tamilnadu

img

விடுதலை பெற்ற பிள்ளையார்...! - செல்வகதிரவன்

அந்த தெருவின் இடது பக்கம் நடுப்பகுதியில் சின்னதாய் ஓரிடம். அந்த இடம் முழவதும் காட்டுக் கருவைகள் மண்டிக் கிடந்தன. ஆண்கள் பலருக்கும் அது சிறுநீர் கழிக்க ஒதுங்கும் பகுதியாக பயன்பட்டது. இரவு வேளைகளில் மது அருந்தவும் அந்த இடத்தை சிலர் உபயோகப் படுத்தினர். அதற்கு வசதியாக அங்குள்ள தெரு விளக்கை அடிக்கடி சேதப்படுத்தினர். இருள் இருந்தால் தானே செய்யக்கூடாத செயல்களைச் செய்ய ஏதுவாக இருக்கும். அது யாருக்கும் சொந்தம் இல்லாத பொதுவான இடம். அந்தக் காலத்தில் அங்கு பிள்ளையார் கோயில் ஒன்று இருந்திருக்கிறது. இன்றும் கூட பிள்ளையார், மூஞ்சுறு சிலைகள் அந்த இடத்தின் மூலையில் கிடக்கின்றன. கூர்ந்து பார்த்தால் மட்டுமே பிறரின் பார்வைக்குத் தென்படும். எந்தக் காலத்தில் இந்த பிள்ளையார் பக்தர்களுக்கு காட்சி தந்தார்… எதனால் இப்படி கேட்பாரற்றுப் போய் மண்ணோடு மண்ணாய் கிடக்கிறார்.. அக்கம் பக்கத்தாருக்கு மட்டுமல்ல.. மூத்த தெருவாசிகளுக்குக் கூடத் தெரியவில்லை. நாளாக நாளாக துர்நாற்றம் அந்த இடத்தின் இருபக்கமும் இருக்கின்ற வீடுகளை ஆக்கிரமித்தன. ஊதுபத்தி, சாம்பிராணி முதலிய வாசனை வகையறாக்கள் வைத்த பின்பும் வீச்சம் வீடடுக்குள் நுழைவதை தடுக்க முடியவில்லை.

காவல் நிலையத்தில் புகார், கலெக்டரிடம் மனு, வார்டு கவுன்சிலரிடம் முறையீடு… இப்படி எத்தனையோ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும்… அந்த சமூக விரோதிகளின் சமூக விரோத நடவடிக்கைகளை தடுக்க  முடியவில்லை. அந்த தெருவாசிகளில் முக்கியமான சிலர் இது குறித்து என்ன செய்யலாம் என்கிற ஆலோசனையில் இறங்கினார்கள். “என்னதான் மேலிட கவனத்துக்கு கொண்டு போனாலும் அதில் பிரயோ ஜனம் இருக்காது… அந்த அநாகரிக நபர்களிடம் கையூட்டு வாங்கிக் கொண்டு பேசாமல் இருந்து விடுவார்கள். இவன்களுக்கு உளவியல் ரீதியில் நெருக்கடி தந்தோம்னு வையுங்க ஒழுங்கா மரியாதையா இந்தப் பக்கமே திரும்பிக் கூட பாக்க மாட்டான்க…” “திரும்பி பாக்காதபடி அப்படி நம்மளால என்ன செஞ்சிட முடியும்…?” “தெரிஞ்ச செங்கல் சேம்பர்ல போயி பிள்ளையார் தரையில மண் ணோட மண்ணாக் கிடக்காரு. அவருக்கு மேடை கட்டி அந்த சின்னமேடை யில பிள்ளையாரையும் மூஞ்சுறு வாகனத்தையும் வைக்கலாமுன்னு விரும்புறோம்… கொஞ்சம் செங்கல் டெனானேட் பண்ணினா ஒங்களுக்குப் புண்ணியம் கெடைக்கும்னு சொல்லுவோம்… உரிமையாளர் ஒருக்காலும் மறுக்க மாட்டாரு..”

