ஆர்.சச்சிதானந்தம் எம்.பி.யின் கோரிக்கை ஏற்பு திருவனந்தபுரம் - மதுரை அம்ரிதா விரைவு ரயில் இராமேஸ்வரம் வரை நீட்டிப்பு
திண்டுக்கல், அக்.16- திருவனந்தபுரம் முதல் மதுரை வரையிலான அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரயிலை இராமேஸ்வரம் வரை நீட்டிக்க வேண்டும் என்ற திண் டுக்கல் மக்களவை உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டது. தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங்கிடம் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி தென்னக ரயில்வேயில் மேற்கொள்ள வேண்டிய புதிய ரயில் சேவைகள் குறித்து திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் வலியுறுத்தினார். அதில், கோயம்புத்தூரிலிருந்து, பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல் வழியாக இராமேஸ்வரத்திற்கு புதிய ரயில் இயக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தற்போது, தென்னக ரயில்வே திருவனந்தபுரத்திலிருந்து பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல் வழியாக செல்லும் அம்ரிதா விரைவு ரயில் இராமேஸ்வரம் வரை செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தத்தின் இந்த கோரிக்கையின் வெற்றியை மக்கள் வரவேற்றனர்.
