tamilnadu

ஆவணங்களை சரிபார்த்த பிறகே பத்திரப் பதிவு செய்ய வேண்டும்

சென்னை,டிச.23- ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட மனைப் பிரிவுகளை மட்டுமே பத்திரப் பதிவுக்கு ஏற்க வேண்டும் என்றும் மனைப்பிரிவு ஆவணங்களை சரிபார்த்த பிறகே பத்திரப்பதிவு செய்ய வேண்டும் என்றும் பதிவுத்துறை தலைவர், சார் பதிவாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.  கடந்த ஆண்டில் முந்தைய தலைமைச் செயலாளர் வெளியிட்ட அரசாணையில், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் 500 சதுர மீட்டருக்கு மேல் அல்லது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வீடுகளை கொண்ட குடியிருப்புகளை சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனங்கள், நில மேம்பாட்டு நிறுவனங்கள் பதிவு செய்வது அவசியம். இதுதவிர தமிழக அரசின் வரன்முறைத் திட்டத்தின் கீழ் வரன்முறைப்படுத்தப்பட்ட மனைப் பிரிவுகளையும் மனைப் பிரிவு மேம்பாட்டாளர்கள் பதிவு செய்ய வேண்டும்.

தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்யாமல் மனைப் பிரிவுகளை விற்பனை செய்ய வாய்ப்புள்ளது. அவ்வாறு பதிவு செய்யப்படாமல் விற்கப்படும் மனைப் பிரிவுகளில் பிரச்சனைகள் ஏற்படும்போது, அவற்றை வாங்கியவர்கள் எந்த இழப்பீடும் கோர இயலாது. எனவே ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டதற்கான ஆவணத்தை சரிபார்த்த பின்னரே, மனைப் பிரிவுக்கான ஆவணத்தை பத்திரப் பதிவுக்கு ஏற்க வேண்டும் என்று அனைத்து சார் பதிவாளர்களுக்கும் தமிழக பதிவுத்துறை தலைவர் அறிவுறுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.  இந்த அரசாணையை சுட்டிக்காட்டியுள்ள பதிவுத் துறைத் தலைவர், உரிய ஆவணங்களை சரிபார்த்த பிறகே பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்று சார் பதிவாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

;