tamilnadu

img

ஓரணியில் திரளும் விவசாயி-தொழிலாளி - தபன் சென்

இன்றைய தினம் இந்திய தொழிலாளர் வர்க்கம் மிகப்பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளது.  அதே வேளையில், உழைக்கும் மக்கள் வலிமையுடன் முன்னேறிச் செல்வதற்கான வாசல்களும் நிறைய தென்படுகின்றன.

நெருக்கடியில் முதலாளித்துவம்

இந்தியாவில் முதலாளித்துவம் முன்னெப்போதும் இல்லாத அளவில் மிகப்பெரும் நெருக்கடியில் தத்தளிப்பதையும், அதன் தாக்கம் அரசியல், பொருளாதாரம், சமூகம் என அனைத்து நிலைகளிலும் எதிரொலிப்பதையும் வெளிப்படையாகவே நம்மால் காண முடிகிறது.  இதன் நீட்சியாகவே கார்ப்பரேட்மயமும், வகுப்புவாதமும் இணைந்த தனது அதிகாரத்தையும், மேலாதிக்கத்தையும் நிலைநிறுத்திக் கொள்ளும் வகையில் இந்திய ஆளும் வர்க்கம் பாசிசப் போக்குடனும், சர்வாதிகார அணுகுமுறையுடனும் உழைக்கும்  மக்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்களைத் தொடுத்து வருகிறது. ஆனால் ஆட்சியாளர்களின் தாக்குதல்களை முறியடிக்கும் வகையில், உழைக்கும் மக்களின் உரத்த குரலுடனான உறுதிமிக்க எதிர்வினையும், ஆவேசமும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. தன்னெழுச்சியாக நாட்டின் பல பகுதிகளிலும் கிளர்ந்து எழும் இத்தகைய போராட்ட அலைகளை முறைப்படுத்துவதும், அதன் வழியே உள்ளூர் மட்டத்திலும், தேசிய அளவிலும்  ஒருங்கிணைந்த, வலிமையான போராட்ட, பிரச்சார இயக்கங்களை நடத்து வதுமே இன்றைய தினம் நமது முக்கியக் கடமையாக உருவெடுத்துள்ளது.  

அண்மைக் காலமாக பல்வேறு போராட்ட இயக்கங்களில் உழைப்பாளி மக்களின் பெரும் திரளான பங்கேற்பும், உத்வேகமும் நம்பிக்கை தருவதாக அமைந்துள்ளன. இவ்வாறு எழும் புதிய சூழலை உள்வாங்கிக்கொண்டு, போராட்ட வியூகங்களை வகுப்பதிலும், மாற்றத்தை விரும்பும் மக்களின் எண்ண ஓட்டங்களை ஒருமைப்படுத்துவதிலும் தொழிற்சங்க இயக்கம் தனிக்கவனமும், அக்கறையும் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம்.

மூன்று போராட்ட வியூகங்கள்

இத்தகைய பின்னணியிலேயே, சிஐடியு மூன்று முனைகளில் வருங்கால இயக்கங்களை மேற்கொள்வதற்கான முக்கியத்துவம் வாய்ந்த அணுகுமுறையுடன், ஒன்றுபட்ட போராட்டங்களை நடத்துவதற்கான திட்டங்களைத் தீட்டியுள்ளது. முதலாவதாக, ஆங்காங்கே எழுந்துநிற்கும் பிரச்சனைகளுக்கு ஏற்ப சுயேச்சையான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவது;  இரண்டாவதாக, வாய்ப்புள்ள அனைத்து இடங்களிலும் பிற சங்கங்களை யும், அமைப்புகளையும் இணைத்து, கூட்டு இயக்கங் களை வலிமையான முறையில் நடத்தி அதை தேசிய அளவிலும் விரிவுபடுத்துவது; மூன்றாவதாக, பரந்து பட்ட அளவில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் ஒருங்கிணைப்பை உருவாக்கி, அதன் நீட்சியாக அனைத்துத் தரப்பினரையும் பாதிக்கக்கூடிய பொது வான பிரச்னைகளை முன்னிறுத்தி, வலிமையான, ஒன்றுபட்ட  போராட்டங்களை விவசாயிகள்-தொழி லாளர்கள் பங்கேற்புடன் நாடு தழுவிய அளவில் முன்னெடுப்பது.  மேற்சொன்ன மூன்று அம்சங்களைக் கருத்திற்கொண்டு சிஐடியு தனது வியூகங்களை வகுத்துள்ளது.

