tamilnadu

img

மகிழ்ச்சியின் பாதை - கார்த்திக் கிருபாகரன்

மகிழ்ச்சியின் பாதை

ஆலம்பட்டி சந்தைக்கு செல்வது அனை வருக்கும் பிடிக்கும். அதிலும் குழந்தை களும் விரும்பி செல்வார்கள். சந்தை யில் பொருட்களை குறைவான விலையில் வாங்க லாம். அதுமட்டுமல்லாமல் குழந்தைகளின் விளை யாட்டு பொருட்கள் நகரத்தில் கிடைப்பது போன்று  ஆலம்பட்டி சந்தையில் குறைந்த விலையில் கிடைக்கும். அந்த சந்தைக்கு செல்வது குழந்தை களுக்கு பிடிக்காமலா போகும்!. சனிக்கிழமை விடுமுறை என்றதும், ‘ஆலம்பட்டி சந்தைக்கு என்னை அழைத்துச் செல்லுங்கள்’ என்று கபிலன் தன் அப்பா குகனிடம் அடம் பிடித்துக் கொண்டிருந்தான்.  “சரி வா போகலாம்” என்று அவரும் அவனை  அழைத்துச் சென்றார். ஆனால் கூடவே சில விதிமுறைகளையும் கூறினார். அது, ‘விளையாட்டு பொருட்கள் வாங்க கூடாது.’ ‘தேவையற்ற தின்பண்டங்கள் அங்கு பார்த்து  வாங்கத் தர சொல்லி அழக்கூடாது.’  ‘முக்கியமாக ஐஸ்கிரீம் கேட்கவே கூடாது’ என்று அவர் சொல்ல, “சரி” என்றான். “எதுவுமே வேண்டாம்ன்னு சொல்லுற, அப்பறம் ஏன் சந்தைக்கு வர ?” என்றார். “எதுவும் வேண்டாம். ஆனா சந்தையை பார்க்கனும்” என்று மட்டும் சொல்லிக் கொண்டி ருந்தான். அதனால் “சரி” என்று கபிலனையும் அழைத்து கொண்டு சந்தைக்கு வந்தார். அழகான சந்தை, உள்ளே பல்வேறு கடை கள் இருந்தன. பூக்கடை, காய்கறி கடை, இறைச்சி  கடை, வீட்டு பொருட்கள் விற்கும் கடை என்று எல்லாம் தனித்தனியாக இருந்தன. அவ்வளவு மிகப்பெரிய சந்தைக்கு ஒரு வாசல்  மட்டுமே இருந்தது. மக்கள் கூட்டம் அலைமோதியது. எல்லாவற்றையும் சுற்றிப் பார்த்தபடியே, தன் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிய படியே சென்றார்கள். தன் சொல்பேச்சு கேட்டு அமைதியாக வந்த  கபிலனிடம், “உனக்கு என்ன வேனும்? சொல்லு  வாங்கி தருகிறேன்” என்றார் அப்பா. சந்தோஷமாக, “அப்பா, நீங்க சின்ன வயசுல  ஆரஞ்ச் மிட்டாய் சாப்புட்டதா சொன்னீங்களே!, இங்க அது இருக்குமா ?, எனக்கு அதுமட்டும் வாங்கி தாங்கப்பா” என்றான் கபிலன். சிரித்தபடியே, ஆரஞ்சு மிட்டாய் வாங்க, எல்லா  ஸ்விட் கடைகளிலும், மளிகை கடைகளிலும் கேட்டார். எங்கேயும், ஆரஞ்சு மிட்டாய் கிடைக்கவே  இல்லை. கடைசியாக ஒரு கடை இருந்தது. அங்கு மட்டும் கூட்டமே செல்லவில்லை. மெதுவாகச் சென்று அந்த கடைசி கடையை பார்த்தால், அது தன் பள்ளி நண்பன் வேலனின் அப்பா தர்மராஜின் கடை தான். வேலனும் அந்த கடை யில் இருந்தான். “ஹாய் வேலா, நான் உன்னை  பார்ப்பேன் என்று எதிர்பார்க்கவே இல்லை” என்றான் கபிலன். கபிலனை பார்த்த மகிழ்ச்சியில், “வா கபிலா” என்று வேலனும் சிரித்த முகத்தோடு வர வேற்றான். அது ஒரு இனிப்பு கடை தான். “வேலா, உங்க கடையில ஆரஞ்ச் மிட்டாய் இருக்கிறாதா ?” என்று கேட்டான் கபிலன். வேலனுக்கும் ஆரஞ்சு மிட்டாய் இருக்கும் இடத்தை காட்டி, “அங்க பாரு” என்றான். அதை பார்த்தவுடன் கபிலனுக்கு மகிழ்ச்சி.  