதிதாகத் திருவுருவச் சிலை நிறுவப்படும் என அறிவிக்கப் பட்டது. அந்த அறிவிப்பின் பயனாகவே இன்று இந்த வரலாற்று நிகழ்வு நடைபெறுகிறது. சிலைத் திறப்பு விழாவுடன், அங்கு சிறப்புப் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டு காரல் மார்க்ஸ் குறித்து காணொலிக் காட்சி திரையிடப்படு கிறது. தலைமுறை தலைமுறைக்கும் சிந்தனைகளை நினைவூட்டும் இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பெரு மக்கள், மேயர், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொள்கிறார்கள். கன்னிமாரா பொது நூலகம் போன்ற அறிவுச் செல்வம் நிரம்பிய இடத்தில் காரல் மார்க்ஸின் திரு வுருவச் சிலை நிறுவப்படுவது மிகவும் பொருத்தமானதாகும். அறிவுக்கும் சிந்தனைக்கும் வழிகாட்டிய இந்த மாமேதையின் நினைவை என்றென்றும் போற்றிடும் இந்தச் சிலை, தலைமுறை தலைமுறையாக மக்களுக்கு அவரது சிந்தனைகளை நினைவூட்டிக் கொண்டே இருக்கும்.