தொழிலாளி - விவசாயி ஒற்றுமை

தொழிலாளர்கள் - விவசாயிகள் ஒற்றுமையும், போராட்டக் களத்தில் இருவரும் ஒன்றிணைவதும் இது காறும் இல்லாத வகையில் ஏற்கனவே புதிய எல்லை களைக் கடந்துள்ளது. மேலும் புதிய சிகரங்களைத் தொடும் வகையில் இந்த ஒற்றுமை இன்னும் விரிவாக பலப்படுத்தப்பட வேண்டும்.  தொழிலாளர்களும், விவசாயிகளும் அவரவர் பிரச்சனைகளை மையப்படுத்தி இயக்கங்களை நடத்துவதோடு, பரஸ்பரம் ஒருவர் போராட்டத்திற்கு இன்னொருவர் ஆதரவளிப்பதும், நேசக்கரம் நீட்டுவதும் அண்மைக் காலமாக, பெரிதும் நம்பிக்கையூட்டும் விதத்தில் அதிகரித்து வந்துள்ளது.  இருவர்தம் போராட்டங்களிலும் பொதுவான தோர் தன்மை புதைந்து கிடப்பதை இத்தருணத்தில் நினைவிற்கொள்ள வேண்டும்.  தொழிலாளர்கள், விவசாயிகள் இரு தரப்பினருமே, மிகப்பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கண்ணசைவிற்கு ஏற்ப அரசின் கொள்கைகளை அமைத்துக்கொண்டு, தனது  வகுப்புவாத நிகழ்ச்சி நிரலையும் தீவிரமான செயல்படுத்தத் துடிக்கிற ஆட்சியாளர்களின் படுமோச மான தாக்குதல்களால் பாதிப்புகளைச் சந்தித்து வருகிறார்கள்.  வகுப்புவாத சக்திகளுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் இடையேயான வஞ்சகம் நிறைந்த பிணைப்பானது, நாட்டின் விவசாயம், தொழில், சேவைத்துறை என அனைத்தின் மீதும் தாக்குதல் தொடுத்து தேசத்தின் பொருளாதாரத்தையும் நிலை குலையச் செய்கிறது.  கல்வி, சுகாதாரம், மருத்து வம், சமூக நலன் என அனைத்தும் கார்ப்பரேட்டுகளின் இலாபவெறிக்கு வேட்டைக்காடாக மாற்றப்படுவதும், சாதாரண, எளிய மக்களின் வாழ்வாதாரம் நசுக்கப்படு வதும் தொடர்கதையாய் நீடிக்கிறது.  இத்தகைய பின்னணியிலேயே, சாமானிய மக்களுக்கும் நாட்டின் ஒட்டுமொத்த நலனுக்கும் தீங்கினை இழைத்து வருகிற  பொதுவான எதிரியை நாம் அடையாளம் காண முடிந்துள்ளது.

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தபின் சமீபத்திய ஆண்டுகளில், மக்களிடையே பிரிவினையைத் திட்டமிட்டு ஏற்படுத்துகின்ற ஆர்எஸ்எஸ் மற்றும் அது சார்ந்த அமைப்புகளின் பிளவுவாதச் செயல்பாடுகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன.  இத்தகைய இழிவான நடவடிக்கைகளுக்கு ஒன்றிய அரசின்  நேரடி ஆதரவும், ஆசிகளும் உண்டு என்பதைக் கூறவும் வேண்டியதில்லை.  வலதுசாரி பிரிவினை சக்திகளுக்கு ஆதரவு நல்கி ஊக்குவிப்பது என்பது உலகம் முழு வதும் நவீன தாராளமயக் கொள்கைகளைத் தீவிர மாகச் செயல்படுத்தும் அனைத்து முதலாளித்துவ நாடு களாலும் பின்பற்றப்படக்கூடிய ஒரு அணுகுமுறையாக இருந்து வருகிறது.  ஆட்சியாளர்களின் கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளை எதிர்க்கும் மக்களின் போராட்டங்களை நசுக்கிடவும், திசை திருப்பிடவும் இத்தகைய சூழ்ச்சிகளில் அரசுகள் ஈடுபடுகின்றன.  வகுப்புவாத மதவெறி சக்தி களுக்கு ஆக்கமும், ஊக்கமும் வழங்கி, சமூகத்தில் பதற்றச் சூழலை ஏற்படுத்துவது இந்தியாவில் முதலாளித் துவம் பிரத்யேகமாகப் பின்பற்றுகிற வணிகச் சின்னம் ஆகும்.  அதற்கான அரசியல் முகவர்களாக இன்றைய பாஜக ஆட்சியாளர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.  