வேலன் தன் அப்பாவிடம், “அப்பா கபிலனுக்கு ஆரஞ்சு மிட்டாய் எடுத்து கொடுங்க” என்றான்.  “ஓ……” என்று டப்பாவிலிருந்து எடுத்து கொடுத்தார் தர்மராஜ். மிட்டாயை வாங்கி வாயில் போட்டு, சுவையில்  சப்பு கொட்டினான் கபிலன். குகனும் ஆரஞ்சு மிட்டாய்க்கான தொகையை  அவரிடம் கொடுத்தார். கடையில் இருக்கும் மற்ற  இனிப்புகளை, மிட்டாய்களை கவனித்தான் கபிலன். என்ன ஆச்சரியம், கருப்பட்டி அல்வா,  கருப்பட்டி மைசூர் பாக், அதிரசம், வாழைப்பழ கேக் என்று வித்தியாசமாக இருந்தது. “அது என்ன வாழைப்பழ கேக்?, புதுசா இருக்கு” என்றான். “ஆமாம் இது இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட உணவு. அதுவும் வாழைப்பழத் திலே செய்த கேக்” என்று தர்மராஜ் பதில் சொன்னார். “இவ்வளவு இயற்கையான தின்பண்டங்கள் நிறைந்த இந்த கடையில் வாடிக்கையாளர்கள் கூட்டம் குறைவாகவே இருக்கிறதே!” என்றார் குகன். “இப்போது தானே நல்ல உணவுகளை மக்கள் விரும்பி சாப்பிட தொடங்கி இருக்கிறார்கள்.  நிச்சயம் மக்கள் அதிகமாக வருவார்கள்” என்றார்  தர்மராஜ்.  அப்போது ஒருவர் கடைக்கு வந்தார். “ஒரு  நிமிடம் பொறுங்க” என்று வெளியில் வந்து பக்  கத்து கடையை பார்த்த தர்மராஜ், வந்தவரிடம், ஏதோ சொல்லி பக்கத்து கடைக்கு அனுப்பி வைத்தார். அவரும் பக்கத்து கடைக்கு சென்று  வாங்கினார். இதை கவனித்த குகனுக்கும் கபிலனுக்கும்  ஆச்சரியமாக இருந்தது. “தர்மராஜ், அந்த  இனிப்பு தான் உங்கள் கடையில் இருக்கிறதே,  பின்பு ஏன் பக்கத்து கடைக்கு அனுப்பினீர்கள்” என்று கேட்டார் குகன். “சந்தையில் கடைசியாக இருக்கும் இந்த சில  இனிப்பு கடைக்குள் ஒரு வழக்கம் உண்டு.  நாங்கள் காலையில் கடையைத் திறந்ததும்,  கடை வாசலில் ஒரு நாற்காலியை வைத்துவிடு வோம். முதல் வாடிக்கையாளர் வந்து தங்கள் கடை யில் பொருளை வாங்கிச் சென்றதும், நாங்கள்  அந்த நாற்காலியை உள்ளே எடுத்து வைத்து விடுவோம். அப்படி அடுத்த வாடிக்கையாளர் கடைக்கு வந்தால், நாங்கள் கடைக்கு வெளியே வந்து  பார்த்து, எந்தக் கடையின் முன் நாற்காலி இருக்கி றதோ அந்தக் கடைக்கு கை காட்டி, ’எங்களது கடை யில் முதல் வியாபாரம் நடந்துவிட்டது. இன்னும் அந்தக் கடையில் நடக்கவில்லை. நீங்கள் தயவு