தெருவாசிகள் நான்கைந்து பேர் செங்கல் சேம்பர் ஓனரைப் பார்த்து விசயத்தை விளக்கினார்கள். செங்கல் சூளை முதலாளி முகம் சுளிக்கவில்லை. “அதனாலென்ன.. பிள்ளையார் கோயிலுக்குத்தானே கேக்குறீங்க… தந்திட்டாப் போச்சு.. செங்கல் மட்டும் வாங்கிட்டுப் போயி என்ன செய்யப் போறீங்க… கொத்தனார எங்க போய் பிடிப்பிங்க… செங்கற்களோடு கொத்த னாரையும் தேவையான சிமிண்ட்டையும் தந்து அனுப்பி வைத்தார் ஓனர். மனிதர்களுக்கு உதவி செய்வது பற்றித்தான் நம்மவர்கள் யோசிப் பார்கள்… சாமிக்கு செய்வதற்கு சளைக்க மாட்டார்கள்   அல்லவா…? சாமிக்கு செய்தால்… அதனால் நமக்கு புண்ணியம் கிடைக்கும் என்பதை முழுமையாக நம்புவோர்தானே எங்கும் நிறைந்திருக்கிறார்கள்…! நீண்ட நாட்களாய் நிலவி வந்த விவகாரத்திற்கு ஒரே நாளில் முற்றுப்புள்ளி விழுந்தது மேடை கட்டி மேடையில் விநாயகரையும், அவரது வாகனத்தையும் ஆழமாக வைத்தார் அனுபவம் மிகுந்த கொத்த னார். நகரசபை துப்புறவுத் தொழிலாளர்களின் உதவியுடன் அந்த இடம் தூய்மை படுத்தப்பட்டு… கணேசர் கம்பீரமாகக் காட்சியளித்தார்.

இந்தளவிற்கு எல்லோரும் பார்த்துப் பரவசப்படுகிற பகுதியில் ‘ஒதுங்கு வோர்’ ஒதுங்க வருவார்களா…? சமூக விரோதிகள் அந்தப்பக்கமே எட்டிப் பார்க்க வில்லை. மீறி வந்து அசுத்தப்படுத்தி; சாமி தண்டனை கொடுத்து விட்டால்… அதனை ஏற்றுக்கொள்ள யாருக்கு தைர்யம் இருக்கிறது..?. தெருவாசிகள் பிள்ளையாரைக் கும்பிட்டுப் போவது அன்றாட வழக்கமாயிற்று. தெருவிற்குள் காய்கறி விற்க வருவோர், பலூன் விற்போர், பூ வியாபாரிகள், சட்டை துணிமணி விற்போர் இத்தியாதி சிறு வணிகர்கள் பிள்ளையார் கோயிலின் முன் தனது சுமையை இறக்கி வைத்துவிட்டு… பிள்ளையாரை மூன்று சுற்று சுற்றி வலம் வந்து விபூதி குங்குமம் எடுத்து நெற்றியில் பூசிக் கொண்டு பயபக்தியுடன் வியாபாரத்தைத் தொடர்ந்தார்கள். இன்னும் சிலர் வரும் போதே மாலை வாங்கி வந்து பிள்ளையார் கழுத்தில் தாங்களே போட்டு… மண் தரை என்று கூட பார்க்காமல் விழுந்து கும்பிட்டார்கள். அங்கு வைத்திருந்த உண்டியலிலும் இயன்றளவு சில்லரைகளைப் போட்டார்கள்.