இத்தகு இக்கட்டான சூழலில், நவீன தாராள மயத்துக்கு எதிரான ஒன்றுபட்ட போராட்டத்தைத் தீவிரப்படுத்துகிற அதே நேரத்தில், பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் வகுப்புவாத சக்திகளுக்கு மிடையேயான நெருங்கிய பிணைப்பையும், நச்சுத்தன்மை நிறைந்த அதன் நயவஞ்சகச் செயல்பாடுகளையும் அம்பலப்படுத்தி, அதற்கெதிராக, அனைத்து உழைப்பாளி மக்களையும் ஓரணியில் திரட்ட வேண்டிய வரலாற்றுக் கடமையும் நம் முன்னே  உள்ளது. ஆகவே, உலகின் வளங்களை உருவாக்கு கிற, தேசத்தின் உற்பத்தி வளர்ச்சிக்குத் தமது தலை யாய பங்களிப்பை வழங்குகிற இரண்டு மாபெரும் சக்திகளாம் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் ஒன்றுபட்ட போராட்ட இயக்கங்களின் மூலம், நச்சுத்தன்மை நிறைந்த இந்துத்துவா வகுப்புவாத கும்பலின் தீய நோக்கங்களைத் தவிடுபொடியாக்கவும், தாராளமய எதிர்ப்புப் போரைத் தொடரவும் நாம் உறுதியேற்கவேண்டியுள்ளது.

தொடர் சந்திப்புகள்

இத்தகு இலக்கை நோக்கியே, இந்திய தொழிற்சங்க மையம்(சிஐடியு), அகில இந்திய விவசாயிகள்  சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம்  ஆகிய அமைப்புகளின் முக்கியப் பொறுப்பாளர்கள் கலந்துகொள்ளும் சிறப்புக் கூட்டம், சிஐடியு-வின் முன்முயற்சியுடன் முறையாக அடிக்கடி நடைபெற்று வருகிறது. பரந்துபட்ட உழைப்பாளி மக்களின் பெரும்  திரளான பங்கேற்புடன், ஊரகப்பகுதிகள் முதல் பெரு நகரங்கள் வரை மூன்று அமைப்புகளும் இணைந்து, மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளை முன்னிறுத்தி, கூட்டுப் பிரச்சார இயக்கங்கள் தொலைநோக்குப் பார்வை யுடன் எழுச்சிகரமாக நடத்தப்பட்டு வருகின்றன.  

இந்திய உழைப்பாளி வர்க்கத்தின் இத்தகைய இடை விடாத முயற்சிகளின் முக்கியமானதொரு திருப்பு முனையாக, 2018-ம் ஆண்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை எட்ட முடிந்தது.  அந்த ஆண்டு ஆகஸ்ட் 9-ம் தேதியன்று நடைபெற்ற ‘சிறை நிரப்புப்  போராட்டத்தின்‘ வீச்சு, கிட்டத்தட்ட நாட்டின் அனைத்து  மாவட்டங்களிலும் எதிரொலித்தது.  இதைத் தொடர்ந்தே,  இன்றைக்குச் சரியாக நான்கு வருடங்களுக்கு முன்னால், செப்டம்பர் 5, 2018-ல்,  தலைநகர் டில்லியை ஸ்தம்பிக்க வைத்த, பல இலட்சம் பேர் பங்கேற்ற, ‘தொழிலாளர்கள் - விவசாயிகள் முற்றுகைப் பேரணி ‘(மஸ்தூர் - கிஸான் சங்க்ரேஷ் ரேல்லி) எழுச்சியுடன் நடைபெற்றது. சுதந்திர இந்தியாவில் முதன் முறையாக, உழவர்களும், தொழிலாளர்களும் மிகக் கணிசமான எண்ணிக்கையில் நாடு முழுவதிலுமிருந்து பயணித்து, தேசத்தின் தலைநகரில் சங்கமித்த இந்த  நிகழ்வு, வரும் காலங்களில் இம்மூன்று அமைப்புகளின் முன்னெடுப்பில் கூட்டு இயக்கங்கள் வெற்றிகரமாக நடத்தப்படுவதற்குக் கட்டியம் கூறுவதாய் அமைந்திருந்தது.

