tamilnadu

img

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான அறிவிப்பை அரசு வெளியிட வேண்டுகோள்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான அறிவிப்பை அரசு வெளியிட வேண்டுகோள்

புதுக்கோட்டை, செப். 21-  செப்டம்பர் மாத இறுதிக்குள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் க.ஜெயராம் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் சு.ரா.சுரேஷ் பேசினார். ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் மா.குமரேசன் உரையாற்றினார்.  போராட்டத்தை ஆதரித்து தோழமைச் சங்க நிர்வாகிகள் பேசினர். மாநில மகளிர் அணிச் செயலாளர் து. வாசுகி நிறைவுரையாற்றினார். முன்னதாக மாவட்ட துணைத் தலைவர் ராமதிலகம் வரவேற்க, மாவட்டப் பொருளாளர் சா.ராஜா நன்றி கூறினார். செப்டம்பர் மாத இறுதிக்குள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும். தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஆசிரியர்களை பணிவரன்முறை செய்திட வேண்டும். ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரந்தர அடிப்படையில் உடனடியாக நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.