புதுகை மருத்துவக் கல்லூரி சாலையில் தெரு விளக்கு அமைக்க வேண்டும் வாலிபர் சங்கம் கையெழுத்து இயக்கம்
புதுக்கோட்டை, செப். 9- புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி செல்லும் சாலையில் தெருவிளக்கு அமைத்துத் தர வேண்டும் என வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், செவ்வாய்க்கிழமை கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட மச்சுவாடியில் இருந்து, அரசு மருத்துவக் கல்லூரிக்குச் செல்லும் சாலையின் இருபுறங்களிலும் அடர்ந்த காட்டுப் பகுதிகளாக உள்ளன. அதனால், இரவு நேரங்களில் வன விலங்குகளும், பாம்புகளும் சாலையை கடந்து செல்லும் நிகழ்வு சாதாரணமாக உள்ளது. மேற்படி சாலை புதுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூர் செல்லும் பிரதான சாலையாக உள்ளது. மேலும், மருத்துவக் கல்லூரிக்கு 24 மணி நேரமும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்லும் பரபரப்பான சாலையாக உள்ளது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையின் இரு புறங்களிலும் தெரு விளக்குகள் இல்லை. இதனால், இந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன. மேலும், வன விலங்குகள் மற்றும் பாம்புகளின் அச்சுறுத்தலும் உள்ளன. எனவே, மச்சுவாடியில் இருந்து அரசு மருத்துவக் கல்லூரி வரை சாலையின் இரு புறங்களிலும் மின்விளக்கு வசதி செய்துதர வேண்டும் என புதுக்கோட்டை மாநகராட்சியை வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பொதுமக்களிடம் செவ்வாய்க்கிழமை கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. வாலிபர் சங்கத்தின் புதுக்கோட்டை மாநகரத் தலைவர் ஆர்.தீபக் தலைமையில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில், துணைச் செயலாளர் நித்தீஷ், நகரக்குழு உறுப்பினர்கள் கார்த்திகாதேவி, கோபாலகிருஷ்ணன், புவனேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கையெழுத்துகள் அடங்கிய கோரிக்கை மனுவை, புதுக்கோட்டை மாநகராட்சி ஆணையரிடம் சங்க நிர்வாகிகள் அளித்து விரைவில் தெருவிளக்கு அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.