25 கோடிப் பேர் பங்கேற்ற இயக்கம்

இவ்வாறாக மிகவும் உணர்ச்சிமயமாக நடந்தேறிய இவ்விரு இயக்கங்களின் தொடர்ச்சியாகவே, 2019, 2020 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் அகில இந்திய அளவிலான பொது வேலைநிறுத்தப் போராட்டங்கள், 25 கோடிக்கும் அதிகமான மக்களின் பங்கேற்புடன் வெற்றிகரமாக நடைபெற்றன.  பல்வேறு வடிவிலான போராட்ட இயக்கங்களும் நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ந்து நடந்தவண்ணம் உள்ளன. இத்தகு முன்னெடுப்புகளுக்கு மத்தியில் தான், நாட்டின் பல பகுதிகளிலும் செயல்பட்டு வரும் விவசாய சங்கங்கள் தங்களுக்குள் ஒரு ஒருங்கிணைவை உருவாக்கிடும் பணியில் ஈடுபட்டன. அகில இந்திய விவசாயிகள் சங்கம், இதில் முன்னிலைப் பங்கை வகித்து வந்தது. தொழிற்சங்கங்களின் முழுமை யான ஆதரவோடு விவசாயிகள் நாடு தழுவிய அளவில் நடத்திய போராட்ட, பிரசார இயக்கங்களின் பலனாகவே,  ஆர்எஸ்எஸ்-பாஜக ஆட்சியாளர்கள், மிகுந்த ஆக்ரோஷத்துடன் மீண்டும் மீண்டும் திணிக்க முயன்ற  ‘நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டத்தை‘ இறுதியில் கைவிட வேண்டிய கட்டாயம் உருவாயிற்று. தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளிடையே இயல்பாய் உருவான இந்த ஒற்றுமையுணர்வின் வெளிப்பாடாகவே, கொரோனா நோய்த்தொற்றை யொட்டிய பொது முடக்கக் காலத்திலும், நாட்டின் பல பகுதிகளில், உழைக்கும் மக்கள் தங்கள் வாழ்வா தாரத்தை உறுதிப்படுத்தக் கோரி, தன்னெழுச்சியான போராட்டங்களில் ஈடுபடலாயினர்.  பொது முடக்கச் சூழலிலும் கார்ப்பரேட் நலனில் மட்டுமே கவனம் செலுத்தி  வந்த ஆட்சியாளர்கள், ஒரு கட்டத்தில் உழைக்கும் மக்களின் உரிமைக்குரலுக்குச் செவிமடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாயினர்.

விவசாயிகளின் மகா எழுச்சி

நாடு தழுவிய அளவில் பொது முடக்கம் அமலில் இருந்த நேரத்திலேயே, நாடாளுமன்றத்தையும் அவ மதித்து, ஜனநாயக மாண்புகளையும் சிதைத்து, ஆர்எஸ்எஸ்-பாஜக ஆட்சி, இந்தியாவின் ஒட்டுமொத்த விவசாயத்தையும் கார்ப்பரேட்டுகளின் கைகளில் ஒப்படைக்கக் கூடிய வகையில் மூன்று வேளாண் சட்டங் களை அவசர அவசரமாக நிறைவேற்றி, அமல்படுத்த  முற்பட்டது.  மின்னுற்பத்தியை முழுவதுமாகத் தனியாரிடம் ஒப்படைக்கும் மின்சார சட்டதிருத்தம், 2020-யும் இந்திய மக்கள் மீது திணித்திட யத்தனித்தது.

