tamilnadu

img

பழைய ஓய்வூதியத் திட்டம்

“ஓய்வூதியம் என்பது வரவு-செலவு சம்பந்தப்பட்ட பிரச்சனை அல்ல. வாழ்நாள் முழுவதும் தனது உழைப்பை செலுத்திய ஊழியர்களுக்கு நிறுவனம் சட்டப்படி வழங்க வேண்டிய உரிமைத்தொகையே” 

----கே.ஆறுமுகநயினார், பொதுச் செயலாளர், தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு)

வெள்ளையர்கள் ஆண்டபோது 150 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் ஓய்வூதியத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. வெள்ளையர்கள் ஆட்சி நடத்த தேவைப்பட்ட இராணுவம், காவல்துறை, வருவாய்த்துறை ஆகியவற்றில் பணிபுரிந்த ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கினர். சுதந்திரம் பெற்று 27 ஆண்டுகள் கழித்து 1971 முதல் தான் அனைத்து ஒன்றிய அரசு ஊழியர்களும் ஓய்வூதியம் பெற முடிந்தது. தமிழகத்தில் 1978க்கு பின் தான் அரசு ஊழியர்கள் அனைவரும் ஓய்வூதியம் பெற்றனர். அதற்குபின் தான் மின்சாரம், போக்குவரத்து போன்ற தமிழக அரசின் பொதுத்துறை ஊழியர்கள் ஓய்வூதியம் பெற முடிந்தது. நீண்ட போராட்டங்கள் மூலமே ஓய்வூதியம் கிடைத்தது.

“ஓய்வூதியம் என்பது வரவு-செலவு சம்பந்தப்பட்ட பிரச்சனை அல்ல. வாழ்நாள் முழுவதும் தனது உழைப்பை செலுத்திய ஊழியர்களுக்கு நிறுவனம் சட்டப்படி வழங்க வேண்டிய உரிமைத்தொகையே” என உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியது. தன்னிடம்  பணிபுரிந்த ஊழியர்கள், நிறுவனத்திற்கு உழைப்பைச் செலுத்திய ஊழியர்கள் வயதான பின்பு அமைதியாக, கவுரவமாக வாழ்வதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். உலகின் பல நாடுகள் மூத்த குடிமக்களுக்கு ஓய்வூதி யம் வழங்கி வருகின்றன. இந்த அடிப்படையில்தான் தமிழகத்திலும்கூட OAP என்று சொல்கிற முதி யோர் பென்சனை அரசு வழங்கி வருகிறது. 

புதிய ஓய்வூதிய திட்டம்    

புதிய தாராளமயக் கொள்கை அமலான பின்பு, சமூக நலத்திட்டங்களுக்கு மூடு விழா நடத்த வேண்டும் என உலக வங்கியும், சர்வதேச நிதி நிறுவனமும் ஆலோ சனை வழங்கின.  நவீன விஞ்ஞான மருத்துவ வசதி காரணமாக ‘ஓய்வு பெறுபவர்கள் ஓய்வுக்கு பின் நீண்ட காலம் உயிர் வாழ்கின்றனர்; ஓய்வூதியம் கொடுத்தால் அரசுகள் திவால் ஆகிவிடும்; எனவே ஓய்வூதியம் வழங்கும் பொறுப்பை அரசுகள் ஏற்றுக் கொள்ளக் கூடாது என  உலக வங்கி கூறியது. உலக வங்கி கூறியவற்றை முன்மொழிந்துதான் முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் புதிய ஓய்வூதிய சட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். 1.1.2004க்கு பின்பு பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய ஓய்வூ திய திட்டத்தை வாஜ்பாய் தலைமையிலான பாஜக கூட்டணி அரசு 2003 ஆம் ஆண்டு அறிவித்தது. 2011ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இரண்டாவது அரசு  அதை சட்டமாக மாற்றியது. 2004க்கு பின் பணியில் சேர்ந்தோருக்கு புதிய ஓய்வூதிய திட்டம் என ஒன்றிய  அரசு அறிவித்தது. தமிழகத்தை ஆண்ட ஜெயலலிதா ஒருபடி மேலே சென்று 1.4.2003க்குப் பின் பணியில் சேரு வோருக்கு புதிய ஓய்வூதியம் என்று அறிவித்தார். ஆனால் இந்நடவடிக்கையை ஊழியர்கள் கடுமை யாக எதிர்த்து வந்தனர். இப்போது வரை அப் போராட்டம் தொடர்கிறது.

