tamilnadu

img

14 தங்கப்பதக்கங்களை பெற்ற மாணவியை, வீட்டிற்கு சென்று பாராட்டிய நாகைமாலி எம்எல்ஏ.,

நாகப்பட்டினம் ஜூலை 14-  இளங்கலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்பில் 14 தங்கப்பதக்கங்களை பெற்ற ஐஸ்வர்யா என்ற மாணவியை வீட்டிற்கு நேரடியாகச் சென்று சால்வை அணிவித்து வாழ்த்தியிருக்கிறார் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினரும்,மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்ற குழு உறுப்பினருமான நாகைமாலி.  வங்கக் கடலின் கரையோர கிராமங்களில் ஒன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கிற நம்பியார் நகர் மீனவ கிராமம். அக்கிராமத்தில் மீன் பிடிப்பு தொழில் செய்கின்ற ஜெயபால் என்பவரின் மகள் ஐஸ்வர்யா வரலாற்றுச் சாதனையைப் படைத்திருக்கிறார். எளிய குடும்பத்தில் பிறந்தாலும் கல்வி என்கிற ஆயுதத்தை பயன்படுத்தி புகழின் உச்சத்தை தொட்டுவிட முடியும் என்பதற்குச் சான்றாக ஐஸ்வர்யா தான் படித்த இளங்கலை  மீன்வள அறிவியல் பட்டப் படிப்பில் 14 தங்கப் பட்டயத்தை பெற்றிருக்கிறார். ஜெயபால்-சுபா தம்பதியினருக்கு இரண்டு மகள்கள்,இதில் இளைய மகன் தான் ஐஸ்வர்யா, பாராட்டு மழையில் நனைந்து வரும் ஐஸ்வர்யா இந்த சாதனையை வெகு இலகுவாக எடுத்துக்கொண்டு, அடுத்த பயணத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்.

தொடக்கக் கல்வி, உயர்நிலை மற்றும் மேல்நிலைக் கல்வியை  நாகப்பட்டினம் நகரத்தில் இருக்கிற அரசு உதவி பெறும் பள்ளியிலேயே படித்திருக்கிறார். மேல்நிலை வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்ற அவர் தூத்துக்குடியில் உள்ள மீன்வள பல்கலைக்கழகத்தில் இளங்கலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்பில் சேர்ந்து அப்படிப்பினை நிறைவு செய்து  தமிழ்நாடு ஆளுநரால் 14 தங்க பட்டயங்களை பெற்று சாதித்துக் காட்டியிருக்கிறார். கடலும் கடல் சார்ந்த வாழ்க்கை முறையை கொண்டிருந்தாலும் தன்னுடைய கல்வியை அதனூடாக பொருத்தி அதில் வெற்றி பெறுவது அச் சமூகத்தின் வெற்றியாக பார்க்கப்படுகிறது. எத்தனையோ பட்ட மேற்படிப்புகள் இருக்க  தன்னுடைய தந்தை நடத்தி வரும் தொழில் தொடர்பான துறையை தேர்ந்தெடுத்து அதில் வெற்றிக் கனி பறிப்பது பார்ப்பவரை வியக்க வைக்கும் செயலாகும்.  மீன்வளப் பல்கலைக்கழகத்தின் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி மட்டுமல்லாது ஆகச்சிறந்த மாணவி என்ற நட்பெயரையும் பெற்றிருக்கிறார். எவ்வித பின்புலமும் இல்லாத ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து இமாலய சாதனையை படைத்து,தன்னைப் போன்று படித்துக் கொண்டிருக்கும் அச்சமூக பெண்களுக்கு முன்னின்று வழிகாட்டிக் கொண்டிருக்கிறார். குறிப்பாக மீனவர் சமூகத்தில் இருக்கின்ற பெண் குழந்தைகளுக்கு கல்வி கிடைப்பதில் மிகுந்த சிரமம் உண்டு. சுமார் கடந்த 25 ஆண்டுகளுக்கு உட்பட்டு தான்  மேல்நிலைக் கல்வியை முடித்து கல்லூரிகளில் படித்து வருகின்றனர். 

18 வயது நிறைவடைந்த பெண்களுக்கு  பெற்றோர்கள் திருமணம் செய்து வைப்பதில் அதிக கவனம் செலுத்துகின்றனர். கல்லூரி படிப்பு கனவாகி விடுகிறது. தற்போது அதில் நல்ல முன்னேற்றம் கண்டிருந்தாலும் வெகு சிலரில் ஒரு சிலரே இதுபோன்ற சாதனையை படைக்க முடிகிறது. தன்னுடைய மகள் படைத்திருக்கும் சாதனையை நெகிழ்ச்சியோடு அன்பை பரிமாறிக் கொள்கிறார் அவருடைய தந்தை. தன்னைப் போன்று இன்னும் பல பெண்கள் இதுபோன்ற சாதனைகளை நிகழ்த்த வேண்டும் என்று பெருமை பட தன்னம்பிக்கையுடன்  பேசுகிறார் ஐஸ்வர்யா.இல்லத்தரசியான அவருடைய தாய் ஐஸ்வர்யாவின் வளர்ச்சி கண்டு நெகிழ்ந்திருக்கிறார். அவர் இன்னும் பல உயரங்களைக் கடந்து மற்ற பெண்களுக்கு எடுத்துக்காட்டாக இருந்து வாழ்வின் உச்சிக்குச் சென்று புகழ் வெளிச்சம் பெற வேண்டும், என்று கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி அம் மாணவிக்கு வாழ்த்துக்களை கூறினார்.

-ஆதி.உதயகுமார்.