இந்திய விவசாயத்தைப் பாதுகாக்கவும், தேசத்தின் அடிநாதமாக விளங்கும் வேளாண்மைத் தொழிலைக் கார்ப்பரேட்மயமாக்கும் ஆட்சியாளர்களின் சூழ்ச்சி யினை முறியடிக்கவும் வேண்டி, விவசாயிகள் நடத்திய  வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டம், இந்திய உழைக்கும் வர்க்கத்திற்குப் புதியதோர் வெளிச்சத்தையும், புத்துணர்வையும் வழங்கியுள்ளது என்று கூறினால் அது மிகையல்ல.  2020-ம் ஆண்டின் இறுதியில், நவம்பர் 26 அகில இந்திய வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து ஆரம்பமான விவசாயிகள் போராட்டம், எத்தனையோ இன்னல்களையும், இடையூறுகளையும் எதிர்கொண்டு, எவ்விதத் தொய்வுமின்றி, ஓராண்டுக்கும் மேலாக நீடித்தது.  உலக அளவில் பலரையும் வியந்துநோக்கி விவாதிக்கச் செய்த மகத்தான இந்தப் போராட்டத்திற்கு, ஆர்எஸ்எஸ்-பாஜக ஆட்சியாளர்கள் அடிபணிய நேரிட்டதும், மூன்று தேசவிரோதச் சட்டங்களும் திரும்பப்பெறப்படுவதாக பிரதமரே அறிவித்ததும், உழைப்பாளி மக்களின் ஒற்றுமைக்கும் உறுதிக்கும் கிட்டிய மாபெரும் வெற்றி ஆகும்.

சம்யுக்த கிசான் மோர்ச்சா

அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் ஐக்கிய விவசாயிகள் முன்னணி அறைகூவலுக்கிணங்க புது டில்லியிலும், நாட்டின் பல பகுதிகளிலும் நடைபெற்ற பல்வேறு வடிவிலான போராட்டங்களுக்கு, சிஐடியு-வும், ஏனைய தொழிற்சங்க அமைப்புகளும் முழு ஆதரவும், எல்லா விதமான ஒத்துழைப்பும் தொடர்ந்து நல்கி வந்துள்ளன.  இது போன்றே, கடந்த பல மாதங்களாக, (2022 மார்ச்சில் நடைபெற்ற இரண்டு நாள் அகில இந்திய பொது வேலைநிறுத்தம் உள்பட), தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும் பல்வேறு போராட்ட இயக்கங்களுக்கு, சம்யுக்த கிசான் மோர்ச்சாவும் நேசக்கரம் நீட்டி ஆதரவு  தெரிவித்து வருகிறது.  போராட்டக் களத்தில் இயல்பாக எழுந்துள்ள இந்த ஒற்றுமையும், ஒருமைப்பாட்டுணர்வும் பாட்டாளி மக்களின் பொது எதிரியாக விளங்கும் கார்ப்பரேட்-வகுப்புவாதக் கும்பல் அரசாங்கத்தின் ஒவ்வொரு நகர்வையும் கண்காணித்து வீழ்த்திட வலிமையான அடித்தளமாய் அமைந்திடும்.

உழவர்கள், தொழிலாளர்களின் ஒற்றுமை மற்றும் ஒன்றுபட்ட இயக்கங்கள் குறித்து சிஐடியு ஆரம்பம் முதலாகவே, தெளிவான புரிதலுடன், தொலைநோக்குப் பார்வையுடன் அணுகி வருகிறது.  கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்காக தேசத்தின் வளங்கள் யாவும் கொள்ளையடிக்கப் படுவதும், சாதாரண, எளிய மக்களின் வாழ்வின் மீதும், வாழ்வாதாரங்களின் மீதும் தீவிரமான தாக்குதல்கள் தொடுக்கப்படுவதும் அனைவருக்கும் நிதர்சனமாகத் தெரிகிற அப்பட்டமான உண்மை யாக உள்ளது.  மிகப்பெரும் வன்மத்துடன் செயல்படுத்தப் படுகிற, நாட்டு நலனுக்கும் மக்கள் நலனுக்கும் பெரும்  தீங்கினை விளைவிக்கிற, நவீன தாராளமயக் கொள்கை யும், அதற்குப் பக்கபலமாய் விளங்கி வலு சேர்த்துக் கொண்டிருக்கும் மூர்க்கத்தனமான வகுப்புவாத நிகழ்ச்சி நிரலுமே இன்றைய நெருக்கடிகளுக்கு ஊற்றுக்கண்ணாக இருந்து வருகின்றன.  இத்தகைய பின்னணியிலேயே, தொழிலாளர்கள்-விவசாயிகளின் வலிமை வாய்ந்த ஒற்றுமையை நிலைநாட்டுவதும், அதன்  வழியே கூட்டுப் போராட்டங்களைப் புதிய சிகரங்களை நோக்கி முன்னெடுத்துச் செல்வதும் இன்றைய காலத்தின் முக்கியத் தேவையாக உள்ளது.