அந்த விநாயகர் கோயில் தரையில் நான்கைந்து தெருவாசிகள் அறுபது வயது தாண்டிய ஓய்வு பெற்ற அரசாங்க அலுவலர்கள்,  மாலை நேரத்தில் வந்தமர்ந்தார்கள். “ரெண்டு மாசத்துக்கு முந்தி இந்த எடம் இப்பிடி மாறும்னு சொன்னா யாராவது நம்பி இருபாங்களா…?” “நிச்சயமா நம்பி இருக்க மாட்டாங்க… சின்ன எடமாக இருந்தாலும் பாக்க அம்சமாத் தோணுது…” “தெருவுல குடியிருப்பவுங்க மட்டுமல்ல தெருக்குள்ள வியாபார வேலையா… இல்ல வேறு வேலையா வர்றவுங்க கூட இங்க வந்து இந்தப் பிள்ளையார தரிசனம் பண்ணிவிட்டு விபூதி குங்குமம் பூசிக்கிட்டுப் போறாங்க…” “சார் இன்னோரு காரியம்  பண்ணனும் சார்… ஒரு அர்ச்சகர் போட்டு காலையும் மாலையும் பூஜ நடத்தினா நல்லா இ.ருக்கும்.” “எதுக்கு சார் அர்ச்சகரெல்லாம்… அவரு சும்மாவா பூஜ பண்ணுவாரு…சம்பளம் கேப்பாரு சம்பளத்துக்கு நாம எங்க போறது.? இதுமட்டுமல்ல புரியாத மொழியில அர்ச்சன பண்ணுவாரு..அவருக்கும் அர்த்தம் தெரியாது.. கேக்கிறவுங்களுக்கும் புரியாது…. நானும் பாத்துக்கிட்டுத்தான் வர்றேன்… “ஐந்து கரத்தினை…. ஆனை முகத்தினை…” “விநாயகனே… வினை தீர்ப்பவனே…வேழ  முகத்தோனே…” .

இப்படி அவுங்களுக்குத் தெரிஞ்ச பாட்டப் பாடிக்கிட்டு… அவங்களே பிள்ளையாருக்கு மால போட்டு.. அருகம்புல் போட்டு… நல்லாத்தானே போய்க்கிட்டு இருக்கு… .இதுல பக்தருக்கும் பிள்ளை யாருக்கும் நடுவுல அர்ச்சகருங்கிற தூதுவரு எதுக்கு..?” “இல்ல சார்… அர்ச்சகர் புரியாத மொழியிலோ.. இல்ல புரிஞ்ச மொழியிலோ அர்ச்சன செஞ்சா அதுக் குன்னு ஒரு வித கம்பீரம் கிடைக்குமில்லையா..?” “ஆமா சார் சொல்றதும் சரிதான்…” அங்கிருந்த ஐந்து பேர்களில் மூன்று பேர்கள் அர்ச்சகர் வேண்டும் என்றார்கள்… இரண்டு பேர்கள் தேவை இல்லை என்றார்கள்… “சரி… சரி… இதக் கொஞ்சம் ஆறப்போட்டு கொஞ்ச நாட்கள் கழிச்சு…அலசுவோம்.. தெருவில எல்லார்கிட்டயும் அபிப்ராயம் கேட்டிட்டு முடிவெடுப்போம்..” என்கிற தினுசில் ஒரு மன தாய் முடிவு பண்ணி உருவான பிரச்சனைக்கு உடனே முற்றுப்புள்ளி வைத்து  பிரச்சனையைத் தள்ளிப் போட்டார்கள்.

