tamilnadu

img

சர்க்கரை ஆலை கழிவால் கெடிலம் ஆற்றில் செத்து மடியும் மீன்கள்

சர்க்கரை ஆலை கழிவால் கெடிலம்  ஆற்றில் செத்து மடியும் மீன்கள்

கடலூர், செப். 22 - கெடிலம் ஆற்றில் கலக்கும், சர்க்கரை ஆலை கழிவுகளால் ஏராளமான மீன்கள் செத்து மிதக்கிறது. துர்நாற்றம் வீசுவதால் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.  கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப் பெரிய நீர் நிலைகள் கெடிலம் மற்றும் தென் பெண்ணை ஆறு. இதில், கெடிலம் ஆறு ஒரு காலத்தில் பாசன ஆறாக இருந்தது. தற்பொழுது ஆக்கிரமிப்புகளாலும், குப்பைகளை கொட்டுவதாலும், கழிவு கொட்டுவதாலும் மாசடைந்து சுகாதார சீர்கேட்டில் சிக்கித் தவிக்கிறது. சீரழிந்து கிடக்கும் இந்த ஆற்றின் ஒரு புறம் கடலூர் மாநகர மக்கள் வசிக்கின்றனர்  மறுபுறம் 50க்கும் மேற்பட்ட சுற்று வட்டார கிராமங்கள் வயல்வெளிகளுடன் உள்ளன. நெல்லிக்குப்பம் இஐடி பாரி சர்க்கரை ஆலை, அதன் கழிவு நீரை பில்லாளிதொட்டி கிராமம் வழியாக சுமார் 50 ஆண்டுகளாக கெடிலம் ஆற்றில் விடுகிறது. அது கடலில் கலந்து வருகிறது. 15 ஆண்டுகளுக்கு முன் கெடிலம் ஆற்றின் கம்மியம்பேட்டை பகுதியில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த ரூ. 7.50 கோடியில் தடுப்பணை கட்டப்பட்டது. இந்த தடுப்பணை கட்டப்பட்ட பின், ரசாயன கழிவு கலந்த தண்ணீர் அங்கேயே தேங்கி கிடக்கிறது. தற்போதும் பெய்த மழையை கருத்தில் கொண்டு இஐடி பாரி சர்க்கரை ஆலையின் சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் கெடிலம் ஆற்றில் கலக்கப்பட்டதை தொடர்ந்து காம்மியம்பேட்டை தடுப்பணையில் தற்போது நுரையுடன் ஆகாயத்தாமரையும் சேர்ந்து அந்த நீர் முழுவதுமாக மாசடைந்து உள்ளது. தேங்கி உள்ள நீரில் ஏராளமான மீன்கள் செத்து மிதக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இறந்த மீன்களில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் ரெயின்போ உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட குடியிருப்பு  பகுதி கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நிலத்தடி நீரை மீட்டெடுக்க கழிவு நீர் கலப்பதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், தடுப்பு அணையில் தகவுகள் அமைத்து நீரை முழுமையாக வெளி யேற்ற வேண்டும், இறந்து கிடக்கும் மீன்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.