முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு ஒத்தி வைக்கப்படாது நீதிமன்றம் திட்டவட்டம்
சென்னை, அக்.10- தமிழகத்தில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெறவுள்ள போட்டி தேர்வு ஒத்திவைக்கப்படாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரி யர் பணியிடங்களுக்கு அக்டோபர் 12 ஆம் தேதி போட்டி தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூலை மாதம் அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதில் புதிய பாடத்தின் அடிப்படையில் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேர்வு உத்தேசமாக நவம்பர் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முன்கூட்டியே தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் தங்களால் தேர்வுக்கு தயா ராக முடியவில்லை என்றும், தேர்வினை தள்ளி வைக்க வேண்டும் என்றும் விண்ணப்பதாரர்கள் பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த 2 லட்சத்து 36 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு நுழைவுச்சீட்டு தயாரிக்கப்பட்டதாகவும், ஓஎம்ஆர் விடைத்தாள்கள் தேர்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது. அரசு தரப்பு வாதத்தை ஏற்ற நீதிமன்றம், முதுநிலை ஆசிரி யர் தேர்வுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது. எனவே, ஆசிரியர் தேர்வு ஒத்தி வைக்கப்படாது; நாளை மறுநாள் (அக்.12) திட்டப்படி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு நடைபெறும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.