தமிழகத்தில்  புதிய ஓய்வூதியத் திட்டம்

புதிய ஓய்வூதியத் திட்டத்தை 1.4.2003 முதல் அம லாக்குவதாக அதிமுக அரசு அறிவித்தாலும், இதுவரை தமிழகத்தில் புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வரவில்லை. 2003 ஆம் ஆண்டு முதல் புதிய ஓய்வூதியம் என அறிவித்ததன் விளைவை 2004 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக அரசு அனுபவித்தது; படுதோல்வி அடைந்தது. எனவே புதிய ஓய்வூதிய சட்டப்படி ஓய்வூ திய ஒழுங்குமுறை ஆணையத்துடன் (PFRDA) தமிழக  அரசு ஊழியர்கள் இணைக்கப்படவில்லை. 2006இல் ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. ஊழியர்களின் போராட்டம் தொடர்ந்ததால் திமுக அரசும் எந்த முடிவும் எடுக்க வில்லை. 2011ல் அதிமுக புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிடுவதாக தேர்தல் வாக்குறுதி அளித்தது. ஆனால்  10 ஆண்டுகள் கமிட்டி போட்டே காலத்தைக் கடத்தியது. இந்த சூழ்நிலையில்தான் திமுக ஆட்சிக்கு வந்தால்  புதிய ஓய்வூதிய திட்டம் கைவிடப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. அனைத்து தரப்பு ஊழியர்களும் மிகப்பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் நிலை யில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலாக்குவது சாத்தியம் இல்லை என்ற நிதி அமைச்சரின் அறிவிப்பு  பெரும் அதிர்ச்சியையும், ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியையும் உருவாக்கியுள்ளது.

சமூக நல அரசின் நிதி அமைச்சர் கூறுவது நியாயமா?

சமூக நல அரசு எனக் கூறும் திமுக அரசின் நிதி அமைச்சர் ஓய்வூதியத்தை, மூத்த குடிமக்களின் வாழ்வாதாரத்தை வரவு-செலவு பிரச்சனையாக சுருக்கிப் பார்ப்பதில் நியாயம் இல்லை, ஏற்றுக்கொள்ளும் அடிப்படையிலும் இல்லை.  பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது சாத்தியமில்லை எனக் கூறியுள்ள நிதியமைச்சர் அர சின் வருமானம் பெரும்பகுதி ஊழியர்களின் சம்ப ளத்திற்கே செலவு செய்யப்படுகிறது என்றும் கூறி யுள்ளார். ஏற்கனவே இதே கருத்தை முன்பு ஜெய லலிதா கூறினார். அதற்கு பின் எடப்பாடி பழனிசாமியும் கூறினார். இப்போது நிதி அமைச்சர் கூறியுள்ளார்.  மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் பொதுமக்க ளுக்கு இது சரி என தோன்றும். ஆனால் உண்மை என்ன? உதாரணமாக, பள்ளிக்கல்வி துறைக்கு சுமார்  ரூபாய் 32 ஆயிரம் கோடி நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பெரும் பகுதி ஆசிரியர்  களின் ஊதியமாக வழங்கப்படுகிறது. இதை குறைக்க  வேண்டுமெனில் ஆசிரியர்களை நிறுத்திவிடலாமா? ஆசிரியர்கள் இல்லாவிட்டால் அரசுக்கு சம்பளச் செலவு இல்லை. வெறும் பள்ளிக்கட்டிடமும், கரும்பல கையும், புத்தகங்களும் மாணவர்களுக்கு கல்வியை போதிக்குமா? காவலர்கள் இல்லாமல் காவல் நிலை யம் என்ன செய்யும்? மருத்துவர்களும், செவிலியர் களும் இல்லாமல் மருத்துவமனை எப்படி செயல் படும்? இப்படி ஒவ்வொரு துறையின் செயல்பாடும் ஊழியர்களையும் உள்ளடக்கியதுதான். ஊழியர் களின் ஊதியத்தை மட்டும் தனித்துப் பார்ப்பது சரியான பார்வை இல்லை. மீண்டும் மீண்டும் ஆளும் அரசு களின் தலைவர்கள் இவ்வாறு பேசுவது அரசின் மீதான பலவீனத்தை மறைக்க சொல்லும் ஒரு காரணமாகும்.

