வீட்டு வரி ரசீதை மாற்றி வழங்கிய அதிகாரிகள் ஊராட்சி அலுவலகம் முன்பு போராட்டம்
நாமக்கல், ஜூலை 1- வீட்டு வரி ரசீதை வேறொருவர் பெயருக்கு மாற்றம் செய்து வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஒன்றியம், 85 கவுண்டம்பாளையம் ஊராட்சி,5 ஆவது வார்டுக்குட்பட்ட ஆறுமுகம் என்பவர், கடந்த 50 வருடத்துக்கு மேலாக தொடர்ச்சியாக வீட்டு வரி ரசீது தனது பெயரில் வாங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில், அதே ஊரைச் சேர்ந்த ராமசாமி என்பவர், போலியான ஆவணங்களை கொடுத்து ஆறுமுகத்தின் வீட்டு வரி ரசீதை பெயர் மாற்றி முறைகேடாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நிலத்தின் உரிமையாளரான ஆறுமுகத்தின் பேரன் மோகன், அவரது பெயருக்கு ரசீது மாற்றம் செய்து தாருங்கள் என்று 20க்கும் மேற்பட்ட முறை ஊராட்சி அலுவலகம் சென்றும், ரசீதை மாற்றி தராமல் அதிகாரிகள் அலைகழித்துள்ளனர். இதன்பின் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் லோகமணிகண்டனிடம் மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் தவறான ஆவணங்களை வைத்து ரசீது வழங்கிய அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். சொத்துக்கு உரிமையாளரின் பெயரில் வீட்டு வரி வசதி வழங்க வேண்டும், என வலியுறுத்தி சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு.சுரேஷ் தலைமையில் திங்களன்று ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, புதனன்று (இன்று) மோகன் பெயரில் வீட்டு வரி ரசீது வழங்கப்படும், என எழுத்துபூர்வமாக உறுதியளித்தனர். அதன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.