ஓய்வூதியர்கள் மனிதச் சங்கிலி போராட்டம்
கும்பகோணம், ஜூலை 25- ஒன்றிய - மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் உச்சி பிள்ளையார் கோவில் அருகில் மனித சங்கிலி போராட்டம், ஒருங்கிணைப்பாளர் ராஜகோபாலன் தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்ட தலைவர்கள் பக்கிரிநாதன், கோவிந்தராஜு, மாவட்டச் செயலாளர் ஜெயராமன், வட்டத் தலைவர் துரைராஜ், வட்டச் செயலாளர் பக்கிரி சாமி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குருசாமி, கோபாலகிருஷ்ணன், நகர வங்கி ஓய்வூதியர் கூட்டமைப்பு பொறுப்பாளர் கவுதமன், செயலாளர் ராமமூர்த்தி, தலைவர் சேகர், சிஐடியு மாவட்டத் தலைவர் கண்ணன் மற்றும் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். மனித சங்கிலி போராட்டத்தில், நிலுவையில் உள்ள 12 மாத அகவிலைப்படி, கடந்த ஜூலை மாதம் முதல் 4 சதவீதம் கூடுதல் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும். 70 வயது பூர்த்தியான ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர். திருவாரூர் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் பி.சண்முகம் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் பி.ஜெகவீரன், ஜி.மீனாட்சிசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனார். அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.செங்குட்டுவன், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.புஷ்பநாதன், எல்ஐசி ஊழியர் சங்கத்தின் கிளைச் செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட தோழமை சங்கத்தின் நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினர். மாநிலச் செயலாளர் குரு.சந்திரசேகரன் நிறைவுரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட துணைச்செயலாளர் எம். செல்லத்துரை, மின்வாரிய நல அமைப்பு ஜி.குமார், ரயில்வே ஓய்வூதியர் சங்கத்தின் ஆர். முருகப்பன் மற்றும் துறைவாரி சங்கத்தின் நிர்வாகிகள், ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர். திருச்சிராப்பள்ளி ஓய்வூதியர் அமைப்புகளின் கூட்டு மேடை சார்பில் வெள்ளிக்கிழமை திருச்சி தலைமை தபால் நிலையம் முதல் பிஎஸ்என்எல் அலுவலகம் வரை மனித சங்கிலி இயக்கம் நடைபெற்றது. மனித சங்கிலி இயக்கத்திற்கு ஏ.ஐ. பி.ஆர்.பி.ஏ ஒருங்கிணைப்பாளர் கோபால்சாமி, சங்க மாவட்டச் செயலாளர்கள் ஏ.ஐ. பி.ஆர்.பி.ஏ மருதநாயகம், ஏ.ஐ.பி. டி.பி.ஏ அஸ்லாம் பாஷா, டி.ஆர்.பி.யு. மனோகரன், ஐ.டி.பி.ஏ துரைராஜ், ஏ.ஐ.பி.எஸ்.என்.எல். பி.டபிள்யு. மில்டன், டி.என்.ஜி.பி.ஏ செந்தமிழ் செல்வன், டி.என்.ஆர்.டி.எம்.ஏ தியாகராஜன், டி.என். எஸ்.டி.சி.ஆர்.இ. டபிள்யூ.எ. சின்னசாமி, எஸ்.இ.டி.சி.பி டபுள்யு. ஏ ராமதாஸ், டி.என்.இ. பி.டபிள்யு. பஷீர், டி. பி.பி.ஓ. பன்னீர்செல்வம், காவல்துறை அமைச்சு பணியாளர்கள் ஓய்வூதியர் சங்க ரமணி ஆகியோர் தலைமையில், அனைத்து சங்கத்தைச் சேர்ந்த ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர். கரூர் கரூர் பேருந்து நிலையம் காமராஜர் சிலை முதல், வட்டாட்சியர் அலுவலகம் வரை மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு அகில இந்திய இன்சூரன்ஸ் ஓய்வூதியர் சங்கத்தின் தஞ்சை கோட்ட துணைத் தலைவர் வி.கணேசன் தலைமை வகித்தார். ஒன்றிய, மாநில அரசு பொதுத்துறை ஓய்வூதியர் சங்க அமைப்புகளின் ஒருங்கிணைப்பு குழு, கரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.சுப்பிரமணியம், டிஆர்இயு ரயில்வே ஓய்வூதியர் சங்கத் தலைவர் ஏ.சுப்பிரமணியன், தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கெ.சக்திவேல், ஊரக வளர்ச்சி ஓய்வூதியர் சங்க தலைவர் எல்.சுப்பிரமணியம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கரூர் மாவட்ட தலைவர் எம்.எஸ் அன்பழகன், பள்ளி கல்லூரி ஆசிரியர் நல ஓய்வூதியர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சி.கோபால், அஞ்சல் துறை ஓய்வூதியர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் விஸ்வநாதன், பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகி பாலசுப்பிரமணியன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.