பழைய ஓய்வூதியம் -  புதிய ஓய்வூதியம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்தினால் அரசுக்கு கூடுதல் செலவாகும் என்று கூறிய நிதியமைச்சர் அதற்கான ஒரு கணக்கையும் கூறியுள்ளார்.  

    பழைய ஓய்வூதியத் திட்டம் என்றால் ரூ.2 லட்சம்  செலவாகும்; புதிய ஓய்வூதியத் திட்டம் என்றால் ரூபாய் 50,000 செலவாகும் என்ற கணக்கு எதனடிப்படை யில் கூறப்பட்டது என நிதி அமைச்சர் தெளிவுபடுத்த வில்லை. இப்போது பணியில் உள்ள ஊழியருக்கு ஒரு வருடத்திற்கு அரசு செலுத்தும் பணத்தையும், 30 ஆண்டுகள் பணி செய்து ஓய்வூதியம் பெறும் பணத்தை யும் நிதி அமைச்சர் எப்படி ஒப்பிட முடியும்?  

இப்போது செலுத்தப்படும் 50 ஆயிரம் ரூபாய் 30 ஆண்டுகள் கழித்து எவ்வளவாக மாறும்? ஓய்வூதி யத்திட்டம் வருவதற்கு முன்பு அரசு பங்காக செலுத்திய பொது வைப்பு நிதியை நிறுத்திவிட்டுத்தானே ஓய்வூதி யம் வழங்கப்பட்டது. அரசு இனாமாக ஓய்வூதியம் தருவதுபோல் கூறுவது சரியா?

 பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்து வோம் என ராஜஸ்தான் மாநில அரசு கூறியது; ஆனால் ஓய்வூதிய ஒழுங்குமுறை ஆணையம் (PFRDA) இது வரை கட்டிய பணத்தை தர மறுக்கிறது என நிதிய மைச்சர் கூறியுள்ளார். தான் செலுத்திய பணத்தை  திருப்பிக் கேட்டால் தர முடியாது என PFRDA கூறு வதை சரி என நிதியமைச்சர் ஏற்றுக்கொள்கிறாரா?

தனது ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் கொள்கையை அறிவிக்க ஒரு மாநில அரசாங்கத்திற்கு அதிகாரம் இல்லை என PFRDA கூறுவதை ஏற்றுக்  கொள்ளலாமா?

மாநில சுயாட்சி, மாநில உரிமைகளை யெல்லாம் வலுவாக பேசும் தமிழக அரசின் நிதி யமைச்சர் அடிப்படைக் கொள்கைக்கு முரணான விஷயங்களை ஆதரிக்கலாமா? 

தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமலாக்க தடை இல்லை

தமிழக அரசு இதுவரை ஓய்வூதிய ஒழுங்குமுறை ஆணையத்துடன் தனது ஊழியர்களை இணைக்க வில்லை. ஆனால் ராஜஸ்தான் மாநில அரசு பல ஆண்டுகளுக்கு முன்பே PFRDAவில் பணத்தை செலுத்திவிட்டது. இங்கே, ஓய்வூதியத்திற்கான அரசின்  பங்கும், தொழிலாளர் பங்கும் இதுவரை தமிழக அரசு  வசம்தான் உள்ளது. எனவே, ராஜஸ்தான் அரசின் நிலையை தமிழ்நாட்டுடன் ஒப்பிடுவது சரியல்ல. போக்குவரத்து ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப் படும் பணத்தை PFRDA க்கு அனுப்பக்கூடாது என  சிஐடியு தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ளது. தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதற்கு நிதிப் பிரச்சனையை வேண்டுமானால் காரணமாக சொல்ல லாமே தவிர, ஓய்வூதிய ஒழுங்குமுறை ஆணை யத்தையோ, ஒன்றிய அரசையோ காரணமாக சொல்ல முடியாது.