இந்தப் பின்னணியிலேயே, கடந்த ஜூலையில் நடை பெற்ற சிஐடியு, விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழி லாளர் சங்கம் அமைப்புகளின் கூட்டுக் கூட்டம்,  நாட்டைச் சூழ்ந்துள்ள நெருக்கடியின் தன்மையை விரிவாக ஆய்வு செய்து, ஒன்றுபட்ட கூட்டு இயக்கங்களைத் தொடர்ச்சியாக, தீவிரமான முறையில் முன்னெடுத்துச் செல்வது என்று தீர்மானித்தது.  மூன்று கட்ட போராட்டத் திட்டங்களும் வடிவமைக்கப்பட்டன.  அதன்படியே, முதலாவதாக, கடந்த ஆகஸ்ட் 1 முதல் 14 வரையிலான இருவார காலம் நாடு தழுவிய அளவில் மூன்று அமைப்புகளும் இணைந்த பிரசாரக் கூட்டங்களும், மக்கள் சந்திப்பு இயக்கங்களும் நடை பெற்றன.  ஆகஸ்ட் 9 ‘ வெள்ளையனே வெளியேறு‘ இயக்க அனுசரிப்பையொட்டி, ஆர்எஸ்எஸ் / பாஜகவின் மக்கள்  விரோத, கொடுங்கோன்மை ஆட்சிக்கு எதிரான போராட்ட இயக்கங்கள் நடத்தப்பட்டன.  அது போன்றே, இந்திய சுதந்திரத்தின் பவள விழாவையொட்டி, விடுதலையின் மாண்புகள் யாவற்றையும் சீர்குலைத்து, நாட்டின் ஜனநாயக, குடியரசு விழுமியங்கள் மீதும், இந்திய மக்களின் மகத்தான ஒற்றுமைப் பண்பின் மீதும்  கொடிய தாக்குதல்களை அரங்கேற்றி வரும் ஆட்சி யாளர்களின் தேசவிரோதச் செயல்பாடுகளை மக்களி டையே அம்பலப்படுத்தும் தன்மையிலும் இருவார கால பிரசாரங்கள் நடத்தப்பட்டன.

இன்று தேசியக் கருத்தரங்கம்

இரண்டாம் கட்டமாக, இன்று செப்டம்பர் 5, 2022-ல் புது தில்லி டல்கோத்ரா உள் விளையாட்டரங்க வளாகத்தில், சிஐடியு, விச, விதொச அமைப்புகள் இணைந்து தேசிய அளவிலான சிறப்புக் கருத்தரங்கம் நடைபெறுகிறது.  நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் கணிசமான எண்ணிக்கையில் மூன்று அமைப்புகளையும் சார்ந்த முன்னணி செயல்பாட்டாளர்கள் இந்தக் கருத்தரங்க நிகழ்வில் பெரும் திரளாகக் கலந்துகொள்கின்றனர்.

2023ல் துவக்கத்தில் பிரம்மாண்ட முற்றுகை

நிறைவாக, வருகிற 2023-ம் வருட துவக்கத்தில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் போது, ‘தொழி லாளர்கள்-விவசாயிகள் முற்றுகைப் பேரணி 2.0‘ (மஸ்தூர்-கிஸான் சங்கர்ஷ் ரேலி 2.0) எழுச்சிகரமான முறையில் தலைநகர் புது டில்லியில் நடத்துவது என்றும், அதற்கு முன்னோட்டமாக நாட்டின் அனைத்து மையங் களிலும் பிரச்சாரக் கூட்டங்களை நடத்துவது என்றும் மூன்று  அமைப்புகளும் முடிவு செய்துள்ளன.

இத்தகைய கூட்டு இயக்கங்கள், தேசத்தைக் கார்ப்ப ரேட் கனவான்களின் முழுமையான வேட்டைக்காடாக மாற்றிடத் துடிக்கும் ஒன்றிய ஆட்சியாளர்களின் தீங்கு நிறைந்த கொள்கைகளைத் தடுத்துநிறுத்தி முறியடிப்ப தற்கான வெகுமக்கள் போராட்டங்களின்  வலிமை நிறைந்த அடித்தளமாக அமையப்போவது உறுதி.

- தமிழில்: க. மன்னன்