tamilnadu

img

கடல் அரிப்பால் மீனவர் நிலங்கள் கடலுக்குள் மூழ்கும் அபாயம்

இராமநாதபுரம், செப்.25- இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா கீழமுந்தல் கடற்கரை ஓரங்களில் அரசு அனுமதியின்றி அமைக்கப்படும் தனியார் ரிசார்ட்டு களால் மிகப்பெரிய அளவில் கடல் அரிப்பு ஏற்பட்டு மீனவர்கள் பயன்பாட்டு நிலங்கள் கடலுக்குள் மூழ்கியுள்ளதாக கடல் தொழிலாளர் சங்கம் (சிஐடியு) தெரிவித்துள்ளது.  இதுதொடர்பாக, சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.கே.கணே சன், மாவட்டச் செயலாளர் எம்.கருணா மூர்த்தி ஆகியோர் செப்டம்பர் 23 அன்று கீழமுந்தல் மீனவ கிராமத்தை நேரில் பார்வையிட்டு, பாதிப்புகள் குறித்து  அங்குள்ள மக்களிடம் கேட்டறிந்தனர்.  பின்னர் இருவரும் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடலாடி தாலுகா கீழமுந்தல் கடற்கரை ஓரங்களில்  மிகப்பெரிய அள வில் கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் மீனவர்கள் பயன்பாட்டு நிலங்கள் முழுமையாக கடலுக்குள் மூழ்கியுள்ளன.   வசதிபடைத்த சிலர் மீனவர்களின் வறுமை நிலையை பயன்படுத்தி, பட்டா நிலங்களை ஒரு ஏக்கர் நிலத்திற்கு ரூ.50 ஆயிரத்துக்கும் குறைவான விலை கொடுத்து வாங்கியுள்ளனர். தற்போது அதில் அரசின் எந்தவித அனு மதியுமின்றி ரிசார்ட்டுகள் அமைத்து வரு கின்றனர். இதனால் அவர்கள் தங்கள்  பட்டா நிலம் கடலுக்குள் இருப்பதையும் சேர்த்து அடைக்க முயன்று வரு கின்றனர். 

மேலும் மீனவர்களுடன் மோதல் நிலையை ஏற்படுத்தி வருகின்றனர். இத னால் ஏற்படும் சட்டம்-ஒழுங்கு பிரச்ச னையை காவல்துறையும் வருவாய் துறையும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கு மாறாக தனி யார் முதலாளிகளுக்கு சாதகமான நிலையை மேற்கொண்டு வருகின்றன.  மன்னார் வளைகுடா தீவுகளில் பனை, தென்னை மரங்களை பாது காக்க தவறியதுபோல், இங்கும் பனை மரங்களை வளர்க்க வனத்துறை தவறி யது. கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் செய்வது போன்று தற்போது ஆயிரக் கணக்கில் பனை விதைகள் விதைக்கும் முயற்சியில் ஈடுபட்டும் வருகிறது.  எனவே, கடல் அரிப்பை தடுத்திட  சுமார் 300 மீட்டர் அளவு பட்டா  நிலத்தை அரசே கையகப்படுத்தி வனத்துறை மூலமாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதில் ஒரு பகுதியை  மீனவர் பயன்பாட்டிற்கும் ஒதுக்கி கொடுக்க வேண்டும்  ஆனால், தற்போது லாபம் ஒன்றை மட்டும் குறிக்கோளாக கொண்டு தனியார் முதலாளிகள் தங்கள் பட்டா நிலங்களில் மணல் தீடைகளை சமன் செய்து ரிசார்ட்டுகள் அமைப்பதை அரசு நிர்வாகங்கள் தடுத்து நட வடிக்கை மேற்கொள்ளாதது மட்டு மன்றி ரிசார்ட் முதலாளிகளுக்கு துணை போகிறது.

மேலும் இப்பகுதியில் ‘T’ வடிவில் கடலுக்குள் கட்டப்பட்டு வரும் பாலம்  மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் செயலாகும். ஏற்கனவே தனுஷ்கோடி யில் முகுந்தராயர் சத்திரத்தில் இதே  போன்று கட்டப்பட்டுள்ள பாலத்தின் நிலை எந்த நிலையில் உள்ளது என்பதை மாவட்டத்தின் மீன் வளத்துறையும் மாவட்ட ஆட்சியர் நிர்வாகமும் கவனத்தில் எடுத்து கொள்ளாதது வியப்பாகவுள்ளது. எனவே உடனடி நடவடிக்கையாக தற்போது நடைபெற்று வரும் பணிகள் நிறுத்தப்படுவது நல்லது.  இப்பகுதியில், தூண்டில் வளை வை அமைத்து கொடுக்க தமிழக அர சும் மாவட்ட ஆட்சியர் நிர்வாகமும் இப் பகுதி மீனவர்களிடம் கலந்தாலோச னை செய்து  உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  இக்கோரிக்கைகளை அரசும், அரசு துறை நிர்வாகங்களும் கவனத்தில் எடுத்து கொள்ள தவறும் பட்சத்தில், கடல் தொழிலாளர் சங்கம் இப்பகுதி மக்களுடன் இணைந்து போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.

;