1.4.2003க்குப் பின் பணியில் சேர்ந்தோருக்கு புதிய  ஓய்வூதியத் திட்டம் என அரசு அறிவித்துள்ளது. ஆனால்  உண்மை நிலை என்ன? அரசிலோ, போக்கு வரத்திலோ, மின்சாரத்திலோ 1.4.2003க்கு பின் பணி யில் சேர்ந்தவருக்கு எந்த ஓய்வூதியமும் இதுவரை  வழங்கப்படவில்லை. தமிழகத்தில் முதியோர் ஓய்வூதியம் ரூ. 1000 கிடைக்கிறது. ஆனால் 1.4.2003க்குப் பின் பணியில் சேர்ந்து ஓய்வுபெறும் அல்லது மரணம டைந்த ஊழியர்களின் குடும்பத்திற்கு ஒரு பைசா கூட ஓய்வூதியம் இல்லை. எதுவுமே கிடைக்காத ஓய்வூ தியத் திட்டத்திற்கு பெயர்தான் புதிய ஓய்வூதிய திட்டம். பல்லாண்டு காலம் பணிபுரிந்து அரசுக்கும், போக்கு வரத்து போன்ற அரசுத்துறை நிறுவனங்களுக்கும் தனது உழைப்பைச் செலுத்திய ஊழியர்களுக்கு ஓய்வூ தியம் மறுப்பது அநீதியானது. நிதியமைச்சரின் கூற்று  முற்றிலும் தவறானது. எல்லாவற்றிற்கும் முன்னுதார ணம் எனக் கூறும் தமிழக அரசு முதல்வரின் தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தி முன்னுதாரணமாக செயல்  பட வேண்டும்.

அமைச்சரின் அறிவிப்புகளும்-ஏமாற்றமும்

போக்குவரத்து மானியக் கோரிக்கை

கடந்த 5.5.2022 அன்று சட்டமன்றத்தில் போக்குவரத்து மானியக் கோரிக்கையை அமைச்சர் தாக்கல் செய்தார். மானியக் கோரிக்கையில்தான் துறை சம்பந்தமான அரசின் கொள்கை முடிவுகள் அறிவிக்கப்படும். அதன் அடிப்படையில் சில புதிய கொள்கை முடிவுகள் மானியக்கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கண்ணோட்டத்தில் போக்குவரத்து மானியக் கோரிக்கை

50 ஆண்டுகளில் திமுகவும், அதிமுகவும் மாறி மாறி ஆட்சிக்கு வந்துள்ளன. கடந்த 15 ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட மானியக் கோரிக்கைகளை ஒப்பிட்டு பார்த்தால் பெரும் வேறுபாடுகள் இருக்காது.  சில புள்ளி விபரங்கள், அந்த காலத்தில் ஏற்பட்ட சில  மாற்றங்கள் என்பது தவிர பெரிய அளவு மாற்றங்கள் இருக்காது. இவ்வாண்டு முன் வைக்கப்பட்டுள்ள மானியக்கோரிக்கையில் சில புதிய பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டுள்ளது. விபத்தைக் குறைக்க, சுற்றுச்  சூழலைப் பாதுகாக்க, போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த பொதுப்போக்குவரத்தின் அவசியம் பற்றி விரிவாக மானியக் கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள் ளது. புவி வெப்பமயமாதலைத் தடுக்க மாற்று எரி பொருளை பயன்படுத்த வேண்டும் என்பதும் வலி யுறுத்தப்பட்டுள்ளது. பொதுப்போக்குவரத்தை மேம்படுத்துவதன் அவசியம் பற்றி கடந்த 21.4.2022 அன்று சிஐடியு ஒரு ஆய்வரங்கத்தை நடத்தியது. அந்த  ஆய்வரங்கத்தில் முன்மொழியப்பட்ட பல ஆலோ சனைகள் கொள்கைவிளக்க குறிப்பில் விவாதிக்கப் பட்டுள்ளது வரவேற்புக்குரியது.

கொள்கையை நடைமுறைப்படுத்த வழி என்ன?

