அரசுப் பள்ளி வளாகங்களை மேம்படுத்த நடவடிக்கை: அமைச்சர்
புதுக்கோட்டை, ஜூலை 3- அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மேற்கொள்ள வேண்டிய தேவைகள் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், அரசுப் பள்ளி வளாகங்கள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார். புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற தலைமை ஆசிரியர்களுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர், செய்தியாளர்களிடம், ஒவ்வொரு முறை தலைமை ஆசிரியர்கள் மற்றும் கல்வித் துறை அலுவலர்களுடன் கலந்துரையாடும்போது, தங்கள் பகுதியில் உள்ள பின்னடைவு குறித்து ஒப்புக்கொள்கிறார்கள், அதனைச் சரி செய்துவிடுவோம் என நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ரூ.7.500 கோடி வரை ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதில் 8 ஆயிரம் பணிகள் ரூ.5 ஆயிரம் கோடியில் செய்து முடிக்கப்பட்டுள்ளன. இப்போதும், ஒவ்வொரு பள்ளிக்கும் தேவையான கட்டடங்கள், கழிப்பறைகள், சுற்றுச்சுவர் குறித்தும் தகவல்களைத் திரட்டி படிப்படியாக செய்து முடிக்க இருக்கிறோம். நபார்டு மற்றும் வளர்ச்சித் துறை மூலம் ஒதுக்கீடு செய்யப்படும் நிதிகளையும் பயன்படுத்தி பள்ளி வளாகங்களை மேம்படுத்துவோம். மாநிலப் பள்ளிக் கல்வித் துறைக்கு தற்போதும் ரூ.1800 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக ஒன்றிய அரசு கூறிவிட்டு, பிறகு ஒன்றிய அரசின் கொள்கைகளில் கையொப்பமிடச் சொல்கிறார்கள். வரும் ஜூலை 7 ஆம் தேதி முதல்வர் தலைமையில் நடைபெறவுள்ள பள்ளிக் கல்வித் துறையின் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்றார்.