புண்ணியாசனம், கணபதி ஓமம், கிரகப் பிரவேசம் முதலிய சுப நிகழ்வுகளை சாஸ்திரப்படி சம்பிரதாயம் பிசகாமல் நடத்தி தருபவர் ரமணி அடர்ச்சகர். ஏதோ ஓரளவிற்கு மாதச் செலவை ஈடுகட்டும் வகையில் ரமணிக்கு வருமானம் வந்தது. ஏற்கனவே வசித்த வீட்டில் வரு டக்கணக்கில் வாடகைகு குடியிருந்ததால்  வீட்டு உரிமையாளர் காலி பண்ணச் சொல்லி விட்டார். வீட்டில் குடியிருப்பவர் யாராக இருநதாலும் வருசக்கணக்கில் குடியிருக்க யாரும் அனுமதிப்பதில்லை. வீட்டை காலி செய்த ரமணி இந்த தெருவிற்கு வாடகைக்கு குடிவந்துவிட்டார். தெருவிற்கு குடிவந்த இரண்டாவது நாளே அந்த பிள்ளையார் கோயில் அவர் கண்களை உறுத்தத் தவறவில்லை. “காலையும் மாலையும் மணியடிச்சு பூஜை பண்ணுறேன்.. ஊதியம் ஒண்ணும் வேண்டாம்…தீபாராதனைத் தட்ல விழும் காசுகள மட்டும் எடுத்துக் கொள்ள அனுமதிச்சாப் போதும்…..” தெரு முக்கியதஸ்தர்களைப் பார்த்து கெஞ்சிக் கேட்டார் ரமணி.

“சம்பளம் வேண்டாம்ங்கிறாரு…தெனமும் ரெண்டு தடவ மணியடிச்சு பூஜை பண்ணி இங்கு எளிமையான பிள்ளையார் கோயில் இருப்பதை வேறு தெருவச் சேந்தவுங்களும் தெரிஞ்சுக்கிடட்டும்…… என்று ரமணியை தினமும் இரண்டு வேளை பூஜை செய்ய தெரு முக்கியஸ்தர்கள் அனுமதித்தார்கள். காலை எட்டு மணி மாலை ஏழு மணி ஆகிய  நேரங்களில் கணீர் குரலில் கணபதிக்கு அர்ச்சனை செய்யும் பணி ஆரம்பமாயிற்று. அவரின் சமஸ்கிருத ஆராதனைக்கு பொருள் புரிகிறதோ இல்லையோ பெரும்பாலானவர்களை அது  ஈர்த்தது. ரமணியின் அர்ச்சக பாணிக்கு ஜனங்களிடம் வரவேற்பு இருந்தது. அதனால் ரமணி தன்னைக் ஹீரோவாகக் கருதிக் கொண்டார். அந்த சின்னஞ்சிறிய பிள்ளையார் கோயிலில் வேலைப்பாடுகள்  பல தினுசு களில் செய்து மாற்றங்களைக் கொண்டு வந்தார்.  தெரிந்த காண்டிராக்டர்க ளை அணுகி… காம்பவுண்டு சுவர் கோயிலைச் சுற்றிக் கட்டினார்.  இரும்பு கதவு தயாரிப்போரைப் பார்த்து கோயிலுக்குக் கதவுகள் போட்டார். இது பற்றி தெரு முக்கியஸ்தர்கள் யாரிடமும் தெரிவிக்கவில்லை. யோசனைகளும் கேட்கவில்லை.

பூஜை பண்ண பெர்மிசன் கொடுத்தா இவர்பாட்டுக்கு நம்மகிட்ட எதுவும் கலக்காமல் தன்னோட இஷ்டப்படி என்னன்னமோ பண்ராரு..”  அவர்களின் மனதுகளில் நெருடல் ஏற்பட்டாலும் சாமிக்குத்தானே செய்கிறார் என்று சமாதானம் அடைந்தார்கள். தெருக்காரர்களுக்கும் தெருவில் வியாபாரம் செய்ய வருவோருக்கும்  விநாயகர் கொஞ்சம் கொஞ்சமாக அன்னியப்பட்டுப் போனார். எவரும் கோயிலுக்குள் நுழைந்து பிள்ளையார் சிலைப் பக்கத்தில் போயி சாமி கும்பிட்டு சாமிக்கு மாலை வாங்கிப் போட்டு… உண்டியலிலும் காசு போட்டு வருவது திடீரென நின்று போயிற்று. இருசக்கர  வாகனங்களில் போவோர் வாகனத்தை விட்டு இறங்கி சாமி கும்பிட்டுப் போகும் பழக்கம் காணாமல் போனது. நடுத்தர வர்க்கத்தினர் ஒயிட் காலர்வாசிகள் ஆகியோர் மட்டும் ரமணி கோயிலைத்  திறக்கிற போது உள்ளே வருகிறார்கள்.. மற்றப்படி ஜனநடமாட்டம் மெல்ல மெல்ல குறைந்து பக்தர்களுக்கும் பிள்ளை யாருக்கும் பெரிய இடைவெளி விழுந்தது.

