பட்டுக்கோட்டை ஆசிரியைக்கு சிறந்த ஆசிரியருக்கான விருது
தஞ்சாவூர், ஜூலை 9- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ஆசிரியைக்கு, புதுச்சேரியில் நடைபெற்ற விழாவில் சிறந்த ஆசிரியருக்கான விருது வழங்கப்பட்டது. சென்னை தமிழ் நிலம் அறக்கட்டளை மற்றும் ஒளியிழை இதழ் இணைந்து, சிறந்த ஆசிரியருக்கான விருது வழங்கும் நிகழ்ச்சியை கடந்த ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரியில் நடத்தின. இதில், பல்வேறு தனித்திறமைகளே வெளிக்காட்டி, மாணவர்களின் நலனுக்காக உழைக்கும் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றும் 170 ஆசிரியர்களில், 25 பேர் தேர்வு செய்யப்பட்டு, புதுச்சேரி அரசு தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அவர்களுக்கு புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி விருதுகளை வழங்கினார். இதில், தமிழ் நிலம் அறக்கட்டளை தலைவர் ஜோ. சம்பத்குமார், ஒளியிழை ஆசிரியர் வெ. சுகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில், பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியை சு.சத்யாவுக்கும் சிறந்த ஆசிரியருக்கான விருது வழங்கப்பட்டது. விருது பெற்ற ஆசிரியர் சத்யாவை, பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் சக ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.