வரவேற்கத்தக்க சிறப்பான திட்டங்களைப் பற்றிக்  கூறியுள்ள கொள்கை விளக்க குறிப்பு அதை நடை முறைப்படுத்த உரிய வழிகாட்டுதலை செய்ய வில்லை. அதற்கு மாறாக பழைய பாணியிலான திட்டங்களையே அறிவித்துள்ளது. சுற்றுச்சூழல் அபாயம் அதிகரித்துள்ள நிலையில், பொதுப் போக்கு வரத்தை மேம்படுத்தும் நடவடிக்கையில் அரசுகள் ஈடு பட வேண்டும் என உலக வங்கி, சர்வதேச நிதி நிறு வனம், உள்ளிட்ட அமைப்புகளும், பல நிபுணர்களும் வலியுறுத்துகின்றனர். பொதுப்போக்குவரத்தில் செலவு செய்யப்படும் ஒவ்வொரு டாலரும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 டாலரை ஈட்டித்தரும் என  உலக பொருளாதார மன்றம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் தெளிவுபடுத்தியுள்ளன.  மாணவர்கள் இலவசப் பயணம், கிராமப் புறங்களுக்கு தடையற்ற போக்குவரத்து சேவை போன்றவை தமிழகத்தின் சமூக, பொருளாதார வாழ்வில் மிகப்பெரிய பங்கைச் செலுத்தியுள்ளன. தற்போது பெண்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள இல வசப் பயணமும் பொருளாதார வளர்ச்சிக்கு சிறப்பான பங்களிப்பைச் செய்யும். தமிழகம் மட்டுமின்றி உலகில் 10க்கும் மேற்பட்ட நாடுகளில் பொதுப் போக்குவரத்தில் இலவசப் பயணம் அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுப்போக்குவரத்தில் அதிக முதலீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. பெண்கள், மாணவர்கள் இலவச பயணத்திற்காக அரசு கொடுக்க வேண்டிய பணத்தை மானியம் என தவறாக சித்தரித்து நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. மானியக்கோரிக்கையும் அதையே வழிமொழிகிறது. கொடுக்க வேண்டிய பணத்தை மானியம் என அறிவித்து, அரசு தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்கிறது. போக்குவரத்துக் கழகங்க ளையும் ஏமாற்றுகிறது. இதனால் பாதிக்கப்படுவது போக்குவரத்துக் கழகங்களும், பணிபுரியும் தொழி லாளர்களும்தான்.     

போக்குவரத்துக் கழகங்களுக்கு சுமார் ரூபாய் 38,000 கோடி கடன் உள்ளது. இதில் ரூபாய் 12,000 கோடி, தொழிலாளர்களின் பணம். 100 ரூபாய் வருமானத்தில் 13 ரூபாய் வட்டியாக செலுத்தப்படுகிறது. இதற்கு தீர்வு காணாமல் பொதுப்போக்குவரத்தை கழகங்கள்  எப்படி மேம்படுத்த முடியும்? நஷ்டம் வரும் என்று தெரிந்தே இயக்கப்படும் 10,000 நகர்ப்புற வழித்தடங் கள், மலைவழித்தடங்களில் ஏற்படும் இழப்பை ஈடு கட்ட அரசு வரவுக்கும், செலவுக்குமான வித்தியாசத் தொகையை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பற்றிய அரசின் நிலை என்ன?  போக்குவரத்து கழகங்களை மேம்படுத்த திமுக சார்பில் அதிமுக அரசுக்கு எழுத்துப்பூர்வமான ஆலோ சனை 2018ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. வரவுக்கும், செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசு,  போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்க வேண்டும்  என்பது முக்கியமான ஆலோசனை. இதைப்பற்றி யெல்லாம் மானியக் கோரிக்கையில் எதுவும் குறிப்பி டப்படவில்லை.

ஏற்றுக் கொள்ள முடியாத அறிவிப்புகள்

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க, மாற்று எரி பொருளைப் பயன்படுத்துவோம் எனக் கூறிவிட்டு,  ஜெர்மன் வங்கி உதவியுடன் மீண்டும் 2000 டீசல்  பேருந்துகள் வாங்க உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் தில்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் அழுத்தப்பட்ட எரிவாயு (CNG) மூலம் இயக்கப்படும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மராட்டிய மாநிலம் புனேவில் இயக்கப்படும் நகர்ப்புற பேருந்து களில் 70 சதவீதம் CNG மூலமே இயக்கப்படுகிறது. மீண்டும் தமிழகத்தில் டீசல் பேருந்துகள் வாங்கு வது கழகங்களை மேலும் பாதிப்புக்கு உள்ளாக்கும். ஒரு கிலோ அழுத்தப்பட்ட எரிவாயு 1.5 லிட்டர் டீசலுக்கு சமம். எரிவாயு விலை 1 கிலோ ரூ. 53/- மட்டும். 1.5 லிட்டர் டீசலின் விலை ரூ. 160/-. எனவே டீசல் இன்ஜின் வாங்குவது தவறு என வல்லுனர்கள் கூறு கின்றனர். இப்போதுள்ள டீசல் இன்ஜினை எரிவாயு  பயன்படுத்தும் அடிப்படையில் மாற்றம் செய்ய சுமார் 4 லட்சம் ரூபாய் செலவாகும். அச்செலவை கூடிய விரைவில் ஈடுசெய்துவிடலாம் என்பதெல்லாம் வல்லு னர்களின் கூற்று. ஆனால் இதைப் பற்றியெல்லாம் சிந்தித்து செயல்படுத்தாமல் எப்படி போக்குவரத்து கழகங்களை மேம்படுத்த முடியும்? ஐடிடிபி (ITDP) என்ற நிறுவனம் அரசுக்கு ஆலோ சனை வழங்குவதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி யில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பொதுப்போக்கு வரத்து துறையில் அனுபவம் உள்ள நிறுவனம் என்ப தற்கு எவ்வித தரவுகளும் இல்லை. தவறுமேல் தவறு செய்து கழகங்களை பாதிக்கும் நடவடிக்கைகளை அரசு செய்யக் கூடாது. உரிய தொழில்நுட்ப ஆலோ சனையைப் பெற்று மாற்று எரிபொருளுக்கும் செல்ல வேண்டும்.