செய்து உங்களுக்கு தேவையானதை அந்தக் கடையில் வாங்கி அவருக்கு உதவுங்கள்’ என்று  கூறி அவர்களை அங்கே அனுப்பி வைப்போம்” என்றார் தர்மராஜ். இவர்களின் நல்ல பழக்கங்களை ஆச்சரி யமாக கபிலன் பார்த்தான். தன் மகனின் தலையை கோதியபடி, “நல்ல பழக்கம். உங்களுக்கு என் வாழ்த்துகள் “ என்றார் குகன். சந்தையிலே கடைசி பகுதியாக இந்த பகுதி உள்ளது. அதனால் இவ்வளவு பெரிய சந்தையில் மக்கள் கடைசி கடை வரை வரு வது இல்லை. அருகில் ஒரு பாதை தெரிந்தது.  அதில் முள் செடிகள் முளைத்து அடர்ந்து கிடப்ப தால் மக்கள் யாரும் அந்த பாதையை பயன் படுத்தாமல் இருந்தனர்.  அந்த பாதையை காட்டிய தர்மராஜ், “இந்தப் பகுதியில் முள் செடியை அகற்றி,  சாலை அமைத்தால், மக்கள் இதன் வழியாக வும் வருவார்கள். அப்பொழுது கடைசி பகுதி கடைகள் எல்லாம் வியாபாரம் நடக்கும். கடை நடத்தும் அனைவரும் பயன் பெறுவார்கள். இந்த  இயற்கை உணவு மக்களிடையே பிரபலமடை யும். அது எப்போது நடக்கும் என்று தெரிய வில்லை” என்று சற்று ஏக்கமாக சொன்னார் தர்மராஜ். “நிச்சயமாக நீங்கள் நினைத்தது நிறை வேறும்” என்று தர்மராஜ்க்கு ஆறுதல் சொல்லி விட்டு, தன் மகனை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு  வந்தார் குகன். சற்று யோசித்து பின், தன் அலை பேசியின் மூலம் தன்னுடைய நண்பர் கிராம ஆய்வாளர் வெற்றியை தொடர்பு கொண்டு, சந்தை யில் நடந்த விவரங்களைச் சொல்லி, சந்தை பகுதி யின் கடைசியில் உள்ள முள் செடிகளை அகற்றி,  சாலை அமைக்க ஏற்பாடு செய்ய உதவுமாறு கேட்டார். அவரும், ‘இதை பற்றி ஏற்கனவே நான்  நகர தலைவரிடம் கூறி இருக்கிறேன். விரைந்து  செயல்படுத்துகிறேன்’ என்று உறுதி அளித்தார். ஒரு மாத காலம் தொடர்ச்சியாக இதைப்பற்றி  தன் நண்பன் வெற்றியிடம் பேசினார் குகன்.  ஒரு வழியாக அந்த பகுதியில் முள் செடிகளை  அகற்றி சாலை பணி நடக்க தொடங்கியது. அப்போது சந்தைக்கு கபிலனுடன் வந்த குகனை பார்த்த வேலனும், தர்மராஜும் மகிழ்ந்து,  ‘நன்றி’ தெரிவித்தார்கள். பின் கபிலன் அப்பாவிடம் ஆசையாக, “எனக்கு பிடிச்சதை வாங்கி தாங்கப்பா” என்றான். அவரும் சிரித்தபடியே, “உனக்கு என்ன வேண்டுமோ கேளு. அதுவும் ஆரோக்கியமான உணவாக இருந்தால் நிச்சயம் நான் வாங்கித் தருவேன்” என்றார். “எனக்கு வாழைப்பழ கேக் வேண்டும்” என்று  கேட்டான்.  “சரி வாங்கிக்கோ” என்று தர்மராஜிடம் பணம்  கொடுத்தார். உடனே தர்மராஜ் சிரித்தபடியே தொகையை வாங்கி கொண்டு, “வாழைப்பழக் கேக் எடுத்து தட்டில் வைத்து நீட்டினார். வாங்கி சுவைத்து சாப்பிட்டான் கபிலன்.