“என்ன சார் பிள்ளையாரை விட்டு  ஏழை ஜனங்கள்  விலகத் தொடங்கிட்டாங்க”  “ஏழை வினாயகர் ஏற்றம் பெற்ற விநாயகர் ஆகிப்  போனார்… எல்லாருக்கும் காட்சி தந்தவர் இன்னக்கி நாலு பக்க காம்பவுண்ட்டு சுவருக்குள் அடைபட்டுப்  போனார்..” “அர்ச்சகர் ரமணிக்கு எடுத்தக் கொடுத்தோம். அவரு மடத்தப் பிடுங்கிக் கிட்டாரு..” “சாதாரண பிள்ளையாரை காசு சம்பாரிச்சுத் தரும் பிள்ளையாரா மாத்திடக் கூடாது. பக்தி பரவசத்தோட சாமி கும்பிடுற பக்தனால யாருக்கும் தொந்தரவு வராது… சாமி பேரச் சொல்லி சம்பாரிக்கிறானே அவன் கொடுக்கிற அவஸ்தையத் தாங்க முடியாது..” “அப்படி என்ன பண்ணிடுவான்….”

“அதாவது  வம்ப வெல கொடுத்து வாங்குவான்.. அடுத்த பிள்ளை யார் சதுர்த்தி வரும்போது… இங்க பெரிய உருவத்தில பிள்ளையார் செல செஞ்சு வைப்பான்… பெறகு மதவாதிகளக் கூப்பிட்டு… கும்பல் சேத்துக்கிட்டு பிள்ளையாரத் தூக்கிட்டு ஊர்வலம் போறது… நாம தாயாப் பிள்ளையா பழகுற இஸ்லாமிய வீடுகளுக்கு முன்னாடி ஆட்டம் போடுறது.. வெடி வெடிக்கிறது…” “வெசச்செடின்னு தெரிஞ்ச பெறகு அதப் பிடிங்கிப் போட்டுற வேண்டி யதுதானே.. எதுக்கு வளரவிட்டு மரமாக்கி அருவாள் கோடாரிகளக் கொண்டு வெட்டணும்… அடுத்த விநாயகர் சதுர்த்தி வரைக்கும் எதுக்கு காத்திருக்கணும்..?” “என்ன செய்யலாமுன்னு சொல்றீங்க.?” “அர்ச்சகர் ரமணியக் கூப்பிட்டு கோயில் சாவிய வாங்கிடுவோம்.. கோயில எப்பவும்  போல தெறந்து வச்சிடுவோம்.. முன்ன மாதிரியே ஜனங்க விருப்பப்படி விருப்பப்பட்ட நேரத்தில சாமியக் குமபிட்டுப் போகட்டும்.. “ஏகமனதாக அதே நேரத்தில் மிக உறுதியான முடிவை தெருவில் வாழும் முக்கியப் பிரமுகர்கள் எடுத்தார்கள். அவர்கள் ரமணியைப் அழைத்து கோயில் சாவியைக் கேட்க் மறு பேச்சுப் பேசாமல் எந்த எதிர்ப்பும் காட்டாமல் சாவியைக் கொடுத்து விட்டார். ஆம்.தரமுடியாது என்று மறுக்க ரமணியால் என்ன காரணங்களைத் தெரிவிக்க முடியும்..?

;