தனியார்மயம் ஆபத்தானது

பேருந்து இயக்குவது, பராமரிப்பு, ஓட்டுனர் அனைத்தையும் தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டம் (GCC) அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துக் கழக வழித்தடங்களில் தனியாரை அனுமதிப்பது என்ற முடிவை அதிமுக அரசு எடுத்தது. இதற்கென மோட்டார் வாகனச் சட்டவிதிகளில் 288 (A) என்ற புதிய விதியை  உருவாக்க நடவடிக்கை எடுத்தது. சிஐடியு, எல்பிஎப் உள்ளிட்ட அனைத்து சங்கங்க ளும் இம்முடிவை கடுமையாக எதிர்த்தன. திராவிட முன்னேற்றக் கழகமும் எதிர்த்தது. அரசு வெளியிட்ட அறிவிக்கைக்கு 10,000க்கும் மேற்பட்ட ஆட்சேபனைக் கடிதங்களை தொழிலாளர்கள் அனுப்பினர். இதன் காரணமாக அதிமுக அரசால் மோட்டார் வாகன விதி திருத்தம் 288 (A)ஐ உருவாக்க முடியவில்லை. இப்போது அதிமுக அரசு செய்த அதே தவறான நடவடிக்கைகளை திமுக அரசு செய்யலாமா? 50 ஆண்டுகளுக்கு முன்பு கலைஞர் தனியார் போக்கு வரத்து துறையை அரசுடமையாக்கினார். அந்த சாத னையை தற்போதைய திமுக அரசே கைவிடலாமா? இப்போது புறநகர் பேருந்துகள், நீண்ட தூரம் இயங்கும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்  மட்டுமே ஓரளவு வருவாய் ஈட்டுகின்றன. இந்த வழித்  தடங்களில் தனியாரைப் புகுத்துவது மேலும் கழ கங்களை சீர்குலைக்கவே செய்திடும். நிகரசெலவு ஒப்பந்த மாதிரி (GCC) என்ற பெயரால் தனியார்மய மாக்கும் அரசின் முயற்சியை அனுமதிக்கவே முடி யாது.

ஊழியர் பிரச்சனைகளுக்கும்  தீர்வு இல்லை

கொள்கை அறிவிப்பில் ஊழியர் பிரச்சனை களுக்கும் தீர்வு இல்லை. பணி ஓய்வு பெற்ற 85000 ஊழியர்கள் பல ஆண்டுகளாக, அகவிலைப்படி மறுக்கப்பட்டு ஒரே ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். ஊழியர்களுக்கு பல சட்டப்பூர்வ பலன்கள் மறுக்கப்படு கிறது. அதிகாரிகள் சட்டம், ஒப்பந்தம் அனைத்தை யும் காலில் போட்டு மிதிக்கின்றனர். ஊழியர்கள் மத்தி யில் கடும் அதிருப்தி நிலவி வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்தால் தங்களது அவலங்கள் தீரும் என்ற நம்பிக்கை கேள்விக்குறியாக மாறி வரு கிறது. எனவே அரசு கழகங்களை மேம்படுத்தவும், ஊழி யர்கள் நலன் காக்கவும் சரியான திட்டங்களை வகுக்க வேண்டும்.     இந்தியாவில் பொதுப்போக்குவரத்திற்கு முன்மாதிரியாக செயல்படும் போக்குவரத்து கழ கங்களை மேம்படுத்தவும், ஊழியர் நலன் காக்கவும் அரசு முன்வர வேண்டும்.