tamilnadu

img

சாவர்க்கர், ஜாதகம் குறித்த பாடங்களை சேர்க்க உத்தரவிடுவதா? யுஜிசி-யின் வரைவு

சாவர்க்கர், ஜாதகம் குறித்த பாடங்களை சேர்க்க உத்தரவிடுவதா? யுஜிசி-யின் வரைவு அறிக்கையை எரித்து மாணவர்கள் போராட்டம்!

சென்னை, ஆக. 26 - பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) வெளியிட்டுள்ள பிற்போக்கான பாடத்திட்ட வரைவு அறிக்கையை எரித்து சென்னைப் பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். பல்கலைக்கழக பாடத்தில், ஜாதகம் உள்ளிட்ட பிற்போக்கான கருத்துக்களை புகுத்தும் வகையில் ‘கற்றல் முடிவுகள் அடிப்படையிலான பாடத்திட்ட அமைப்பு (எல்ஓசிஎப்)’ என்ற வரைவு அறிக்கையை யுஜிசி வெளியிட்டுள்ளது. இந்த வரைவு அறிக்கையை திரும்பப் பெறக் கோரி இந்தியா முழுவதும் இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனையொட்டி சென்னை பல்கலைக்கழக வளாகத்தில், இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் செவ்வாயன்று (ஆக. 26) யுஜிசி வரைவு அறிக்கையின் நகலை எரிக்கும் போராட்டம் நடைபெற்றது.  மாணவர் சங்கத்தின் மத்திய சென்னை மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நடை பெற்ற இந்தப் போராட்டத்தில், மாநிலத் தலைவர் எஸ். மிருதுளா, மாவட்டச் செயலாளர் தமிழ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். வணிகவியலுக்கும் அர்த்த சாஸ்திரத்திற்கும் என்ன சம்பந்தம்? எஸ். மிருதுளா கேள்வி போராட்டத்தின் போது, சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ். மிருதுளா, செய்தியாளர்களுக்கு பேட்டியளித் தார். அப்போது அவர் கூறியதாவது: “எல்ஓசிஎப் அமைப்பானது, 9 பாடங்களுக்கு உருவாக்க வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு பாடத்திட்டத்திலும் ஆர்எஸ்எஸ் கருத்தியலை புகுத்தும் வகையில் அறிவியலுக்கும், உண்மைக்கும் மாறான தகவல்களை சேர்க்க பரிந்துரைத்துள்ளது. குறிப்பாக, விடுதலைப் போராட்டத்தை காட்டிக்கொடுத்த வி.டி. சாவர்க்கரின் கட்டுரையை பாடத்திட்டத்தில் இணைக்கப் பரிந்து ரை செய்துள்ளது. இது உண்மையான விடுதலைப் போராட்டத் தியாகிகளை அவமதிக்கும் செயலாகும். வணிகவியலில், அர்த்தசாஸ்திரத்தை இணைக்க பரிந்துரைத்துள்ளனர்.  ஒன்றிய அரசு பொறுப்பேற்றது முதல் கல்வியில் மதவாதத்தையும், பழமைவாதத்தையும் புகுத்தி வரு கிறது. அதன்தொடர்ச்சியாகவே இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. முனை வர் பட்ட ஆய்வுகளைக் கூட, காவி மயத்தை வழிமொழியக் கூடியதாக இருந்தால் தான் அனுமதிக்கும் நிலைக்கு பல்கலைக் கழகங்களை தள்ளியுள்ளன. இந்த எல்ஓசிஎப் மீது கருத்து கூறுவதற்கு ஒரு மாதம் மட்டுமே கால அவகாசம் அளித்துள்ளனர். அதனை நீட்டிக்க வேண்டும். எங்களைப் பொறுத்தவரை, வரைவு அறிக்கை யை முழுமையாக திரும்பப் பெற  வேண்டும் என்பது தான் கோரிக்கை யாகும்.”  இவ்வாறு எஸ். மிருதுளா கூறினார்.