தள்ளுவண்டி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
திருச்சிராப்பள்ளி, செப். 25- திருச்சியில் தள்ளுவண்டி வியாபாரிகள் சங்கம் சார்பில் மரக்கடை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தரைக்கடை சங்க மாவட்டத் தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், தரைக்கடை சங்க மாவட்டச் செயலாளர் செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கடந்த 13 ஆம் தேதி மரக்கடையில் த.வெ.க. தலைவர் விஜய் நடத்திய பிரச்சார பொதுக்கூட்டத்தில் மரக்கடை பகுதியில் உள்ள மர சாமான்களை சேதப்படுத்திச் சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பொருட்களை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தள்ளுவண்டி வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
