tamilnadu

img

தூய்மைப் பணியாளர்கள் மீது காவல்துறை வன்முறை - கைது!

தூய்மைப் பணியாளர்கள் மீது காவல்துறை வன்முறை - கைது!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

சென்னை, ஆக. 14 - சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியா ளர்கள் 13 நாட்களாக தொடர்ந்து நடத்தி வந்த போராட்டத்தை, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் காவல்துறை நள்ளிரவில் வன்முறையுடன் முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. சென்னை மாநகராட்சி மண்டலம் 5 மற்றும் 6இல் சுகாதாரப் பணிகளை தனியார் நிறு வனத்திற்கு ஒப்படைக்கும் முடிவை எதிர்த்து ரிப்பன் மாளிகை முன்பு கடந்த 13 நாட்களாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதே முக்கிய கோரிக்கையாகும். அரசு தரப்பில் 8 கட்டங்களாக நடைபெற்ற பேச்சு வார்த்தைகளும் தோல்வியில் முடிந்த நிலை யில், புதன்கிழமை (ஆக.13)  அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் நடந்த இறுதி பேச்சுவார்த்தையும் பலனளிக்கவில்லை. நீதிமன்ற உத்தரவு இதற்கிடையில், தேன்மொழி என்பவர்  தொடர்ந்த பொதுநல வழக்கின் விசார ணையில், தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா  மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அடங்கிய அமர்வு, “போராட்டம் என்ற பெயரில் நடைபாதை மற்றும் சாலையை மறித்து பொதுமக்களுக்கு இடையூறாக போராடுவதை அனுமதிக்க முடியாது” என்றும், போராட்டக்காரர்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும் காவல்துறைக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து, முதல் ரிப்பன் மாளிகையை சுற்றி ஆயிரக்கணக்கான காவலர்கள் குவிக்கப்பட்டனர். நள்ளிரவு 12 மணியளவில் தொடங்கிய கைது நட வடிக்கையில் இறங்கிய காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர். அவர்களை கீழ்கட்டளை, நந்தம்பாக்கம், ஆதம்பாக்கம், சைதாப்பேட்டை, வேளச்சேரி, மடுவாங்கரை, பரங்கிமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள திருமண மண்ட பங்கள் மற்றும் சமுதாயக் கூடங்களில் அடைத்து  வைத்தனர். கைது செய்யப்படும் போது காவல்துறையினர் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சிலர், குறிப்பாக பெண்கள் மயக்கமடைந்த காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. வேலைவாய்ப்பு  இந்நிலையில், ஆகஸ்ட் 31 வரை பணியில் வந்து சேரும் தூய்மைப் பணியாளர்களுக்கு கட்டாய பணி வழங்கப்படும் என ராம்கி என்கிற தனியார் நிறுவனம் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது. தனியார் ஒப்பந்த நிறுவனம் மொத்தம் 1,900 தொழி லாளர்களுக்கு ஊதியம், வருங்கால வைப்பு நிதி, காப்பீடு உள்ளிட்ட சலுகைகளுடன் பணிப் பாதுகாப்பு வழங்கும் என அறிவித்துள்ளது.  இதனிடையே, போராட்டம் நடத்திய பணி யாளர்கள் சார்பில் உய ர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.  காவல்துறையினர் நடத்திய வன்முறை தாக்குதல் மற்றும் கைது சம்பவத்திற்கு சிபிஎம், சிபிஐ, விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். முதல்வரின் அறிவிப்பு இந்நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் “தூய்மைப் பணியாளர்கள் மாண்பை திமுக அரசு ஒரு போதும் விட்டுக்கொடுக்காது” என்று  தெரிவித்துள்ளார். தூய்மைப் பணியாளர் களுக்கான புதிய நலத்திட்டங்களை அறி வித்துள்ள முதல்வர், காலை உணவு, உயர் கல்வி ஊக்கத்தொகை, சுய தொழில் உதவி, 10  லட்சம் ரூபாய் காப்பீடு, 30 ஆயிரம் வீடுகள் போன்ற திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களை காவல்துறை மூலம் நள்ளிரவில் கொடூரமாக தாக்கி அராஜகமாக கைது செய்ததை கண்டித்தும், கைது செய்த அனைவரையும் உடனடியாக விடுதலை விடுதலை செய்ய வேண்டும் தூய்மைப்பணிகளை தனியாரிடம் கொடுப்பதை கைவிட வேண்டும் என்று வியாழனன்று (ஆக.14) எழும்பூர் ராஜரத்தனம் ஸ்டேடியம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சென்னை மாவட்டக்குழுக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் க. கனகராஜ், தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர். வேல்முருகன், வட சென்னை 41-ஆவது வட்ட மாமன்ற உறுப்பினர் பா. விமலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, சென்னையில் கைது செய்யப்பட்ட தூய்மை பணியாளர்களை சந்திப்பதற்காக காஞ்சிபுரத்தில் இருந்து சென்னைக்கு வருகை தந்த சாம்சங் தொழிற்சங்க தலைவர் இ. முத்துக்குமார் மற்றும் சங்க நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்து சுங்குவார் சத்திரம் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பல்வேறு பிரிவில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் சிறையில் அடைக்க முயற்சித்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து காஞ்சிபுரத்தில் சிபிஎம் சார்பில் மாவட்டச் செயலாளர் கே.நேரு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையடுத்து, முத்துக்குமார் உள்ளிட்டோரை காவல்துறையினர் விடுதலை செய்தனர்.