tamilnadu

img

ஆணவப் படுகொலை, பாலியல் கொடுமையை தடுக்க சட்டம் இயற்றுக!

சேலம்,டிச.2- யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி உள்ளிட்ட  ஒன்றிய அரசு தேர்வுகளில் வினாத்தாள்களை தமிழ் உள்ளிட்ட அனைத்து அட்டவணை மொழி களிலும் வெளியிட்டு தேர்வு நடத்திட வேண்டும்.  ஆணவப்படுகொலை மற்றும் பெண் களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை தடுத்து நிறுத்தும் வகையில் புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தி டிசம்பர் 16 அன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப் படுகிறது.  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ்குமார் தலைமையில் செவ்வாயன்று  சேலத்தில் நடைபெற்றது. இந்த  கூட்டத்தில் அகில இந்திய செயல் தலைவர் ஏ.ஏ.ரஹீம், மாநிலச் செயலாளர் எஸ்.பாலா உள்ளிட்ட மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி உள்ளிட்ட ஒன்றிய அரசு தேர்வர்களின் வினாத்தாள்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டுமே உள்ளது. இது இந்தி பேசாத மாநில மக்களை தவிர்த்து மற்ற மாநில மக்களின் அடிப்படை உரிமையை பறிக்கும் செயலாகும். இந்திய நாட்டின் தேசிய மொழியாக இந்தி இல்லாத  நிலையில் ஒன்றிய அரசின் முக்கிய தேர்வு களை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் நடத்துவது அநீதியாகும். ஏற்கனவே மருத்துவ, ரயில்வே பணிக்கான தேர்வுகள் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட  அட்டவணை மொழிகளில் நடக்கிறது. இது அனைத்து மாநில மக்களின் பங்களிப்பை அதிகரிக்கிறது. எனவே, ஒன்றிய அரசு தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட அனைத்து அட்டவணை மொழிகளிலும் நடத்திடவேண்டும். கொரோனா பேரிடரை காரணம் சொல்லி கடந்த இரண்டு ஆண்டுகளாக டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடத்தப்படாத நிலையுள்ளது. எனவே தமிழக அரசு உடனடியாக டிஎன்பி எஸ்சி தேர்வுகளை நடத்திட முன்வரவேண்டும்.

ஆணவப் படுகொலைகளை தடுத்து நிறுத்துவதற்கு தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என நீண்ட நாட்களாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு ஜனநாயக அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.  தமிழக அரசு உடனடியாக ஆணவப்படு கொலை தடுத்து நிறுத்துவதற்கு தனிச்சட்டம் இயற்றிட வேண்டும்.  தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் மீது அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகள்  அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. போக்சோ சட்டத்தில் கைது செய்யப்படும் நபர்கள் பிணையில் வருவதை தடுத்திட விரைந்து சாட்சியங்களை திரட்டி தண்டனை பெற்றுத் தருவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் டிசம்பர் 16 அன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில்  தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

டிச.20 திருவாரூரில் வெற்றி விழா

வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் எனக் கோரி  விவசாயிகள் நடத்திய  வீரம் செறிந்த போராட்டத்தில் பங்கேற்ற அனை வரையும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பாக பாராட்டுகிறோம். இது போராடுகின்ற அனைவருக்கும் புதிய உத்வே கத்தை அளித்துள்ளது. இந்தப் போராட்ட வெற்றியை பறைசாற்றும் விதமாக டெல்டா பகுதியில் திருவாரூர் மாவட்டத்தில் பிரம்மாண்டமான வெற்றி விழாவை டிசம்பர் 20  ஆம் தேதி நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

;