tamilnadu

ஆளுநர் உத்தரவை அண்ணா பல்கலை. நிராகரிக்க சிண்டிகேட் பரிந்துரை

ஆளுநர் உத்தரவை அண்ணா பல்கலை. நிராகரிக்க சிண்டிகேட் பரிந்துரை

சென்னை, அக். 23 - அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக ஆர். வேல்ராஜ் இருந்தபோது, தனியார் கல்லூரி களுக்கு அங்கீகாரம் வழங்குவதில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது.  இந்த முறைகேடு விவகாரத்தில் முன்னாள் துணைவேந்தர் வேல்ராஜுக்கு தொடர்பு இருப்பதாகவும், துணை வேந்தராவதற்கு முன்பாக, இயந்திரவியல் துறையின் கீழ், எரிசக்தி ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றியபோதும் வேல்ராஜ் நிதி  முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டுஎழுந்தது. இதுதொடர்பான வழக்கு விசாரணையின் காரணமாக வேல்ராஜ் ஓய்வு பெற இருந்த 2024 ஜூலை 31 அன்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். ஆனால், வேல்ராஜின் இடைநீக்கத்தை ரத்து செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டம் புதனன்று நடைபெற்றது. இதில், வேல்ராஜை பணியிடை நீக்கம் செய்ய முடிவு எடுக்கப்பட்டதுடன், முன்னதாக ஆளுநர் பிறப்பித்த உத்தரவை நிராகரிக்கவும் அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் பரிந்துரை செய்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ள சிண்டிகேட் உறுப்பினரும் எழும்பூர் தொகுதி எம்எல்ஏ-வுமான பரந்தாமன், ஆளுநரின் உத்தரவை நாங்கள் செயல்படுத்தவில்லை. ஏனென்றால் ஆளுநருக்கு அதிகார வரம்பு இல்லை. அதன் மீது வழக்கு தொடரவும் அதிகாரம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.